கவிஞனின் எழுத்தில்.....!

அழுக்கும்
அழகாகத் தெரியும்
அவனது கண்பார்வையில்
அதற்கும் மேல் நீளும் ரசனையில் ,

உணர்வுகளும்
உரத்த குரல் எழுப்பும்
உள்ளார்ந்த சிந்தனைகளில்
உரமேறிய சொற் கோர்வையில் ,

பாடுபொருள்கள்
பாவனைகள் கொள்ளும்
பார்த்திராத வரிகள் அமைவில்
பாந்தமான நடையின் நேர்த்தியில் ,

உவமைகளும்
உருவங்களும் உறவாகும்
உதாரணமாகும் தருணங்களில்
உகந்த சில உள்கட்டமைப்புகளில் ,

தீர்வுகள்
தீமையை உடைக்கும்
தீர்க்கமான திறனமைவில்
தீராத தாகங்களின் தேடலில் ,

இயற்கை
இனிய தோழமையாகும்
இயல்பான நடைமுறைகளில்
இலக்கிய செறிவின் இனிமையில் ,

நிழல்கள்
நிஜமாகும் சக்தி
கவிஞனின் எழுத்தில்
கற்பனைகளின் வீரியத்தில்...!!!

எழுதியவர் : புலமி (3-Jan-13, 9:50 pm)
பார்வை : 164

மேலே