மலட்டுக் குரங்குகளுக்குச் சவுக்கெடுக்கிறேன்.....

வாசகங்கள் கடந்திருப்போம்
புற்களில் நடக்காதீரென்று......
பச்சைப் போர்வைகளுக்கே
வலிக்குமெனில் பாவம்.....
பூக்களுக்கு......?

அமிலமிருப்பது
உலோகம் உருக்க
உணவைச் செரிக்க....
உறுப்பைச் சிதைப்பதற்கல்ல....!

வேதியியல் வினை நிகழ்வு
நல்ல காதலிலும்
கலவியிலுமாயிருக்க வேண்டும்...
பூக்களில் இறைத்துப்
பொசுக்குவதற்கல்ல......!

அண்டா அண்டாவாய்ப்
பொழிவதற்கு அன்பிருக்க
எதற்குத் தூக்கியோடுகிறாய்
அமிலக் குப்பிகளை...?

வாரியிறைத்து ஊற்றுமுன்
ஒரு துளி... ஒரேயொரு துளி
உன் கண்ணில் விட்டு ரசி....
போதவில்லையெனில்
ஒரு குவளையளவெடுத்துக்
குடி....
இன்புற்று உயிர்த்திருப்பாயெனில்
சாரல்களாய்த் தூவிக்கொள்
என் தாய் நகல்கள் மீது..

மழை நனைத்த
மங்கை முகம் கண்டுணர்ந்து
கண்மூடு..
தேவதைகள் உன் காதுகளில்
ஆரூடம் பாடுவார்கள்.....
தேவதைப் பிறவிகளுக்கு
திராவகச் சூனியம் வேண்டாம்....!

இந்த பூலோக எமன்களுக்கெதற்கு
சிறையிலடைத்துச் சோறும்
கூண்டிலடைத்த கேள்விகளும்..?
பௌர்ணமிகள் பிளந்தவனின்
முகாந்திரமுணர்ந்து
கிரீடம் சூட்டி சூடம் காட்டவா...?
நீதிச் சிவன்களே...
அன்றொருநாள் மட்டும்
கூர்க்கம்பியெடுத்து ஹமுராபியென
பெயரிட்டுக் கொள்ளுங்கள்.....

பெற்றவளும் பெண்ணென்னும்
பழஞ்சொல் புளித்தால்
மண்டையோட்டுக்குள் வெறும்
வெள்ளைக் குழைவு நிரம்பியவனே...
நினைவொன்றிருந்தால் அதில்
நிறுத்திக்கொள்...
உனக்குப் பிறப்பதும்
ஒரு பெண் பூவாய் இருக்கலாம்......

எழுதியவர் : சரவணா (14-Jan-13, 7:22 pm)
பார்வை : 155

மேலே