வாழ்த்து அட்டை !
குறுக்குக் கரும்புகளும்
நடுவே - பொங்கும்
பசும் பானையும்...
மேலே சூரியனும்
இரண்டு மாடுகளும்
இல்லாத காற்றில்
பறக்கும் பறவைகளும் - ஓர்
விவசாயக் குடும்பம்
அழகாய் ஒரு புறமும்.....
சப்பாத்திக்கள்ளி
பழத்தை - சிவப்பு
மையாக்கி - செந்தமிழாள்
அனுப்புனர், பெறுநர் கிறுக்கி
கோடிட்ட ஒருபுறமும்...
ஒருங்கே கலந்த அட்டையை
சிவப்பு பெட்டிக்குள்
சிறைவைக்கப் பிடிக்காமல்
நீ - அசந்த நேரத்தில்
உன்னை அசரவைக்க
உன் - கணிதப் புத்தகத்தில்
வெண்படங்களுக்கு நடுவே
நட்டு வைத்த - என்
பொங்கல் வாழ்த்து
கிடைத்ததா நட்பே ?
முகத்திலோ
முகப் புத்தகத்திலோ
குறுஞ்செய்தியிலோ
அலைபேசியிலோ
ஆங்கிலம் விடுத்து
அச்சுவெல்ல தமிழால்
அன்பை தொடுத்து
அம்புகளாய் வாழ்த்து
வீசுவோம் வாருங்கள் !
(எழுத்தால் எழுந்த எனதருமை உறவுகளுக்கு, எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!)