கண்ணகியாய் நிலவு !

புன்சிரிப்பு தினம் தவழும்
வெண்ணிலவின் முகமின்று
கண்சிவந்துத் தேம்பி அழும்
காரணத்தைக் கேட்டு வர
தோள்தட்டி எனைத்துரத்தும்
தேவதைகள் ஆணைப்படி
புரவியேறிப் புறப்பட்டேன்
வெண்ணிலவின் வீடடைந்தேன் !

தாய்வீட்டு சீதனமாய்
வின்மீன்கள் உனக்குண்டு
நோய்தொட்டு போனதுபோல்
களையிழந்து காண்கின்றாய்-உன்
குறையென்ன கண்மணியே
வெந்நீரை வார்த்தது போல்
வேகுதடி என் நெஞ்சம்
மறைக்காமல் மெய் சொல்வாய்
எனதருமை பெண்ணிலவே !

நேற்றுமுதல் காணலையே
கண்ணானக் காதலனைப்
பாட்டிசைத்தழைக்கின்றேன்
வரவில்லை மன்னவனும்
போயிருப்பான் பூமிக்கு
என்றெனக்கு சந்தேகம்
போய் நீ தேடப்பா-என்றென்னைக்
கேட்டிற்று பூமகளாய் வெண்ணிலவும் !

பூமிக்கு வந்தவுடன்
பலதேசம் நான் சென்று
கண்டேனே நான் அவனை!
வானாண்ட மன்னனவன்
நிலவுக்கும் கணவனவன்
பேயாளும் நாட்டிற்கு
ஏன் தேடி வந்தானோ ?

பொல்லாத மாந்தர்களின்
குடிப்பழக்கம் உடன் கற்று
தள்ளாடி கீழேயவன்
சவமாகிக் கிடக்கின்றான் !

இறந்தானே உன் கணவன்
என்று நான் சொன்னவுடன்
பறந்தோடி வந்தாயே
உத்தமியே வெண்ணிலவே !
உன் ஒப்பாரி சப்தங்கள்
இனியுனக்கு உதவாது
திருந்தாதத் திருடர்களின்
செவியிரண்டில் சேராது !

மீளாதத் துயரத்தில்
ஆழ்தியுனைச் செய்தவரை
வாளேந்தி நீயுடனே
வீறுநடை போட்டு வர
நாடாளும் சமூகமிது
குலை நடுங்கிப் போகட்டும் !

பாண்டியன் அவையொன்றில்
காற்சிலம்பு தூக்கி வந்து
போட்டுடைத்த கண்ணகிபோல்
உன் மன்னவனின் சிதைஎடுத்து
விழியிரண்டில் சினம்கொண்டு
வீதியுலா வந்துவிடு
நீதிகேட்டு கயவர்முன்
கோட்டையிலே போட்டுவிடு !

கற்புக்கரசியவள்
சாபமிட்டு போனதினால்
பற்றியெரிந்ததாம் மாமதுரை-அவ்வாறே
விண்ணரசி நீயுமிந்த
மாநிலத்தை சபித்துவிடு -எல்லாம்
சாம்பலாகிப் போகும்வரை
தீவைத்துக் கொளுத்திவிடு !

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (21-Jan-13, 12:19 pm)
பார்வை : 104

மேலே