சற்குரு சரணம்

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுணா மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்

பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்

பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்

தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்

எழுதியவர் : நான் நாகரா(ந. நாகராஜன்) (9-Jan-13, 3:32 pm)
சேர்த்தது : Natarajan Nagarajan
பார்வை : 86

மேலே