அறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்

வெள்ளாமை விதைக்கையிலே வாய்க்கால் வரப்போரம்
வார்த்தைகளைப் பரிமாறி நாம்
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
மலையேறிப் போச்சோ மச்சான்


மட்டக்களப்பு வாவியிலே வடிவான இறால் பிடிச்சு
மீன்பாடும் பாட்டினிலே மெய்மறந்து நாமிருந்து
கடலோரம் கருவாடு காயவைக்கும் பொண்டுகள
கண்டு நாம் பதுங்கியதும் போடியாரு புள்ள என்று
பொண்டுகள் சேர்ந்திருந்து புறுபுறுத்துப் பார்த்ததுவும்
குறுக்கால போன கடற்படையைக் கண்டு நாம் பதறியதும் கலங்கிவந்து மறுகா நாம் படகுக்குள்ள பதுங்கியதும்
மறந்திடுச்சோ மச்சான்

திராய்க் கீரை சாமத்தில் புடிங்கிவந்து
சுண்டலிலே மீன் போட்டுச் சுண்டியதும்
புடிச்சுவந்த இறால் போட்டுப் புளிஆணம் பண்ணியதும்
விறாந்தையிலே நாமிருந்து உண்டசுகம் அத்தனையும்
உதவாமப் போனதுவோ மச்சான்

ஒண்ணா, ஒண்ணா என்று நீ ஓடியதும்
பொன்னான உன் ஊரு விட்டு போக பதறியதும்
கொள்ளிக்கட்டை அடி வாங்கி குதித்து நீ
மதிலுக்குப் பிறகால கிறுகிப் பாய்ந்ததுவும்
பின்னால வந்த அப்பூச்சி பிடித்துன்ன அனுப்பியதும்
புரியாமப் போச்சோ மச்சான்

தாய்நாட்டுச் சொந்தமெல்லாம் தகுதி இழந்ததுவோ
சேர்ந்துநின்ற எங்களுக்கு செவ்வாய் பகைச்சிடுச்சோ
நாவூறு கண்ணூறு நல்லாப் பட்டிடுச்சோ
வெளிநாட்டுச் சோறெல்லாம் மருந்துபோட்டுச் சமைச்சதுவோ
உறவுகளைப் பிரிச்செடுக்க உதவியா இருந்திடுச்சோ
ஒரு மரமாய் வாழ்ந்திருந்தோம் உறவுகளை வளர்த்திருந்தோம்
ஆணிவேர் அறுந்ததுவோ அந்நியமாய்ப்போனதுவோ
வருகின்ற தீபாவளி வருவாய் நீயென்று
வழிவழியாப் பாத்திருக்கன் வருகின்ற சேதியொன்று
வசந்தமாய் வாராதோ! வந்தென்னைப் பாராயோ!


மறுகா - பிறகு
குறுக்கால - இடையில்
போடியார் – வயல் சொந்தக்காரர்
விறாந்தை – திண்ணை
வெள்ளாமை – வயல்
சாமம் - நடுஇரவு
கண்ணூறு, நாவூறு,
கொள்ளிக்கட்டை - விறகு
ஆணம் - ஒருவகை பால்க்கறி
கிறுகி - திரும்பி
ஒண்ணா - முடியாது
பொண்டுகள் - பெண்கள்

எழுதியவர் : kowsy2010 (17-Jan-13, 10:39 pm)
சேர்த்தது : KOWSY2010
பார்வை : 139

மேலே