மிஞ்சிய சோறுக்கு பூனைச் சண்டை.
குஞ்சரங்கள் கோடு போட்டு வரிசையில்
நடப்பதைப் போலே வானில் திட்டுதிட்டாய்
பஞ்சுப் பொதியாய் கார் மேகக் கூட்டம்
தஞ்சமென அதில் ஒளிந்த நிலவுக் கன்னி
தளிர் நடையில் ஒவ்வொன்றையும் தாண்டி
அஞ்சுதற்கு நானென்ன அபலைப் பெண்ணா
என்பதுபோல் தன்பணியில் தவழ்ந்து நிற்பாள்;
கெஞ்சித் தம் மகளுக்கு சோறு ஊட்டும்
தாயவளும் இதைக் காட்டி ரசித்து நிற்பாள்;
பிஞ்சு அது வேண்டாமென கையைத் தள்ள
கஞ்ச மகள் கைச்சோறு சிதறிவீச
மிஞ்சிய அச்சோற்றுக்கு பூனைச் சண்டை.