திருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்!'' இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழுக்காக தமிழர் அல்லாத ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்திக்கு ஆதரவாகவும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நாளும் விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஒரு வடநாட்டு எம்.பி எழுந்து, ''வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்'' என்று சொன்னதோடு, ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் மலைக்க வைக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில்தான் இந்த அதிசயம் நடந்தது. அந்த எம்.பி-யின் பெயர், தருண் விஜய். பஞ்சாபியான இவர், இப்போது இருப்பது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில். தருண் விஜய் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு முன்பு, 20 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்தி ஏடான பஞ்ச ஜன்யாவில் பணியாற்றி ஆசிரியராகவும் இருந்தவர். இவருக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி, தானே கையெழுத்திட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறளை அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தித்தோம்... ''தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளீர்களே... என்ன காரணம்?'' ''தமிழ் மொழியின் மீதுள்ள அளவில்லாத பற்று காரணமாகத்தான் நான் அப்படிப் பேசினேன். நம்முடைய வரலாற்றில் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்துக்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசர்கள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறள் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் முதன்முதலாக கொடிபிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து, நமது நாகரிகம், கலாசாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்று வேறு யாரும் சாதிக்கவில்லை. ஆனால், இந்த முத்திரையை பதித்த சோழ, பாண்டிய அரசர்களைப் பற்றி இந்திய பள்ளிகளின் பாட புத்தகங்களில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்படவில்லை.'' ''அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?'' ''காரணம், டெல்லியை ஆண்டவர்கள் ஆணவம் மிக்கவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருந்தனர். உபநிடதங்களும் ராமாயணமும் சொல்லுவதே சரி என்று இருந்துவிட்டார்கள். ஆனால், திருக்குறள் என்ன சொல்லுகிறது என்பதை எந்த வட இந்தியராவது அறிந்திருப்பாரா? இல்லை. இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கெடுதி விளைவித்து வருகிறோம் என்பது எங்களிடையே இருக்கும் கவலைக்குரிய விஷயம். ஏன் எங்கள் மொழியான இந்திக்கும்தான். இந்தி மொழி என்பது கங்கை மாதிரி. அது எளிமையாக விரிந்து பாய வேண்டும். அன்பு செலுத்த, இரக்கம் காட்ட, ஏன் நட்பு கொண்டாட பயன்பட வேண்டும். ஆனால், அதை அரசு இயந்திரத்தை வைத்து பயணிக்கக் கூடாது. உத்தரவின் மூலமாகவோ சட்டத்தைப் போட்டு கட்டுப்படுத்தக் கூடாது.'' ''மொழி தொடர்பாக உங்களது கோரிக்கைகள் என்னென்ன?'' ''ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது. தமிழையும் மற்ற தென்னிந்திய மொழிகளையும் வட இந்திய பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஒருமைப்பாடு வளரும்.'' ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறீர்கள். இது உங்கள் கருத்தா? கட்சியின் கருத்தா?'' ''இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை இத்தோடு விட்டுவிடாமல், ஆட்சியில் இருப்பவர்களிடமும் எங்கள் கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்துவேன். கட்சித் தலைவர் அமீத் ஷாவையும் சந்தித்து இதுகுறித்து பேசுவேன். என்னுடைய மொழியான சமஸ்கிருதம் மற்றும் இந்தி மீது முழு மரியாதை உண்டு. ஆனால், நம் நாடாளுமன்ற சுவர்கள், மைய மண்டபங்கள், தூண்கள், கதவுகளில்கூட சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் ஒரு கல்வெட்டுகூட இல்லை. மகாராஷ்டிராவில் சிவாஜி பெயர் மட்டும்தான் இருக்கும். எங்கேயாவது ராஜராஜ சோழன் பெயர் இருக்கிறதா? ஆனால், தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு சிவாஜி என்று பெயர் வைக்க தவறுவது இல்லை. ஏன் ஒரு சிறந்த நடிகர் வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகவே வலம்வந்தார். நமக்குள்ள இடைவெளியை போக்க ஒரு பாலம் அமைக்க திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறேன். உலகிலேயே இந்தியாதான் உச்சத்தில் இருக்க வேண்டும் என்கிற பெருமை எல்லாம் கொண்டாடும்போது, 'இந்தி பெல்ட்’தான் இந்தியா என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.'' ''தமிழை வட இந்தியர்கள் படித்தால், தென்னிந்தியர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பீர்களா?'' ''நீங்கள் என்னுடைய மொழியை தெற்கே அறிமுகப்படுத்த விரும்பினால், அது உங்களுடைய விருப்பம். இதில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தால், அது முழுமையாக தோல்வியைத்தான் கொடுக்கும். என்னுடைய நோக்கம் வட இந்தியர்கள் தென்னியந்திய மொழிகளை அறிய வேண்டும் என்பதுதான். சமகாலத்தில் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்துக்கும் மீனவர்கள் பிரச்னைக்கும் வட இந்தியர்கள் எத்தனை பேர் வருத்தப்பட்டார்கள்? ஆனால், காஷ்மீர் பிரச்னை என்றாலும் சரி, என்னுடைய மாநிலத்தில் உள்ள பிரச்னை என்றாலும் சரி, தெற்கே எப்படியெல்லாம் மனிதாபமானத்துக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன். இந்தப் பிரிவினை சுவரை இடித்துத் தள்ள வேண்டும். இதுதான் என்னுடைய தமிழ் பற்றின் நோக்கம்.'' - சரோஜ் கண்பத்
வழி : VIBA கருத்துகள் : 0 பார்வைகள் : 2458
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]