வர்ணிக்க ஏது வாய் ?

கறுத்ததோர் காக்கையின்
மழைநாளின் எச்சமாய்
வந்துவிழுந்த என்னை...
உருட்டிகொண்டுபோய்
ஓரிடத்தில் புதைத்துவிட்டுப்
ஓடிப்போனது யார் ?

நிலச்சூடு தாங்காமல்
விதைச்சட்டை கிழித்தெறிந்து
வெளிவந்த போது...
நாக்கு நீட்டிய எனக்கு
பூமி போதித்தது யார் ?

என்னருகில்
குடியிருந்த - தூரத்து
உறவொன்றை உயிரோடு
தின்றுவிட்டு - என்பக்கம்
பார்வை திருப்பிய
பசுவொன்றின் நாக்கிற்கு
கட்டளைகள் பிறப்பித்து
காப்பாற்றியவன் யார் ?

நிழலின் குடைக்குகீழோ
நீரின் உடைக்கு கீழோ
நின்ற பொழுதுகளில் - என்
சமையலறையின் - கதவு
திறந்து - பச்சையம்
நிரப்பிவிட்டு - நான் விக்கித்
தவிக்காமலிருக்க - தலைக்குமேல்
தண்ணீரும் வைத்தவன் யார் ?

வயதாகி பழுத்துப் போனபின்
கீழிறங்கும் என்னுறுப்பை
தாங்கிப் பிடிக்கவோ - துக்கம்
தாங்காமல் அழவோகூட
திராணியின்றி திரிந்தபோது
ஆறுதல் கூறியது யார் ?

மழையும் வெயிலும்
பனியும் புயலும்
கட்டித்தழுவி - கடந்துவந்து
வருடங்களை தின்று
வளர்ந்து நிற்கிறேன் - என்னுள்ளும்
என்னாலும் ஏகப்பட்ட
உயிர்கள் உண்டு...!
மகிழ்கிறேன் கண்டு !

நன்றி மறவா மரமது...!
ஆம்...இன்றும் தன்மேல்
உட்கார வரும்
காக்கையின் யாக்கையை
சுமையாக நினைத்து - கைகொண்டு
தட்டி விடுவதில்லை !
சுகமாக நினைத்து ...
தடவிக் கொடுக்கிறது...!

அம்மரம் தன்னை பற்றி
எழுதச் சொல்லி
நிழல் கொடுத்து
எழுந்து நிற்கிறது ஏதுவாய் !
வர்ணிக்க ஏது வாய் ?

எழுதியவர் : வினோதன் (10-Jan-13, 11:23 am)
பார்வை : 139

மேலே