குழந்தைக் காலங்கள்....

ஏழு கடல்...
ஏழு மலை..
ஏழு நதி...தாண்டி...
பெரும் காட்டில்....
ஒரு கூட்டிற்குள் வசிக்கும்...
கிளிக்குள் ஒளிந்திருக்கும்...
இளவரசியின் உயிர் குறித்த
கவலையோடு...
உறங்குகிறான் குழந்தை.
எனக்கும் கவலையாய் இருக்கிறது...
வாழ்வின் மீதான சுமைகள் சேர்கையில்...
குழந்தை இதிலிருந்தெல்லாம் விடுபட்டுத்
தவிப்பானே என!
**********************************************************************
படக்கதையில்...
குழந்தை பார்த்து இரசித்த...
புலி, யானை, மயிலிடம்...
தான் படித்த கதையை...
இரவில் உறங்கியபடியே...
மொழியற்று...
புன்னகையால் பேசிச் சிரிக்கிறான்
குழந்தை.
அவன் என்ன பேசியிருப்பான்...
என நினைத்தபடியே...
நானும் சிரிக்கிறேன்....
உண்மையான மனம் நெகிழ்ந்த
ஒரு சிரிப்பை.
*********************************************************************
வருடங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
வளர்ந்து கொண்டே இருப்பதாய்
பேசிக் கொண்டே இருக்கிறோம்.
புஷ்பக விமானங்கள்...காலத்திலிருந்து...
ஏவுகணைகள் காலத்திற்கு வந்துவிட்டோம்.
பூமியைத் தாண்டி...
நிலவிலும்...செவ்வாயிலும்...
மனிதர்கள் வசிப்பதைப் பேசிக்கொண்டே இருக்கிறோம்.

என்றாலும்....
நாம் அறியாமலே
திருடு போய்க் கொண்டிருக்கிறது....
நாம் இரசித்த குழந்தைக்காலங்கள்...
நம் குழந்தைகளின் காலங்களில்.

எழுதியவர் : rameshalam (29-Dec-12, 11:56 am)
பார்வை : 138

மேலே