சமாதியை தாண்டி சாதி
எமலோகம் நோக்கி
எடுத்தேன் நெடும்பயணம்!
குவிந்திருந்தது
என்னை வாழ்த்தி வழியனுப்ப
பெரும் பட்டாளம்!
ஒற்றுமையாய் உறவுகள்
வேற்றுமை மறந்து
என் பகைவர்கள்!
அலங்கரித்து வைக்கப்பட்டது
ஆணவமும் அதிகாரமுமாய்
வாழ்ந்த உடல்...
பிணத்துக்கான
பாடை கட்டியாயிற்று....
உடைப்பதற்கான
கொள்ளிப்பானை தயாராயிற்று....
பூக்களோடு தொடங்கியது
சவ ஊர்வலம்...
வாழ்ந்தபோது
புழுதிவாரி தூற்றியவர்கள்
புகழ்வாரி ஏற்றுகிறார்கள்!
குழந்தைதனமாய் சிரிக்கிறது
கூடு விட்டு போகும் ஆவி
இதோ
இடுகாட்டில் இறக்கப்படுகிறது
சவம்....
சவத்தை மண்ணுக்குள் மூடிவிட்டு
திரும்புகிறார்கள்
சக மனிதர்கள்....
எள்ளுதண்ணி இரைத்து வைத்த
பிண்டச் சோற்றுக்காய் விழும்
காகத்தை கவனிக்க கூட
யாருமில்லை.....
வேகமாக முட்டுகிறேன்
எமலோக கதவை!
பூட்டை திறக்க மறுக்கிறது
எமலோகம்!
ஏனென்று கேட்டால்....
பூலோகத்திலிருந்து
சாதிச் சான்றிதழ் வேண்டுமாம்!
இங்கும்
நியாயத் தீர்ப்பு தொடங்குகிறது
சாதிவாரியாகவே!!!