புறநானூறு பாடல் 27 - சோழன் நலங்கிள்ளி

சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர்.

மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள். சேரன் செங்குட்டுவன் மற்றும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆகிய இருவரும் இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இமயவரம்பனுக்கும் (அண்ணன் மருமகன்) இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். வேற்பஃற டக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான்.

இந்த சோழ மன்னன் விம்மிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தால் சிறியவர்க்குப் பொருந்தாது என்னும் கொள்கை உடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர்.

இவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளி க்கும் (நலங்கிள்ளிக்குப் பெரியப்பா மகன், சகோதரன் முறை) பகை மூண்டது. அப்பொழுது, ‘பகைவர் ஈயென இரப்பின் இன்னுயிரும் தருவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதினால், கழை தின்னும் யானையின் காலகப்பட்ட முளைபோலக் கெடுத்து ஒழிப்பேன்’ என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மனவலிமையைப் புலப்படுத்தும்.

ஒரு சமயம் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த போது, நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டான். பின் நெடுங்கிள்ளி உறையூருக்குச் சென்று தங்க, நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். ஆனாலும் நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான்.

அச்சமயம், கோவூர் கிழார் என்னும் புலவர், நெடுங் கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று அறிவுரை கூறினார் (புறநானூறு – 44). நலங்கிள்ளி க்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்து, நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான்.

அக்காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்புற்றிருந்த மலை அரண்கள் ஏழினைக் கைப்பற்றி, அவ்விடங் களில் தன் புலிப்பொறியை வைத்தான். இவனது வெற்றி கிழக்கே கீழ்க்கடலும் (வங்காள விரிகுடா), மேற்கே குடகடலுமாகிய (அரபிக்கடல்) இரண்டிற் குமிடையே பரந்திருக்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என்று நடுங்கித் தூக்கத்தைத் தொலைத்தனர்.

இனிவரும் இப்பாட்டில் உறையூரைச் சேர்ந்த முதுகண்ணன் என்பவரின் மகனான சாத்தனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியின் சிறப்பியல்பைப் பாடிச் சிறப்பிக்கின்றார். இப்பாட்டில், ‘விழுமிய குடியில் பிறந்து அரசு வீற்றிருந்தோர் பலருள்ளும் புலவர் பாடும் புகழ் பெற்றவர் சிலரே; புகழ் பெற்றவர் வலவன் ஏவா வானவூர்தி ஏறி விண்ணுலகு செல்வர் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன்; வளர்தலும் தேய்தலும், பிறத்தலும் இறத்தலும் உடையது உலகம்; இவ்வுலகத்தில் வருந்தி வந்தோர்க்கு வேண்டுவன அருளும் வன்மைதான் வெற்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க’ என்று அறிவுறுத்துகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே 5

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி 10

தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும் 15

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.

பதவுரை:

சேற்று வளர் தாமரை பயந்த – சேற்றில் வளரும் தாமரைச் செடியில் பூத்த

ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன – ஒளி பொருந்திய தாமரை மலரின் பல இதழ்களும் ஒழுங்கான வரிசையாக அமைந்திருப்பது போல

வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து – ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியில் பிறந்து

வீற்றிருந்தோரை எண்ணுங் காலை – அரசுக் கட்டிலில் இருந்த வேந்தரை எண்ணும் பொழுது

உரையும் பாட்டும் உடையோர் சிலரே - புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலர்

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே – தாமரை இலை போல பயனின்றி இறந்தவர் பலர்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் – புலவரால் புகழப்படும் புகழுடையோர் ஆகாயத்தில்

தம் செய்வினை முடித்து வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்ப – தாம் செய்யும் நற்காரியங்களைச் செய்து முடித்து பாகனாற் செலுத்தப்படாத விமானத்தில் நல்லுலகம் செல்வர் என அறிவுடை யார் சொல்வர்

எனக் கேட்பல் – என்று சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன்

எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – என் தலைவனான சேட்சென்னி நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் – வளர்ந்ததொன்று குறைதலும், குறைந்ததொன்று வளர்தலும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – பிறந்ததொன்று இறத்தலும், இறந்ததொன்று பிறத்தலும்

அறியா தோரையும் அறியக் காட்டி – ஆகிய உண்மைகளை கல்வியால் அறியாதவர்களுக்கும் அறியச் செய்து

திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து – திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில்

வல்லா ராயினும் வல்லுந ராயினும் – வல்லவ ராகவோ, வல்லமை இல்லாதவராகவோ இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும்

(வல்லார் – திறமையுடையவர் - Clever, capable persons)

(வல்லார் – திறமையில்லாதவர் - Incapable persons)

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – வறுமையால் வருத்தமுற்று வந்தோரது உண்ணாது மெலிந்த நிலையைப் பார்த்து

அருள வல்லை ஆகுமதி – அவர்களுக்கு அருளி, வேண்டுவன வழங்குவாயாக

கெடாத துப்பின் நின் பகை யெதிர்ந்தோர் – குறைவற்ற வலிமையுடைய உனக்குப் பகையாய் மாறுபட்டு எதிர்ப்பவர்கள்

அருளிலர் – அருளில்லாதவர்களாகவும்

கொடாமை வல்ல ராகுக - ஈகைத்தன்மை அற்றவர் களாகவும் ஆகுக!

பொருளுரை:

சேற்றில் வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளி பொருந்திய தாமரை மலரின் பல இதழ்களும் ஒழுங்கான வரிசையாக அமைந்திருப்பது போல, ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியில் பிறந்து அரசுக் கட்டிலில் இருந்த வேந்தரை எண்ணும் பொழுது புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல் களுக்கும் உரியவர்கள் சிலரே; தாமரை இலை போல பயனின்றி இறந்தவர் பலர் ஆவர்.

புலவரால் புகழப்படும் புகழுடையோர் ஆகாயத்தில், தாம் செய்யும் நற்காரியங்களைச் செய்து முடித்து பாகனாற் செலுத்தப்படாத விமானத்தில் நல்லுலகம் செல்வர் என அறிவுடையார் சொல்வர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் என் தலைவனான சேட்சென்னி நலங்கிள்ளி!

வளர்ந்ததொன்று குறைதலும், குறைந்ததொன்று வளர்தலும் பிறந்ததொன்று இறத்தலும், இறந்ததொன்று பிறத்தலும் ஆகிய உண்மைகளை கல்வியால் அறியாதவர்களுக்கும் அறியச் செய்து திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில், வல்லவராகவோ, வல்லமை இல்லாதவராகவோ இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும் வறுமையால் வருத்தமுற்று உன்னிடம் வருவோருண்டு.

அவ்வாறு வறுமையில் வந்தோரது உண்ணாது மெலிந்த நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருளி, வேண்டுவன வழங்குவாயாக! குறைவற்ற வலிமையுடைய உனக்குப் பகையாய் மாறுபட்டு எதிர்ப்பவர்கள் அருள் இல்லாமலும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆகுக!

இப்பாடல் பொதுவியல் திணை ஆகும். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதன வற்றையும் கூறுவது பொதுவியல் திணை எனப்படும்.

துறை: முதுமொழிக் காஞ்சி. புலவர் பாடிய பாட்டு உடையோர் புகழ் நிலைத்திருக்கும் என்றும், வல்லவரோ, வல்லமை இல்லாதவரோ, அறிஞர் களாகவோ யாவராயினும் வருந்தி வந்தவருக் கெல்லாம் அருள வேண்டும் என்றும் நலங்கிள்ளி க்கு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாட்டில் அறிவுறுத்துவதால் இது முதுமொழிக் காஞ்சித் துறை ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-13, 10:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 874

சிறந்த கட்டுரைகள்

மேலே