வினா- நேர்மையாக வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம்....
வினா- நேர்மையாக வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால், நான் மட்டும் நேர்மையாக இருப்பதால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவ்வளவு ஏன் எனக்கே கூட பல தொந்தரவுகள் ஏற்பட்டு விடுகின்றன. நான் என்ன செய்வது? பாவம் என்று தெரிந்தும் பல தவறுகளை செய்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.
விடை - இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. உங்கள் இயலாமையை மறைக்க நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களை குறை கூறுகிறீர்கள். மற்றவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நிற்கும் கோழைத் தனம் உங்கள் செயலிலும், பேச்சிலும் பிரதிபலிக்கின்றது என்பது தெளிவு. வாழவின் பல தருணங்களில் நாம் நேர்மையாகச் செயல்படுவோமா ? அல்லது யாரோ ஒரு சிலர் செய்வதைப் போலவே நாமும் நேர்மைக்குப் புறம்பாக நடந்து கொள்வோமா ? என்ற தடுமாற்றம் அனைவருக்குமே ஏற்படுவது இயல்புதான். ஆனால், அத்தகைய தருணங்களிலும் நேர்மையிலிருந்து வழுவாமல் இருப்பதுதான் சிறப்பு. நேர்மையை விட்டு விலகி ஒரு காரியத்தைச் செய்வதால் பலன் அதிகமாகக் கிடைக்கலாம், காரியம் விரைவில் நடக்கலாம், மற்றவர்களோடு ஒத்திசைந்து போவது போலத் தோன்றலாம்.
ஆனால், இவைகளெல்லாம் வெறும் தோன்றல்களே. பின் விளைவு எதிர்மறையாக இருக்கும். உங்கள் மன அமைதியும், மன நிம்மதியும் பறி போய் விடும். நான் உங்களை பயமுறுத்துவதாக எண்ண வேண்டாம். இதுதான் நிதர்சனமான உண்மை. நேர்மை தவறி நடந்த பல தருணங்களில் இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதனால்தான் இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்தது. எனவே நேர்மையாக நடப்பதால் கிடைக்கும் மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் நிலையானதாக இருக்கும் என்பதே என் கருத்து. என் கருத்து என்று சொல்வதை விட, இதுதான் யதார்த்தம். நேர்மை என்பது உள்ளத்தில் இருந்து வருவது. நேர்மையாக இருப்பதற்கு பணம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நல்ல மனம் படைத்தவனாக, நேர்மறை எண்ணமுடையவனாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். எனவே ஏழை கூட நேர்மையாக வாழ முடியும்.
நான் ஏழையாகப் பிறந்து விட்டேன், என்னைச் சுற்றியிருப்பவர்கள் நேர்மையாகக இல்லாத போது நான் மட்டும் நேர்மையாக இருப்பது பலருக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றெல்லாம் சொல்வது வெறும் சாக்குபோக்குதான். வள்ளுவர் சொல்வதைக் கவனியுங்கள்....
''தன்னெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.''
அப்படிச் சுட்டதினால்தானே நீங்கள் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது ? பொய் என்றால் பொய் மட்டுமல்ல, மனம், வாக்கு, காயம் இந்த மூன்றிலும் உண்மையாக இருப்பதுவே நேர்மையாகும். ஒரு பொய் சொன்னாலே தன்னெஞ்சைச் சுட்டு விடும் என்றால், தவறான செயலைச் செய்தால் எவ்வளவு சுடும் ? யோசித்துப் பாருங்கள். நானும் கூட பல தருணங்களில் அறியாமையால் நேர்மை தவறி நடந்தது உண்டு. ஆனால், என் தவறை உணர்ந்து, அதை நான் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
நேர்மையாக பொருள் நேர்த்து ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முதல் நாள் குடி புகும் பொழுது நண்பர்கள், உற்றார், உறவினர் அனைவரும் வந்திருந்து உங்களை வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்துகள் அனைத்தும் உங்களுக்கு பரிபூரணமாக பலிக்கும். ஏனெனில், நீங்கள் நேர்மையானவர். அது அனைவருக்கும் தெரியும். எனவே உங்களை வாழ்த்தியவர்கள் அனைவரது உள்ளத்திலும் நேர்மையே நிறைந்திருக்கும். அதே சமயம் நீங்கள் நேர்மைக்குப் புறம்பாக பொருளீட்டி, அதைக் கொண்டு ஒரு பெரிய மாளிகை கட்டி, அனைவரையும் வரவேற்று உபசரித்தாலும் கூட, அவர்கள் மனதிற்குள் இது கொள்ளையடித்து கட்டப்பட்ட வீடு என்ற எண்ணம்தான் நிறைந்திருக்கும். முகத்தில் போலியான சிரிப்பும், உதட்டில் பொய்யான வாழ்த்தும்தான் உங்களுக்குக் கிடைக்கும். இதனால் அந்த வீடு முழுவதும் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி விடும்.
அதற்குப் பிறகு அந்த வீட்டில் நீங்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும் ? எவ்வளவு பொருளீட்டி, எவ்வளவு பெரிய வீடு கட்டி என்ன பயன் ? மன நிம்மதி இல்லாத வீடும் போர்க்களமும் ஒன்றுதான். எனவே எவ்வளவு இன்னல்கள் எதிர்வரினும் நேர்மை தவறாமல் வாழக் கற்றுக் கொள்வது நல்லது.
''அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.''
''அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில.''