குளக்கட்டாக்குறிச்சி கிராமம் - குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து -...
குளக்கட்டாக்குறிச்சி கிராமம் - குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில் தாலுகா - கழுகுமலையிலிருந்து 8 கீ.மீ - கோவில்பட்டியிலிருந்து 18 கீ.மீ - பாரம்பரியமான விவசாயத் தொழிலை நம்பி வாழும் கிராமம்... ஜனநாயகம் உலாவும் கிராமம்..!! மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய கிராமத்து மண் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இந்த கிராமத்து வலைப்பூ!!
எனது தாயார் மல்லிகா அவர்கள் - 10.01.13

இன்றைய தினம் அதிகாலை வேளையில் எனது தாயாரை வீட்டிற்கு வெளியே உள்ள முற்றத்தில் தேநீரை தாயரிக்கச் சொல்லிவிட்டு, புகைப்படம் எடுத்தேன். என்னடா இது! சும்மா போட்டோ எடுக்கணும், போட்டோ எடுக்கணும்னு சொல்றே. இந்த போட்டோவெல்லாம் யாரு பாக்கப்போறாங்க. நான் எடுக்குற போட்டோவை கம்பியூட்டர்ல போட்டாச்சுனா, உலகத்துல எந்த இடத்துல இருந்தும் எல்லாரலயும் பார்க்க முடியும். அதனாலதான் எல்லாரும் கம்பியூட்டரு படிப்பு படிக்கிறாங்களோ. ஆமாம்மா! அதனாலதான் எல்லாரும் படிக்கிறாங்க. ஆனா கம்பியூட்டருல சினிமா நடிகர்கள், நடிகைகளைத்தான் அதிகமா தேடித் தேடிப் பாக்குறாங்க. அதனால உங்களை மாதிரி உள்ள கிராமத்து ஜனங்களை யாரு கம்பியூட்டருல தேடிப் பாக்கப் போறாங்கன்னு நீங்க நினைக்கலாம். நம்ம ஊரு சாதி சனங்களை எல்லாரையும் தை பொங்கலு அன்னைக்கு போட்டோ எடுத்தேன்ல, அது எதுக்குன்னு நினைக்கிறே. கம்பியூட்டர்ல நம்ம ஊருக்குன்னு இணையதளம் இருக்குது. அதுல எல்லாரோட போட்டோ இருக்குது. வெளிநாட்டுல வேலைக்கு போயி இருக்குற நம்ம ஊருக்காரங்க எல்லாரும் இணையதளத்துல பார்த்துட்டு கண்ல இருந்து கண்ணீரு வந்துருச்சுன்னு சொன்னாங்கம்மா. அந்த அளவுக்கு வெற்றியடைஞ்சிருச்சு. இலக்கியம் படிக்கிறதால இந்த மாதிரி என்னால யோசிச்சு செய்ய முடிஞ்சது. சின்ன வயசுல கதைப் புத்தகமா படிச்சி யேடா. அதான் பேப்பரை எடுத்து வச்சுகிட்டு கதை கதையா எழுதுறயாக்கும். உங்க அப்பா யாரு கூப்புட்டாலும் அங்க போறேன் இங்க போறேன்னுட்டு பத்து பைசா யாருகிட்டேயும் வாங்கவும் மாட்டாரு, நாலு காசு சம்பாதிக்கனு மேனு ஒரு நாளும் நினைக்க மாட்டாரு. நீயும் திரும்ப உங்க அப்பா மாதிரியே ஆரம்பிச்சிருக்கிறே. இல்லம்மா நம்ம ஊரு இன்னும் ஒரு வருசத்துல இந்தியா அளவுல தேசிய விருது வாங்கப் போகுது. அது என்னடா தேசிய விருது!! அம்மா சினிமாக்காரங்க எடுக்குற படத்துக்கு மத்திய அரசாங்கம் தேசிய விருது கொடுத்தா, வெறுமனே ஒரு பாராட்டுச் சான்றிதழ் மட்டும்தான் கொடுப்பாங்க. அதே இது நம்ம ஊருக்கு விருது கிடைச்சா ஒரு கோடி ரூபாய் கிராமப்புற அடிப்படை வளர்ச்சி மேம்பாட்டுக்கு கொடுப்பாங்கன்னு சில பெரிய ஆளுங்க கோயம்புத்தூர்ல பேசிகிட்டாங்க. எதனடிப்படையில விருது கொடுப்பாங்கன்னு அவங்க கேட்டதுக்கு, கிராமத்தோட பாரம்பரியத்துக்கு மாவட்ட அளவுல அங்கீகாரம் கிடைச்சா, நிச்சயமா மத்திய அரசாங்கத்தோட விருது கிடைக்குமுன்னு சொன்னாங்க. அதனாலதான் கையில கேமாரவை வச்சுகிட்டு கிராமத்தை சுத்தி சுத்தி வந்து ஜனங்களை போட்டோ எடுக்குறேன். கேள்வி மேல கேள்வி கேட்டு ஜனங்க என்னைய ஒரு வழி பண்ணிட்டாங்க. ஒரு போட்டோ எடுக்குறதுக்கு குறைஞ்சது பத்து கேள்விக்காவது பதில் சொன்னேன். அவங்க எங்கிட்ட கேள்வி கேக்குறப்ப பெருமையா இருந்துச்சு. நான் கோயம்புத்தூர்ல வேலை பாக்குறதுல எவ்வளவு சம்பளம் வாங்குறப் பானு யாருமே கேட்கலை. ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இதே மாதிரி நீங்க வேலை விசயமா போற அரசாங்க அலுவகலத்துலயும், அரசியல்வாதிகிட்ட யும் கேள்வி மேல கேள்வி கேக்கனுமுன்னு ஜனங்க கிட்ட சொன்னப்ப, கேட்போம் தம்பி! கண்டிப்பா கேள்வி மேல கேள்வி கேட்போமுன்னு சொன்னாங்கம்மா. இதுக்கு முன்னாடி நம்ம ஊரு ஜனங்க இந்த மாதிரி பதிலை சொன்னது இல்லை.
மாடத்தி அவர்கள்..

என்னது நான் பேசுறது உலகம் பூரா கேட்குமான்னு வண்ணான் மாடத்தி வாயடைச்சிப் போயிட்டா. எத்தனை படிச்ச புள்ளைக நம்ம ஊருல கையில செல்போனை வச்சிருக்குது. ஒருத்தரும் வந்து இந்த வண்ணாத்திய பேசச் சொல்லி போட்டோ எடுக்கலையே தம்பின்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சி ட்டா. என்ன மாடத்தி திடீர்னு அழுகுறே. உங்க அப்பா கிருஷ்ணசாமி சாகலை தம்பி. உசுரோட உங்க உடம்புல இருந்துகிட்டு பேசுறது எனக்கு தெரியுது தம்பி. மனுஷன் உசுரோட இருந்தப்ப வாயில எந்நேரம் பார்த்தாலும் அந்த பீடியை வச்சுகிட்டு குடிக்காம இருந்துருந்தா, இன்னும் இருபது வருஷம் உசுரோட இருந்துருக்குமே. எத்தனை தடவை நான் சத்தம் போட்டுருப்பேன். சோலையம்மாவுக்கு மகனா பொறந்துகிட்டு, சம்சாரி வீட்டுப் பிள்ளை இப்படி பீடியை குடிச்சுத் தொலைக்கிறேங்கிலே. என்ன மாடத்தி பண்றது பொழுது போகணுமே. பொழுது போகனுமுன்னா சக்கரையை தண்ணியில கலந்து குடிக்கலாமுள்ள. பையன் படிச்சிட்டு கோயம்புத்தூர்ல வாத்தியாரு வேலை செய்யுது. இன்னும் பையன் முன்னாடி பீடி குடிக்கிறீங்க. என்ன சாமி இது! என்னமோ சோலையம்மா வீட்டுக்கு முப்பது வருஷம் துணி துவைச்சேன். சின்னப் புள்ளையில நல்ல குருதேலி, கொள்ளு சாப்பாடு, கம்பங்கருது சாப்பாடு சாப்புட்டுட்டு இலவட்டம் மாதிரி இருப்பேங்க. வீணாப்போன ரெண்டு மூணு பேரு கூட சேர்ந்ததால இப்படி பீடி குடிச்சிக்கிட்டு பழகிட்டீங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் தம்பி! கேட்கலையே. சரி மாடத்தி இதெல்லாம் மறந்துறணும். வேற வெட்டித்தனமா எதுவும் செய்யலையே. நீ மாடத்தி டவுணுக்கு வந்தேனா, பொம்பளை பிள்ளைக கூட சேர்ந்துகிட்டு சில ஆளுக அடிக்கிற கூத்தப் பார்த்தேனா, வாழ்க்கையே வெருத்துருவே. மவராசன் நான் மதுரைக்கு போனப்ப பாத்துருக்கேன். ஆந்திரா போனப்ப பாத்துருக்கேன். மெட்ராசுக்கு ஒரு தடைவை போனப்ப பாத்துருக்கேன். உலகம் உருப்பட்ட மாதிரிதான் தம்பி. அது சரி மாடத்தி நீ பேசுறது உலகத்துக்கே கேட்கப்போகுது. நீ பேசுன பேச்சு காலத்துக்கும் அழியாது. நம்ம கிராமத்துல பிறக்கப்போற அடுத்த தலைமுறை பிள்ளைகளும் இந்த கம்பியூட்டருல உன்னோட பேசுனத கேட்டு, சமரசமா வாழுற கிராமமா எத்தனையோ ஆயிரம் வருசத்துக்கும் இருக்கும் மாடத்தி..!! சரி சாமி அப்படி எதுவும் நடந்தா அந்த பெரிய ஓடையில இருக்குற என்னோட யானைக் குத்துக் கல்லுல காவல் காக்குற முனியசாமி தான் காரணமா இருப்பாரு. என் வீட்டுகாரரு சின்னக்குட்டி சடையாண்டி சாகலேன்னு நினைச்சிக்கிறேன். மனுடன் உசுரோட இருந்துகிட்டு நடுச்சாமத்துல மாடத்தி மாடத்தின்னு தூங்க விட மாட்டேங்குறாரு. ஒரு வேலை நீங்க சொல்றது நடந்துருமோன்னு நினைக்கிறேன். மாடத்தி இப்படி எங்கிட்ட பேசுனம்மா. எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. சரி இந்தா டீயைக் குடி செந்திலு. இன்னைக்கு கறிக்கோழிக் குழம்பு செஞ்சிருவேன். வெளிய போயிட்டு சீக்கிரமா சாப்புட வந்துறணும். அங்கே இங்கே நிக்கிறேன்னு நேரம் ஆயிரக் கூடாது. சரிம்மா!! வெளிய போனதும் வந்துர்றேன். சும்மா ஆளுகல போட்டோ எடுக்குறேன்னு வம்பு கிம்பு வந்துறாம. சூசகமா ஆளுககிட்ட பேசி எடு. அப்படி இல்லேன்னா விட்டுரு. இப்ப இருக்கிற நிலைமையில யாரு என்ன பேசுவாங்கன்னு தெரியாது. ஆளுகல வற்புறுத்தி யாரையும் போட்டோ எடுத்துறாதே. சரிம்மா போயிட்டு வந்துர்றேன்..!!
படித்த செய்தித் தொகுப்பு;