உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)

உலகம் சுழல்வதற்கே
அச்சாணி உழவுத் தொழில்
சொல்லி வைத்தார் வள்ளுவரும் - அவர்
சொன்ன வார்த்தை சத்தியமே...

நெல்நட்ட விளை நிலமெல்லாம்
கல்நட்டு விலை நிலமாச்சு
விவசாயம் கெட்டாச்சு
உழவுத் தொழிலும் நலிவாச்சு...

உழவின்றி மனித உயிரில்லை
உயிரின்றேல் இவ்வுலகில்லை
சிந்தித்தே செயல்படுவோம்
உழவுத் தொழிலை சீர் செய்வோம்...

உணவதுவின் மூலப் பொருள்
உழவினில்தான் உள்ளதன்றோ
உழவு சிறக்க மழை கொணர்வோம்
மழைக் கொணர மரம் வளர்ப்போம்

நதி நீரிணைப்புத் திட்டத்தையே
நாடுணரச் செய்திடுவோம் - அரசு
நடைமுறைப் படுத்திடவே
போராடிப் பலன் பெறுவோம்

முதன்மைத் தொழில் உழவுத் தொழில்
சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம்
வேளாண்மை பயிலச் செய்து
விவசாயம் பெருக்கிடுவோம்.... ...

எழுதியவர் : சொ. சாந்தி (9-Jan-13, 6:02 am)
பார்வை : 181

மேலே