மூன்று குரங்கு பொம்மைகள்...!!

உலகம் போகும் பாதை கண்ட
மூன்று குரங்கு பொம்மைகளின்,
யாரையும் புண்படுத்த எண்ணாத
தனிப்பட்ட எண்ணங்கள்..!!
தீயதை கேட்காமல் இருந்த என்னை,
வன்முறை பேச்சுகளும்,
வெடிகுண்டு சிரிப்புகளும்,
தோட்டா சத்தங்களும்,
ஆன்மாக்களின் அலறலும்,
மனிதர்களின் கதறல்களும்,
காதிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!!
தீயதை பார்க்காமல் இருந்த என்னை,
வழிந்தோடும் ரத்தங்களும்
சிதறிய மனித உடல்களும்,
வன்முறை காட்சிகளும்,
பாலியல் கொடுமைகளும்,
வறட்சி கொலைகளும்,
கண்ணிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!!
தீயதை பேசாமல் இருந்த என்னை,
நாட்டு நடப்புகளும்,
மனித உரிமை மீறல்களும்,
ஒழுக்க இழிவுகளும்,
மோசடி நிகழ்வுகளும்,
குறுக்கு வழிகளும்,
வாயிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!!