பழிக்குப் பழி

பழிக்குப் பழி
(சிறுகதை)
அவன்…பிரபு.

பெங்களுருவில் ஸாப்ட்வேர் என்ஜினீயர். கை நிறைய சம்பளமும் மனம் நிறைய வசதிகளும் ஒருங்கே பெற்றிருக்கும் பேச்சிலர் பாய். ஆறு மாதங்களுக்கொரு முறை கோவை வந்து தன் அண்ணன் வீட்டிலிருக்கும் தாயாருடன் இரண்டு மூன்று நாட்களைக் கழித்து விட்டுச் செல்வான். வுழக்கமாய் பஸ்ஸிலோ….இரயிலிலோ..வருபவன் இந்த முறை தான் வாங்கியிருந்த புதுக்காரில் வந்திறங்கி அனைவரையும் பெருமைப் படுத்தினான்.

“டேய்…பிரபு!...நானும் பார்த்திட்டேன்…ஒவ்வொரு தடவையும் வந்தா…ரெண்டே ரெண்டு நாள்தான் தங்கறே…அதிலேயும் பாதி நேரம் சிநேகிதகாரனுக வீட்டுக்குப் போய் உட்கார்ந்திட்டீன்னா எப்படிடா?” காலையில் கிளம்பும் போதே அம்மா சொன்னது ஞாபகத்தில் வர நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் வீட்டிலிருந்து கிளம்பினான் பிரபு

மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது யாரோ நாலு பேர் குறுக்கே வந்து வண்டியை நிறுத்தச் சொல்ல வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு பார்த்தான். யாரோ ஒரு மனிதர் நடு ரோட்டில் மல்லாக்கக் கிடந்தார். “ஆக்ஸிடெண்டா?...இல்லை வேற ஏதாவது அடிதடிக் கேஸா?”

“சார்…யாருன்னே தெரியலை சார்….நடந்து வந்துக்கிட்டிருந்தார்….திடீh;னு மயக்கம் போட்டு விழுந்திட்டார்…நாங்களும் தண்ணி தெளிச்சுப் பார்த்துட்டோம்….ம்ஹூம்…எழுந்திருக்கற மாதிரித் தெரியலை!” கூட்டத்தின்; முன்னாலிருந்தவன் அவசரமாய்ச் சொல்ல

“ஆமா சாரு…உடனே ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டுப் போனாத்தான் சாரு ஆளு பொழைக்கும்!” கூடைக்காரியொருத்தி ஒத்து ஊதினாள்.

தரையில் கிடந்த மனிதரை மீண்டுமொரு முறை கூர்ந்து பார்த்த பிரபுவின் மூளைக்குள் பளீரென்று அந்த ஞாபகம் வந்தது. “இவன்….இவன்…ம்ம்ம்…ஆட்டோ…கனகு…கரெக்ட்.அவனேதான்!”

பிரபுவின் சிந்தனையோட்டம் பத்தொன்பது வருடங்கள் பின்னோக்கிப் பறந்தது. அப்போது பிரபுவிற்கு பத்து வயதிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பூஜையில் இருந்த அப்பா திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து துடித்தார்..அவர; உடம்பிலிருந்து வியர்;வை ஆறாய்ப் பெருகியோடியது. அப்போது பிரபுவின் அண்ணன் நாலு வீடு தள்ளியிருக்கும் ஆட்டோ கனகுவின் வீட்டிற்கு ஓடிச் சென்று “அப்பாவை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லவேண்டும்..வண்டியை எடுங்க!” என்று சொல்ல தன் சோம்பேறித்தனத்தின் காரணமாக அந்தக் கனகு வர மறுக்க வேறு ஆட்டோ தேடி அண்ணன் மேலும் மூணு கிலோமீட்டர; ஓடிச் சென்று படாதபாடு பட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து வந்தார். ஆனால் அதற்குள் பிரபுவின் அப்பாவின் தலை தொங்கிப் போனது. ஆனாலும் ஒரு அங்கலாய்ப்பில் அப்பாவைத் துhக்கி ஆட்டோவில் போட்டுக் கொண்டு அம்மாவையும் பிரபுவையும் அதே ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் பறந்தார் பிரபுவின் அண்ணன். ஒரு நெடிய சோதனைக்குப் பின் “ஸாரி சார்…அவர் ஏற்கனவே இறந்திட்டார்..”என்று சொன்ன டாக்டர் இன்னொன்றையும் சொன்னார். “அவர் மயங்கி விழுந்ததும் உடனே கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா…கண்டிப்பா காப்பாத்தியிருக்கலாம்!...ஜஸ்ட் ஒரு சின்ன தாமதம் அவர் உயிரைப் பறிச்சிட்டுது!”

அண்ணனும் அம்மாவும் அந்த ஆட்டோ கனகுவை கண்டமேனிக்கு சாபம் விட்டுத் தள்ள பிரபுவின் மனதில் அது ஆட்டோ கனகுதான் தன் தந்தையின் சாவுக்குக் காரணம் என்று பதிவானது.

அன்றிலிருந்து இந்த ஆட்டோ கனகுவைப் பார்க்கும் போதெல்லாம் பிரபு “டேய்..நாயே!...நீதாண்டா எங்கப்பாவைக் கொன்னவன்!...இருடா…நான் பெருசாகி வந்து உன்னைப் பழிக்குப்பழி வாங்கறேன்!” என்று உள்ளுக்குள் பொருமுவான்.

அதற்குப் பிறகு கல்லுhரிப் படிப்பு கேம்பஸ் இன்டர;வியூ ஜாப் போஸ்டிங் என்று முழுக்க முழுக்க வெளியூரிலேயே வாசம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட எல்லாவற்றையும் மொத்தமாய் மறந்து போயிருந்தான் பிரபு.

இன்று அதே ஆட்டோ கனகு அப்பா அன்று கிடந்த அதே நிலையில்….

“சார்…என்ன சார்….யோசிக்கறீங்க?...லேட் பண்ணாதீங்க சார்!...ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்!”

“இந்த லேட் கூட அந்தாளு சாவுக்குக் காரணமானாலும் ஆய்டும் சார்!”

ஒரு சிறிய யோசனைக்குப் பின் “ஓ.கே!...துhக்கிட்டு வாங்க!”

காரின் பின் சீட்டில் ஆட்டோ கனகு படுக்க வைக்கப்பட “யாரு கூட வர்றது?”

பிரபு அந்தக் கேள்வி கேட்ட மறு நிமிடம் அங்கிருந்த கூட்டம் போலீஸ் தலையைக் கண்ட போராட்டக்காரங்களாய் தாறுமாறாய் ஓடியது.

கடைசியாய் நின்றிருந்த ஒருவன் “சார்…யாரும் வர மாட்டாங்க சார்!....நானும் கூட வர மாட்டேன் சார்!....நீங்களும் கூட ஒண்ணும் பண்ண வேண்டாம்…போற வழில ஜி.ஹெச்.ல தள்ளிட்டு நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருங்க!” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

மெலிதாய்ச் சிரித்துக் கொண்ட பிரபு காரை நிதானமாய் கிளப்பினான்.

நகரின் மத்தியிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த ஆட்டோ கனகுவை அட்மிட் செய்து விட்டுக் காத்திருந்தான். டாக்டர்கள் சொன்ன அத்தனை உயர் ரக சோதனைகளுக்கும் தானே பணம் செலுத்தி “ஓ.கே!” சொன்னான்.

மாலை வரை நடந்த தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு சீஃப் டாக்டர் தன் முன் வழுக்கையில் பூத்திருந்த வியர்வை மொட்டுக்களைத் துடைத்தவாறே சொன்னார். “வெரி குட் மிஸ்டர் சரியான சமயத்துல கொண்டு வந்து சேர்த்தீங்க…ஒரு நிமிஷம் லேட் ஆகியிருந்தாக் கூட அவரோட உயிரைக் காப்பாத்தியிருக்க முடியாது!”

பதிலேதும் பேசாமல் டாக்டரையே ஊடுருவிப் பார்த்தான் பிரபு.

“ம்ம்…நீங்க…அந்தப் பேஷண்ட்டோட…மகனா?...இல்ல ரிலேட்டிவா?”

“இல்ல சார்…அவர் எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர்…அதான்…!”

“ஓ…குட்…குட்!”

இரவு வரை இருந்து எல்லாத் தொகைகளையும் செட்டில் செய்து விட்டு, ஒரு கால் டாக்ஸியையும் ஏற்பாடு செய்து அங்கிருந்த நர;ஸிடம் “சிஸ்டர்…நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும்….கால் டாக்ஸி சொல்லியிருக்கேன்…இப்ப வந்திடும்…அது வந்ததும் அவரை எங்க போகணும்னு கேட்டு அனுப்பி வெச்சிடுங்க சிஸ்டர்” சொல்லி விட்டு வீடு நோக்கிப் பறந்தான் பிரபு.

“ஏண்டா…போகும் போதே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்… சீக்கிரம் வந்திடுடா!”ன்னு” அம்மா திட்ட அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் போட்டோவை நெகிழ்வுடன் பார்த்தான் பிரபு.


(முற்றும்)

எழுதியவர் : முகில் தினகரன் (20-Jan-13, 2:43 pm)
பார்வை : 85

மேலே