எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா சிரித்தால் அத்தனை அழகு! அன்னையர் தின சிறப்பு...

அம்மா சிரித்தால் அத்தனை அழகு!

அன்னையர் தின சிறப்பு பகிர்வு..

காதலுக்கு இணையாக எல்லாரும் உருகி,மருகி கவிதை பாடுகிற உன்னதம் அம்மா தான். அம்மாவின் உலகம் எத்தகையது என்று நாம் எட்டிப் பார்க்க முயற்சித்து இருக்கிறோமா?
அம்மாவுக்கு என்று என்னென்ன ஆசைகள் இருந்தன,இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முயன்று இருக்கிறோமா ?

அம்மா சமைப்பார்,மடியில் படுக்க வைத்து உறங்கவைப்பார்,நமக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார். நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அற்புதம் அவள் ! அற்புதம் ! கைதட்டுவோம்.

அம்மாவின் கனவுகள் புடவை,நகைகள் என்று மட்டும்தான் இருக்கிறது இல்லையா ? அம்மாவுக்கு என்று ஒரு மனதிருக்கிறதே ! அப்பாவின் அல்லது வீட்டின் யாரோ ஒரு தலைமை பீடத்தின் மவுத் பீசாகவே பெரும்பாலும் அன்னை இருப்பதை கவனித்திருக்கிறோமா ?

நாளைக்கு நீங்கள் மணந்து கொள்ளப்போகிற பெண்ணும் அன்னை ஆவார். அப்பொழுது நம் அப்பாவைப் போலவே எனக்கும் இந்த அலுவல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கியே நிற்கப்போகிறோம் அப்படித்தானே ?

நம் துணி ஒழுங்காக துவைக்கப் படவில்லை என்றால் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடும் நாம் அம்மாவுக்கு அவளின் சுகாதாரத்தின் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று கவனித்து இருக்கிறோமா ?

நம்முடைய சில லட்சங்களும், சொகுசுமா அவருக்கு ஆனந்தம் தருவது ?

அம்மா சாப்பாடு சூப்பர் என்று எத்தனை பேர் சொல்லியிருக்கிறோம். அம்மா சிரித்தால் அத்தனை அழகு என்று சொல்லியிருக்கிறோமா ?

அன்னைக்கு என்று இருக்கும் குரலோ,அவருக்கு என்று இருக்கும் கனவுகளின் குரலோ நமக்கு கேட்பதே இல்லை. அதையெல்லாம் எதிர்பார்க்காத உன்னதம் அன்னை என்று புனிதப்படுத்தி அம்மாவை படுத்தி எடுக்காதீர்கள் !

அம்மா ஒரு காலத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆசைப்பட்டு இருக்கலாம் ; அவர் படித்த பள்ளியின் திண்ணையில் அமர்ந்து ஆனந்தப்பட ஆசைப்பட்டிருக்கலாம் ; ஒரு முறை சத்தம் போட்டு சிரிக்க விரும்பியிருக்கலாம் ; யாராவது அவள் பேசுவதை காது கொடுத்து கேட்பார்களா என்று ஆசைப்படலாம்.

அன்னை ஒரு நாள் வாழ்த்து சொல்லியோ ஒரு கவிதை வாசித்தோ கொண்டாடப்படவேண்டிய ஆளில்லை. அவளும் ரத்தமும், சதையும், மனசும், நம்மைப்போன்றே ஆசைகள் உள்ள ஒரு மனுஷி !

அம்மா அம்மா என்று கண்ணீர் வடிக்கிற ஒரு பக்கச் சாய்வு கணங்களை கடந்து அம்மாவின் தாய்மையை நீங்கள் கடன்வாங்கி உங்கள் பிள்ளைகளிடம் காட்டுங்களேன் !

உங்கள் அப்பா அம்மாவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்த வேலைகளை நீங்கள் ஏன் உங்கள் இணையிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ? அவளின் சுகாதார சிக்கல்களை தீர்க்க ஏன் இன்னமும் ஆழமாக முனையக்கூடாது ?

ஊரெங்கும் அம்மாக்கள் ஊமைகளாகவே நிறைந்திருக்கிறார்கள்.

கவிதை எழுதி கசக்கிபோட்டுவிட்டு டி.வி.யை ஆன் செய்து ஐ..பி.எல் பார்க்கும் நமக்கு அம்மாவுக்கு சீரியல் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்று புரிய வேண்டும் ! புரியும்.

அவளின் அற்புத பிள்ளை இல்லையா நீங்கள் ?

- பூ.கொ.சரவணன்.

Support World Lorgest Page

See more & Like me--->
Interesting thinks tamilan - https://www.facebook.com/pages/Interesting-thinks-tamilan/205474769639175

நாள் : 11-May-14, 11:42 pm

மேலே