பன்னாடையாய் இருப்பதில்லை என்வீட்டு வாசல்... எவரும் வருகிறார்கள் எப்போதும்...
பன்னாடையாய்
இருப்பதில்லை என்வீட்டு வாசல்...
எவரும் வருகிறார்கள்
எப்போதும் வருகிறார்கள்
அவர் இவர் பற்றியே
அளந்து போகிறார்கள்...!
பிறர் மீதான
குறைகளை என் வீட்டுத்தரை மீது
கோபுரமாக்குவார்கள்...
- என் மீதானவைகளும்
மற்றுமொருவர் வீட்டில் இருக்கும்.......!
என் மீதான கரிசனங்களை
எள் விழும் இடம் இன்றி
கொட்டித் தீர்ப்பார்கள்...!!!
என் வீட்டில்!
அன்றியும்
என் தவறுகள் என நீள்பட்டியல்
மற்றுமொருவர் வீட்டுச் சுவறில்
பதிந்து கொண்டிருப்பர்!
ஆனாலும்
என் வீட்டு வாசல்
பன்னாடையாய் இருப்பதில்லை...!!
தினம் தினம் வந்து கூவும்
மைனாக்கள், கிளிகள்,
தாவும் அணில்கள்...
என் வாசல் வழியே வருவதில்லை
களைப்பின்றி பறந்து வரும்
களைப்பின்றி
பொழுதுகளை என்னோடு கழித்து
களிப்பாய் மீண்டும் வரும்
மற்றொரு நாள்.....!!!!
தேனீர், சிற்றுணவு, குளிர்பானம்
எதுவும் நான் அளித்தது இல்லை...!
மாறாய்
என் முகம் பார்க்கும் அவை
சன்னல் கண்ணாடியின்
மறுபக்கத்தில் இருந்து...
சமயங்களில் சிரித்ததும் உண்டு...!!!!
சே, இத்தனைக் காலம்
உபசரிக்கவே இல்லையே அவைகளை...!
இதோ
கிளி ஒன்று சிறிய பழத்துண்டை
எனது சன்னலோரம் விட்டுச் சென்றது...!
காகம் விட்டு சென்ற தேங்காய் மூடி அருகில்....
எனக்காகவா???????