எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் வளர்த்த சான்றோர் டாக்டர் உ வே சாமிநாத...

தமிழ்    வளர்த்த   சான்றோர்



 டாக்டர் உ வே சாமிநாத ஐயர் 


 நமது தாய் மொழியாம் தமிழ் மொழி, பல மேடு பள்ளங்களை கடந்து இளமை குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று: நமது மொழியைக் காப்பாற்ற பல தமிழறிஞர்கள் மேற்கொண்ட அயராத பணி.   தமிழ் முனிவர் என்றும், தமிழ்த்தாத்தா என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உத்தமதானபுரம்  வேங்கடசுப்பையர்  சாமிநாதையர் அவர்களின் பணி மகத்தானது. ஒப்பிட முடியாதது. பல அரிய தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி, அவற்றை தொகுத்து தமிழ் உலகிற்குத் தந்தவர் இவர்.  இவரது தீவிர  உழைப்பால் பல அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானிடம் இருந்து தப்பின என்றால் மிகையாகாது. .  

உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர்,  1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரத்தில் பிறந்தார். அக்கால அறிஞர்கள் பலர் பயின்றது போலவே,   சிறுவயதில்திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார்.



 திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சுமார்  ஆறு ஆண்டுகள் மாணவராக இருந்து ஆழமான தமிழ் அறிவைப் பெற்றார்.  பிறகு சுப்ரமணிய தேசிகர்,  என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் கற்றறிந்ததால் உ.வே.சா அவர்கள்  மிக சிறந்த  தமிழறிஞர் ஆனார்.அப்போதெல்லாம்   படிப்பதற்கு புத்தகங்களோ, கணினிகளோ இல்லை. அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பெற்ற பழமையான ஓலைச் சுவடிகள்தான் படித்து உயர்வதற்கான கருவூலங்கள். அவற்றை படித்து மனத்திலும் மூளையிலும் உருவேற்றி, உணர்வதற்கே தனித் திறமை இன்றியமையாததாக இருந்தது. ஆனால் உ வே சா அவர்களோ அத்தகைய  சுவடிகளை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமலும்   எழுத்து ஆணி  கொண்டு ஓலைகளில் எழுதுவாராம்.  

பின்னர்  உ.வே.சா அவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி, அதனை தொடர்ந்து, 1903ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணி.   இவர் இக்கல்லூரியில்,சேர்வதற்கு  முன் மாணவர்களால் மதிக்கப்படாமல்   இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. மிகுந்த பற்றோடும், பாசத்தோடும் தமிழ் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறை   தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக மாணவர்கள்  பார்க்கும் உயரிய நிலைக்கு கொண்டு சென்றது. . சென்னை மாநிலக் கல்லூரியில் சுமார் பதினாறு ஆண்டுகள் நிறைந்த மனதுடன்  தமிழ் கற்பித்து தலை சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி, அப்பணியில் இருந்து அக்கல்லூரியிலேயே பணி நிறைவு ( ஓய்வு) .பெற்றார்.    

அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்க லில் ஒவ்வொரு படிதான் இருக்கும். பல சுவடிகள் செல்லரித்து இருந்தன. . அவற்றையெல்லாம்  அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து தவிக்கும் என்று பெரும் கவலை கொண்ட  உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் முழு முதல்  பணியாக  மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து பெற்றாராம்.

வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார். வேறு சில இடங்களில், . சுவடி கருவூலங்கள் பல கோணிப்பைகளில் கட்டி ஆறுகளில் சேர்ப்பித்த செய்திகள் கேட்டு உ வே சா அவர்கள் கண்கலங்கினார். . அப்படி அழிவிலிருந்து காப்பாற்ற மேற் கொண்ட முயற்சிகள் ஏராளம், ஏராளம்.  இன்று பலரும் போற்றும் சீவக சிந்தாமணி ( திருத்தக்க தேவர் இயற்றிய து)  நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து  புத்தகமாக தொகுத்து வெளியிட்டது இவரது மற்றோரு பெரும்பணியாக அமைந்தது. 

பத்துப்பாட்டு,பதிற்றுப்பத்து,  பரிபாடல், சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, குறுந்தொகை என அரிய பல நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தது   இவரது தமிழ் வளர்த்த பணி மகுடத்தில் பதிக்கப்படவேண்டிய   மற்றோர்  வைரக்கல். .   இவரது,  தமிழ்த்தொண்டை பாராட்டி 'மஹாமஹோபாத்யாய' என்ற பட்டத்தை  வழங்கி(1906) கெளரவித்தது இந்திய அரசு. சென்னைப் பல்கலைக்கழகம்  1932 இல் இவருக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.  வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு (இவரது  87-ஆவது வயது) நின்றது. 

தமிழன்னைக்கு அழகு  சேர்த்தவர்கள் அணியில் உ.வே.சாமிநாத ஐயர் என்ற தமிழ்த்தாத்தாவுக்கு என்றும் நிலையான இடம் உண்டு. இன்று அவரது பிறந்த தினம் ஆகும்.

கடையநல்லூரான்

பதிவு : KADAYANALLURAN
நாள் : 19-Feb-18, 4:01 pm

மேலே