சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
----------------------------------------------------------------------------------------------------

மிருக குணத்தை தீயில் எரித்து
மின்மினிப் போல மிதந்து சென்று
பாதை முழுக்க பரவசம் ஒன்றை
பாதத்திற்கு பழக்குகிறேன் ..!

பயத்தின் முகத்தை விரலால் கிழித்து
பறவையின் சிறகாய் காற்றில் பறந்து
வானின் இறுதி எல்லையை தாண்டும்
வலிமையை மீட்டுகிறேன் ..!

மென்மை தன்மையை மேனியில் பதித்து
அலையின் வேகமாய் தேடலை துரத்தி
தென்றலின் வசியத்தை வெல்லும்
புன்னகையை வீசுகிறேன் ..!

கண்ணீர் தவிர்த்து கவலை மறந்து
குழந்தை நெஞ்சத்தில் நிரந்தரமாய் நின்று
வாடாத இதழ்களின் வாழ்வை
மெட்டுகளாய் இசைக்கிறேன் ..!

வன்முறை புதைத்து அமைதியை அணைத்து
மழைத்துளி சொல்லும் தாகத்தை படித்து
வேகமாய் விழும் மின்னல்
கீற்றாய் ஒளிர்கிறேன் ..!

தினசரி தியாகத்தை உயிரோடு தைத்து
விண்மீன் ஒளியை விரலோடு வைத்து
ஆழ்மனம் முழுவதும் மனிதத்தின்
மகத்துவத்தை வளர்க்கிறேன் ..!

ஒழுக்கமே உணர்வாக குறைகள் குறைத்து
வெற்றியின் கனவை இதயத்தில் நிறைத்து
நதியில் வீசிய நெருப்பாக எந்தன்
சிற்பியை செதுக்குகிறேன் ..!

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (15-Nov-14, 3:30 pm)
பார்வை : 176

மேலே