எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நரேந்திர மோடியை மிரட்டிய உ.பி. காங். வேட்பாளர் கைது...

நரேந்திர மோடியை மிரட்டிய உ.பி. காங். வேட்பாளர் கைது

சஹரன்பூர்: பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இம்ரான் மசூத். இவர் சமாஜ்வாடி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு வந்தவர். இவர் அண்மையில் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, குஜராத் போல் உ.பி.யில் மோடி நடந்து கொண்டால் அவரை துண்டு துண்டாக வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வீடியோவாக பரபரப்பாக ஒளிபரப்பானது. இதற்கு பாஜ மட்டும் அல்லாது காங்கிரஸ் தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் மசூதின் ஆவேச பேச்சு அடங்கிய சிடி போலீசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மோடி குறித்து தான் அவ்வாறு பேசவில்லை எனவும், அவருக்கு பாடம் கற்பிப்பேன் என்று தான் பேசியதாகவும் இம்ரான் மசூத் தெரிவித்துள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இம்ரான் மசூத் மீது போலீசார் நேற்று எப்ஐஆர் பதிவு செய்தனர். நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். உ.பி.மாநிலம் பிலிபித் தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலின் போது இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களின் கையை வெட்டுவேன் என வருண்காந்தி பேசினார்.

இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த வழக்கிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டதை அடுத்து உத்தரபிரதேசம் சஹரன்பூரில் திட்டமிடப் பட்டிருந்த ராகுல்காந்தி பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாள் : 29-Mar-14, 8:18 pm

மேலே