எண்ணம்
(Eluthu Ennam)
மா மரங்களை பராமரிப்பது பற்றிஆராய்ச்சி நிலையம் ஆலோசனை
மா மரங்களை பராமரிப்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் முருகேசன் ஆலோசனை கூறியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பெரிய அல்லது முதிர்ந்த மரங்கள் கொண்ட மாந்தோப்புகளில் பராமரிப்பு செய்வதற்கு ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்கள் உகுந்தவை. மரங்களில் தேவையற்ற உட்புறமுள்ள கிளைகள், நோயுற்ற, காய்ந்த, கருகிப்போன பூந்தளிர்கள், அடர்த்தியாக வளர்ந்துள்ள வளமை குன்றிய கொப்புகளை வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி படும்படி செய்ய முடியும்.
மாமரத்தில் அடித்தண்டில் இருந்து நான்கு முதல் ஐந்து தண்டுகள் ஒரே இடத்தில் இருந்து வளரும். இவற்றில் ஆரோக்கியமான, திடமான இரண்டு அல்லது மூன்று தண்டுகளை விட்டு விட்டு மற்ற தண்டுகளை நீக்கி விட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து இலைகளுக்கும் சூரிய ஒளி கிடைத்து தாவர உணவு உற்பத்தி அதிகரிக்கும். பொதுவாக மாஞ்செடிகள் 60 சென்டி மீட்டர் அதாவது இரண்டடி உயரம் வளரும் வரை பக்க கிளைகளை அவ்வப்போது வெட்டி விட வேண்டும். கிளைகள் தரையில் தொங்காமல் வெட்டி விட வேண்டும். வெட்டுப்பட்ட இடங்களில் போர்டோ பசை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு பசை தடவ வேண்டும்.
ஆறு வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டே கால் கிலோ யூரியா, ஆறேகால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ பொட்டாஷ், 50 கிலோ மக்கிய தொழு உரம் இட வேண்டும். இந்த உரங்களை மரத்தின் தூரிலிருந்து இரண்டடி முதல் மூன்றடி தள்ளி மரத்தின் கிளைகள் படர்ந்துள்ள தூரம் வரை 15 செ.மீ.,முதல் 30 செ.,மீ ஆழம் வரை நன்கு கொத்தி விட்டு தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு மூடி விட வேண்டும். பின் நீர்பாய்ச்ச வேண்டும். மேலும் மாந்தோப்புகளில் மழைக்காலங்களில் பசுந்தாள் உரங்களான தக்கை பூண்டு, சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றை விதைத்து அவை வளர்ந்து பூத்தவுடன் மடக்கி உழவு செய்தால் களை தொல்லை குறைவதுடன் நிலத்தின் தன்மையும் மேம்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.