சர்வம் சிவார்ப்பணம்

#சர்வம் சிவார்ப்பணம்#
வெள்ளிக்கிழமை மாலை ஆறரை ரயிலை பிடித்த பின்னர் எனை வருடிய ஜன்னலோர காற்றின் வசைகளுக்கு நான் செவி மடுக்கவில்லைதான் ...."கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி"என்ற சுதா ரகுநாதனின் குரலில் மெய்மறந்த என் செவிகளுக்கு காற்றின் வசைகளை கேட்க எப்படி விருப்பமிருக்கும்...!!!ரயிலின் நெடுந்தூர ஓட்டத்தொடு ஈடுகொடுக்க ரொடங்கின எனதிதிய துடிப்புகள்....கர்நாடக சங்கீதம்...காலக்‌ஷேமம் என்று இக்கலைகளில் ஆர்வமிருப்பினும் சிறுவயது முதல் சரிவர பயிற்சி மேற்கொள்ளாமல் போனதற்கு நான் காரணமா...இல்லை பெற்றோரின் அலட்சியமா...இல்லை என் துரதிர்ஷ்டமோ ...?? என்ற என் மனதவழித்து விட்ட அடுக்கு மொழிக் கேள்விகட்கு என்னால் பதில் கூற முடியவில்லைதான்....என் இதய ஓட்டம் சீராக மறுத்துக் கொண்டிருந்தது இத்துனை வருடங்களில் எனது ஆர்வங்கள் எதுவும் ஆக்கம் செய்யப்படவில்லை என்பதால்... என் இதயக்குருதி ஏமாற்ற வேள்வியில் சற்று கொதிக்கவே தொடங்கிவிட்டதெனலாம்...எனதருகிருந்த என் தோழியும் ...என் முகவாட்டம் கண்டு ஏன்? என்று வினவமுற்படுகையில் ...தலைவலி என்பது போல் சன்னலில் சாய்ந்து விழி மூடலானேன்.....அது ஏனோ....அவ்வப்போது இப்படி என் ஆர்வங்கள் ஆக்கம் செய்யப்பட என்னென்ன வழிகள் என்று நான் சிந்தித்து சிந்தித்து சற்று சோர்ந்தே போகிறேன்...அப்படி சோர்ந்த நேரம் எனை லேசாக்க நானே என் மனமருந்தாக்கிக் கொண்டது தான் இந்த கர்நாடக இசை கேட்கும் பழக்கம்...... ஓரிரண்டு கீர்த்தனங்கள் கேட்டால் தான் எனக்கும் ஒரு உந்து சக்தியே பிறக்கின்றது.....ஆம்...என் தொடர்வண்டி பயணத்தோடு மட்டுமல்ல என் தொ(ல்)லை வாழ்வின் பயணத்தில் கூட கீர்த்தனங்களும் சொற்பொழிவுகளும் தான் எனதீடற்ற துணைகள்... எப்படியோ "அமரர் சிறை மீட்ட பெருமாளே..." என்ற அந்த சங்கீத கலாநிதியின் பழனியெம்பெருமானின் கீர்த்தனம் வரவும் மணி ஒன்பதென்றடித்தது என் கைக்கடிகாரம்.....வீட்டை அடைந்தபோது ரயிலில் வந்த சோர்வு மறுநாள் காலை வரை எனை விடுவதாயில்லை என்றுணர்ந்தேன்....ஆக உண்டிமுடித்து பொத்தென்று கட்டிலின் மடிவீழ்ந்தேன்... உறக்கத்திற்கு இரக்கங்காட்டி இரவின் மடியில் இரவல்காரியானேன்..!!!

கதிரோன் பல் இளித்தான்..பதிலுக்கு நானும் திமிருறித்து புரளலானேன்...
இன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி...விடுதி...எழுத்துவேலை என்று என்னுடைய இன்றைய நாள் எப்போதும் போல பரபரப்பாக இல்லாமல் சற்று வேறுபட்டே இருக்கும் என்ற நம்பிக்கையில் மேலும் உறங்கலாம் என புரளையில்தான் என் அப்பாவின் விளிக்குரல் என் செவியறையின் துவாரங்களை துளைத்தெழுப்பிக் கொண்டிருந்தன...!!
இன்று சிவனிறைச்செல்விக்கு சிவதினமாகப் போகிறது என்றபடி என்னப்பா வருவதை நான் அறியாமலில்லை...ஆயினும் ஒன்றும் விளங்காதவளாய் மறுபடி தலையணையில் முகம் புதைக்கலானேன்...."சீனிம்மா(செல்ல பெயர்) எழுந்திரு!!இன்று நீ ..நான் ...தர்ஷூ(தங்கை) மூவரும் சிற்றுலா செல்ல இருக்கிறோம்.."என்றபடி என்னருகில் வந்ததும்..".அது என்னப்பா அது சிற்றுலா....சுற்றுலா கேள்விப்பட்டிருக்கிறேன்....சிற்றுலா...என்றால் வினோதமாக உள்ளதே"என்று அரைவிழி திறவ கேட்டபடி எழுந்தமர்ந்தேன்.அதாவது இன்று ஒருநாள் மட்டும் நாம விழுப்புரமொட்டிய சிவாலயங்களில் சிலவற்றிருக்கு செல்ல இருக்கிறோம் என்று அப்பா விளக்கி முடிக்கவும் எனக்கு ஒரே குஷியாகி விட்டதுதான்.மடமடவென்று கிளம்பினோம்...என்னதான் அன்னவாகனமே வந்து அழைக்க நேரிடினும்....அப்பாவின் தோள் சாய்ந்து அவரோடு கதை பேசி...மோட்டார் வண்டியில் போவதற்கே நான் விரும்புவேன்.

செங்கதிரோன் புடை சூழ அந்த வெண்ணிற கோபுரம் மேலும் அழகேறி தென்பட்டது.அம்பாளின் மாதுள வதனம் எங்களை வாருங்கள் என்றபடி இதழ் குவித்திருந்தது கண்டு சற்று சிலிர்த்தே போனேன்.கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டிருந்த அபிராமி பட்டரின் வரிகள் எனக்கு அவ்வம்பிகையை கடவூர் நாயகியாகவே காட்டியது...வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகையவளழகும்....அருளும் காணக் கிடைக்க எத்துணை பேரு பெற்றிருக்கவேண்டும்என்றெண்ணியபடி அவளின் அடினோக்கி இரந்தழுது..பின்...என்னப்பன் ஈசனவனை கண்டபோது...".தாயினும் இனியனவன்...தாயுமானவனவன் ..கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே...அடடா..பேராது நின்ற பெருங்கறுணைப் பேராறவன்"என்று என்னுள ஓட்டங்கள் எங்கும் எம்பெருமானைப் பற்றிய சிந்தனைதான்.பிரகாரம் சுற்றியதும் "இறையருள் பெற எளிய வழி எது?" என்று அப்பாவிடம் கேட்டு என் ஐயத்தை போக்கியே ஆகவேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தேன்.

கோவில் வாயிலடைந்ததும் ஒரு மூதாட்டி கோயில் சாமான்களும்..தின்பண்டங்களுள் சிலவற்றையும் விற்றபடி காட்சியளித்தாள்...தரிசனமே முடிந்த பிறகு இப்போது கடை போட்ட அந்த மூதாட்டியிடம் என்னதான் வாங்க போகிறார் அப்பா?என்று யோசிக்கலானேன்.நானாக இருந்திருந்தால் ஒரு ரூபாய்க்கு கற்பூரத்தோட வியாபாரத்த முடித்திருப்பேன்.ஆனால் அப்பா அது போதாதென்று ஒன்ரிற்கிரண்டு பொறி உருண்டை பொட்டலங்களை வாங்கியபோதுதான் அந்த மூதாட்டியின் முகமாற்றத்தை நான் கவனிக்கலானேன்.சூர்யோதயம் கண்ட செம்பங்கயமானதவள் முகம்.நான் ஏதும் புரியாதவளாய் அப்பாவிடம் ஓடினேன்.புரியாத இந்நிலை ஏன்...அம்மூதாட்டி ஏன் அந்த இரண்டு பொட்டலங்கள் விற்றதற்கு போய் முகம் சிவக்கலானாள்? என்றேன்.அதற்கு அவர் ஒரு புன்சிரிப்பொடு கூறியவை என் நெஞ்சில் பசுமரத்தானிபோலானது.ஆம்..ஒரு வேளை சோற்றிற்கு கூட நான் என் பிள்ளைகளை நம்பியவலல்ல!ஒரு சான் வயிறடைக்க பிச்சை கேட்டு மன்றாடும் சோம்பியுமல்ல!என்று சொந்தக்காலில் நிற்குமவள் மனத்திறம்தான் அவளை அப்படி சிவக்கவைத்ததற்கு காரணம்...,ஒரு பொறி உருண்டை பொட்டலம் 10ரூபாய் எனில் இன்று ஒரு வியாபாரத்திலேயே அவள் 20ரூபாய் சம்பாதித்து விட்டாள் . "பிச்சையெடுத்துண்ணும் பத்து ரூபாய் காசைவிட உழைத்து உண்ணும் ஒரு ரூபாயே மேல்.."என்று எண்ணுமவள் உளக்காட்சியையே அவளது சுருங்கிய வதனத்து பங்கய மலர்ச்சியெனக்கு காண்பித்தது என்றபடி அப்பா அப்பொட்டலங்களை என் கையில் கொடுத்தார்.அந்த வினா .."இறையருள் பெற எளிய வழி எது?!"கேளாமல் கிடைத்ததென் வினாவிற்கான விடை .ஆம்...அம்மூதாட்டியின் ஒரு குறுனகையில் நான் இறைமை கண்டேன்...ஏழையின் சிரிப்பில்தான் இறையருள் உள்ளதுணர்ந்தேன்.எளியேரை ஏற்றுவதே இறைனிலைக்கு வித்திடும்....சர்வம் சிவார்ப்பணம்..என்று மெய்யுணர்ந்தவளாய் பெருமூச்சுவிட எங்களின் அடுத்த பயணம் தொடங்கியது.


சிவனிறைச்செல்வி;-)

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (24-Jul-17, 3:25 pm)
சேர்த்தது : Sivaniraichelvi
Tanglish : sarvam sivaarppanam
பார்வை : 119

மேலே