நீலமும்-புரட்சியும் நீலம் இது ஒரு நிறம் மட்டும் அல்ல,...
நீலமும்-புரட்சியும்
நீலம் இது ஒரு நிறம் மட்டும் அல்ல, இந்த சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல.ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர். கற்பி, ஓன்று சேர், புரட்சி செய் என்று கூறிய மாமேதை.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக ஜெய் பீம் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் ( பொருள் : தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ( இயர் பெயர் என்ன:பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்).
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர், இப்படி இவரை பற்றி சொல்ல இன்னும் எத்தனையோ உள்ளது.
சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்த்தார். அதற்காக சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.
அவருடைய சிந்தாத்தங்களை பின்பற்றி தொடங்கப்பட்ட, கட்சிகளும் அமைப்புகளும் நீல நிறத்தை தங்களது கொடிகளில் பரவவிட்டிருக்கும். ஏனெனில்அம்பேத்கருக்கு நீல நிறம் பிடித்தமான நிறம். பிடித்தமானது என்பதையும் தாண்டி, ஒரு காரணம் உள்ளது.
பரந்து விரிந்த வானம் போன்று நமது சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தவர். வானம் நீல நிறம்தானே, அதனால், நீலம் அவருக்கு இன்னமும் பிடித்தமானதாக ஆனது.
இன்று, மக்களால் அமைக்கப்படுகின்ற அம்பேத்கர் சிலைகளில் நீல நிற கோட் அணிந்து அவர் ஒரு கையில் அரசியல் சாசனத்துடனும், மறு கையை முன்னே நீட்டியவாறு முன்னோக்கி செல்லுங்கள் என அனைவருக்குமான வழியை காட்டுகிறார். அவர் காட்டும் வழி சமத்துவமானது, சனாதனத்திற்கு எதிரானது,ஜனநாயகத்திற்கு ஆதரவானது. அவருக்கு பிடித்தமான நிறத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு எதற்க்காக அந்த நிறம் பிடித்தது என்பதன் அடிப்படையையும் கருத்தில் கொண்டு அவர் வழி நடப்போம்.
நீலம் இது வெறும் நிறமல்ல சனாதனத்திற்கு எதிராக எழுதப்பட்ட வரலாறு.

"வீழ்க சனாதனம், வாழ்க ஜனநாயகம்"