உன் மேல் பயணிக்கும் இரயில் வண்டி *** இன்னும்...
உன் மேல் பயணிக்கும் இரயில் வண்டி
***
இன்னும் சற்று நேரத்தில்
இரயில் வண்டி புறப்பட்டுவிடும் அறிவிப்பில்
சன்னல் கம்பிகள் நனையத் தொடங்கின
உருவம் மறைந்த பின்
நீ இரயில் வண்டிக்கும்
நான் இரயில் நிலையத்திற்குமாகக்
கைகளை அசைக்கின்றோம்
அவையும் மறைந்த பின் கையிலிட்ட
முத்தத்தின் பற்தடங்கள் இருக்கின்றன
இன்னும் சற்று நேரத்திற்கு
யாவற்றையும் இழந்த பின்
கைப்பிடி முத்தம் எடுத்து
உன்னைக் கொலு வைக்க
இரயில் பெட்டிகளின்
உள் அறை இளஞ்சிவப்பாகிறது
நிறம் உணர்ந்த சூரியனும்
இளஞ்சிவப்பாகி
இரயில் நிலையத்திற்கு நேராக
விழத் தொடங்கியது
உன்மேல் பயணிக்கும் இரயில் வண்டியில்
இரவு முழுவதும்
இளஞ்சிவப்பாகக் கிடக்கிறேன்.
...ஆண்டன் பெனி