அது அவர்களின் அழகான உலகம்

• தாத்தாவின் மேல் துண்டை
வேட்டியாக கட்டிக்கொண்ட
அவன்தான் அப்பாவாம்.

• அக்காவின் தாவணியை
சேலையாக சுற்றிக்கொண்ட
அவள்தான் அம்மாவாம்.

• 8 வயது அப்பாவுக்கு
6 வயதில் மகளாம்
• 7 வயது அம்மாவுக்கு
4 வயதில் மகனாம்.

• அப்பா வேலைக்கு போவாராம்
அம்மா வழக்கம்போல் சமைப்பாளாம்.

• குட்டி குட்டியாய் செப்பு வைத்து
கூழாங்கற்களை அடுப்பாக்கி
மண்ணை அரிசியாக்கி
மற்றதெல்லாம் காயாக்கி
சமையல் நடக்குமாம்.

• ஆக்கி முடித்ததும்
போனது போல் போன அப்பா
வீட்டுக்கு திரும்புவாராம்.
“ உனக்கு கொஞ்சம் , எனக்கு கொஞ்சம்“
என்று பந்தி பரிமாறப்படுமாம்.

• பார்த்துக் கொண்டிருந்த
நானும் கை நீட்டினேன். “எனக்கு?”

பரஸ்பரம் பார்த்துக் கொண்ட
அப்பா , அம்மாவிடம் சொன்னார்.
“பாவம்பா அந்த அங்கிள் , கொஞ்சூண்டு குடுத்துடு…”

• பிஞ்சு கையால் அம்மா தந்த
மண் சோற்றை
உண்டது போல் உண்ட போது
அமிர்தமாய் வயிறு நிறைத்(ந்)தது
கூடவே மனசையும்

குழந்தைகள் ஆக்கிய
கூட்டாஞ்சோறு.

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன் (18-Jan-13, 1:17 pm)
பார்வை : 94

மேலே