புத்தாண்டே நீ தரவேண்டும் !

உறவுகளை இணைக்கின்ற பாலம் என்றே
உயர்வாக எண்ணுகின்ற மனமே வேண்டும் !
திறவு கோலாய் செயல்களைத்தான் செய்து வைத்தே
திசையெங்கும் மனித உறவு பூக்க வேண்டும் !
மறமென்று பேசிவைககும் பாதை விட்டே
மனிதமென்று சொல்தொடுக்கும் காட்சி வேண்டும் !
அறம்சார்ந்த செயல்களைத்தான் செய்து வைத்தே ,
அணிசேர்க்கும் மனிதநெஞ்சம் கூட வேண்டும் !
ஆளுமையால் உயர்ந்துநிற்கும் தோற்றம் வேண்டும்
அடிமைசெயும் மனிதமனம் இங்கு வேண்டாம் ;
தோளுயர்த்தி தோழமைக்கு அழைப்பு வேண்டும் !
தொடரவரும் பயமெதையும் விதைக்க வேண்டாம்
நீளுகின்ற பாதையெங்கும் அன்பே வேண்டும் !
நெஞ்சமதில் நிறைத்துவைக்கும்வஞ்சம்வேண்டாம்
வாளேந்தி வாழுகின்ற வாழ்க்கை வேண்டும் !
வைத்தெரிச்சல் கொண்டிங்கு வாழ வேண்டாம்;

எண்ணமதில் ஏற்றங்கள் இருக்க வேண்டும் !
எழிலார்ந்த சிந்தனையே என்றும் வேண்டும் !
வண்ணமது சேர்க்கின்ற வசந்தம் வேண்டும் !
வழியெங்கும் வண்ணத்தமிழ் கொஞ்ச வேண்டும் !
விண்ணளக்கும் பார்வைத்தான்விழியில்வேண்டும்
விஞ்சானம் பெருக்கிவைக்கும் விசயம் வேண்டும் !
எண் அளந்து உயர்ந்தாலும் ஈரம் வேண்டும் !
என்றும் நாம் மனிதராக இருக்க வேண்டும் !

எழுதியவர் : ந, ஜெயபாலன்,நெல்லை நகர் (2-Jan-13, 9:46 pm)
பார்வை : 97

மேலே