எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மார்கழிப் பூக்கள் மலர் : நான்கு திரு மாணிக்க...

மார்கழிப் பூக்கள் 


மலர்   :  நான்கு 

திரு மாணிக்க வாசகர் அருளியுள்ள  திருவெம்பாவை :   பாடல் : 4  

ஒள்நித்  திலநகையாய் ... எனத் தொடங்கும் பாடல் இது.

நம் இல்லத்தில் நாம் ஏற்றும் தீபத்திற்கு ஆதியும் உண்டு; அந்தமும் உண்டு.  சூர்ய, சந்திர, அக்னிகளுக்கும் சர்வ பிரளய காலத்தில் ஆதியும் உண்டு, அந்தமும் உண்டு.  ஆனால் இறைவனோ ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியாக விளங்குகிறான்.  அவனைப்  பாடி பாவை நோன்பு நோற்பதற்குப் பெண்டிர் பலர் கூடி ஒவ்வொரு இல்லத்திலும் சென்று,  உறங்குபவர்களை எழுப்புவார்கள். இன்னொரு வீட்டுக்கு சென்ற போது ஒரு தோழி,  கண் திறவாமல் சிரித்துக்கொண்டு இருக்கின்றாள். "ஒள்நித்  திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ? " "கண்ணை மூடி கொண்டிருக்கிறாயே ,  இன்னும் விடியவில்லையா?" எனக் கேட்கிறார்கள் . சில சமயங்களில் கண்காட்சி ஒன்றுக்கு தெருவில் உள்ளவர்கள் சேர்ந்து போவார்கள். ஒருத்தியை அழைத்தால்  அவள் கேட்பாள்:  " எல்லோரும் வந்து விட்டார்களா?" என்று. அதாவது அனைவரும் அங்கு வந்த பிற்பாடு அவர்களோடு நானும் வருகிறேனே என்ற அர்த்தத்தில் கூறுவார்கள். 

அது போல உறங்குவது போல் மயக்க நிலையில் சிரித்துக்கொண்டிருந்தவள் : " அழகிய கிளி போன்ற மொழியை உடைய பெண்களே, எல்லோரும் வந்து விட்டார்களா?" என வினவுகிறாள். 

விண்ணோக்கொரு மருந்தை, வேத விழுப் பொருளை   கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம், உள் நெக்கு நின்று உருக " என்கின்ற மணிவாசகரின் வரிகளை, "கண்ணுக்கு இனியவனை பாடி, மனம் கசிந்து உள்ளம், உள் நெக்கு நின்று உருகுவாயாக!!" என கூற வந்தவள், “நாங்கள்  எண்ண மாட்டோம், வேண்டும் என்றால் நீயே வந்து எண்ணி பார், யாராவது குறைந்திருந்தால் நீயே போய் தூங்கு". அதாவது எல்லோரும் வந்த பிற்பாடு நான் வருகிறேன் என்று அவள் சொல்லிவிட்டாள் என்ற எண்ணத்தால் இவள் பேசுகிறாள். 

கண்ணுக்கு இனியான் என்பது : திருவண்ணாமலை எம்பெருமான் பெயர்களில் ஒன்று. திருவெம்பாவை பாட்டுக்கள் இத்தலத்தில் பாடப்பட்டவை. முதல் பாடலில் காணப்படும்  பெருஞ்சோதி என்பதும், இரண்டாவது பாடலில் வரும் பரஞ்சோதி என்பதும், மூன்றாவது பாடலில் உள்ள அமுதன் என்பதும், இந்த பாடலில் வரும் கண்ணுக்கினியான் என்பதும் அருணாச்சலமாகிய சிவபெருமானையே குறிக்கும். 

பதிவு : KADAYANALLURAN
நாள் : 19-Dec-17, 12:20 pm

மேலே