எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு சில வசதிக்காகத்தான் ‘குறியீடு’கள் தோற்றுவிக்கப்படுகின்றன. பெயர்கள் -...

ஒரு சில வசதிக்காகத்தான் ‘குறியீடு’கள் தோற்றுவிக்கப்படுகின்றன. பெயர்கள் - மனிதர்க்கு, இடத்திற்கு, பொருள்களுக்கு ஆகிய பெயர்கள், எண்கள், தேதி ஆகிய அனைத்துமே இவ்வகை குறியீடுகள்தான். அறிவியல் நோக்கில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே எலக்ட்ரா - புரோட்டான் - நியூட்ரான் ஆகியவற்றின் பற்பல கலவைகளான அணுக்களினால் அமைந்ததே. இவ்வணுக்கள் நூற்றுக்குச் சற்று அதிகமாக நம்மால் கண்டறியப்பட்டுள்ளன (காண்க: Periodic Table) இவற்றின் கலவையே இந்தப் பிரபஞ்சம். இவ்வணுக்களின் பண்பு அவற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினால் நிர்னயிக்கப்படுகிறது. இவ்வணுக்களை அடையாளப்படுத்த அவற்றின் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே போதும், இவ்வகையில் இவற்றை 1, 2, 3... என்று அடையாளப்படுத்தினால் அறிவியலுக்குப் போதுமானது! ஆனால், வரலாற்றில் இவற்றிற்குப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது (1- ஹைட்ரஜன், 2 - ஹீலியம், 3 - லித்தியம் இப்படி...) எண்களைவிட நமக்கு இந்தப் பெயர்களே மிகவும் பிடித்திருக்கிறது, விஞ்ஞானிகளுக்குமே!

இது பொதுவாகவே ஒரு மனித இயல்பு எனலாம் போல... குறியீடுகளை அவற்றின் பயன் தாண்டி விரும்புவது... நம் எல்லோருக்குமே நமது பெயர் பிடிக்கும்தானே? (என் மாணவர்களை நான் அவர்களின் ‘ரோல் நம்பர்’ சொல்லி அழைப்பதே கிடையாது, அப்படிச் செய்வதை ஒரு அவமானமாகவே நான் கருதுகிறேன்! பெயர் சொல்லி அழைக்கும்பொழுது அவர்களுக்கு நம்மீதான மரியாதையும் அன்னோனியமும் கூடுகிறது...)

இப்படித்தான் எண்களிலும் முழுவெண்கள் (என்று நாம் கருதும்!) மீது நமக்குப் பிரியம் அதிகம்... என்னத்தான் ஒரு பேட்ஸ்மேன் 99 அடித்தாலும் அவன் ‘100’ அடித்தால்தான் நாம் அவனைக் கொண்டாடுகிறோம்... 99-ஐவிட 100 அப்படியென்ன சிறந்தது? எல்லாம் நம் மனப்பான்மையின் விளைவே...

இதே வகையில்தான் புத்தாண்டு கொண்டாட்டமும் சேர்கிறது!

ஆண்டு முழுவதும் நமக்கு ஒன்றே... நல்லதைச் செய்வதற்கு எல்லா நாளும், எல்லா பொழுதும், ஏன் ஒவ்வொரு நொடியும் சிறந்த நேரமே... ஏனோ புத்தாண்டு என்ற குறியீட்டில், காலண்டர் மாறுகிறது என்பதில் ஒரு தனி விருப்பம் நமக்கு... மனித இயல்பு!

எல்லாம் சரி, இந்த தனி விருப்பங்கள் நல்ல முறையில் அமைந்தால் மகிழ்ச்சிதான். கோயிலுக்குப் போகிறேன், ஒரு ஏழைக்கேனும் உதவுகிறேன், ஒரு ஏழை மாணவனுக்குக் கல்வி செலவுக்குப் பணக் தருகிறேன், ஒரு நோயாளிக்கு உதவுகிறேன், இன்றிலிருந்து இந்த ஒரு நல்ல பழக்கத்தை (பொய்யே சொல்லமாட்டேன்?) ஏற்று வழாது கடைப்பிடிக்கிறேன்... இப்படி எல்லாம் பழகினால் சிறப்புதானே?

நண்பர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு டாஸ்மாக்-கில் தவமிருப்பேன், குடிக்காத நண்பனையும் குடிக்க வைத்து கெடுப்பேன், நள்ளிரவில் பட்டாசு வெடித்து உடம்புக்கு முடியாதவர்களின் தூக்கத்தைக் கெடுப்பேன், ஒன்றுக்குமே உதவாத பொருட்களை விலைகொடுத்து வாங்கி பரிசளிப்பேன் - இப்படி ஏன் செய்ய வேண்டும்?

/தீதும் நன்றும் பிறர் தர வாரா/ என்றார் ஒரு தமிழர்... இதை நாம் நிறையவே மறந்துவிடுகிறோம் (’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தெரியுமல்லவா? அதே பாடலில் அதற்கு அடுத்த அடிதான் இது! என்னைக் கேட்டால் முதல் அடியை உலகிற்கு பிரபலபடுத்தியது போல, இந்த இரண்டாம் அடியை நமக்கு நாமே பிரபலபடுத்திக்கொள்ள வேண்டும்!)

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

நாள் : 1-Jan-15, 11:40 am

மேலே