பொய்களும் மருந்தாகலாம்

பொய்களும் மருந்தாகலாம்…
(சிறுகதை)

அந்தத் தனியார் மருத்துவ மனையின் வராண்டா பெஞ்சில் சோகமாய் அமர்ந்திருந்தான் அவன். 'பாவம்…இவனுக்கு என்ன இழப்போ…என்ன துயரமோ?,” என்று யோசித்தபடியே சென்று அவனருகே அமர்ந்தேன். இயல்பாகவே பிறர் சோகத்தைக் காணப் பொறுக்காதவன் நான். யாராவது…எங்காவது சோகத்தில் மூழ்கியிருக்கக் கண்டால் நேரடியாக அணுகி அவர்களுடன் எப்படியாவது பேசி…எதையாவது சொல்லி அவர்களது சோகத்தை என்னால் முடிந்த மட்டும் குறைக்கவோ…அல்லது இல்லாமலே போகச் செய்யவோ முயற்சிப்பேன்.

'என்ன தம்பி…நமக்கு எந்த ஊரு?” தணிவான குரலில் பேச்சை ஆரம்பித்தேன்.

'காரமடை”

'ஓ…அப்ப நம்மூருப் பக்கந்தான்…பலே…பலே… அது செரி…என்ன சம்சாரத்துக்குப் பிரசவமா?....சுகப் பிரசவமா..ஆயுதமா?…ஆணா…பெண்ணா?”

'அதெல்லாம் சுகப் பிரசவம்தான்….ஆனாலும் கர்மம்…பொட்டைப் புள்ளையை அல்ல பெத்துப் போட்டிருக்கா…சனியம் புடிச்சவ…”

'ஓ….அதுதான் உங்க சோகமா?”

'பின்னே?…எங்க பரம்பரைல தலைச்சன் எல்லாருக்கும் ஆம்பளைப் புள்ளைதான்…ஹூம்..எனக்குத்தான் இப்படி ஆகிப் போச்சு…இனி எந்தச் சொந்தக்காரப்பய என்னை மதிப்பான்?”

எனக்கு வியப்பாகவும் சற்றுக் கோபமாகவும் இருந்தது. அதென்ன முதல் குழந்தை பெண் குழந்தையாப் பொறக்கறது அவ்வளவு கேவலமா?…உண்மையைச் சொல்லப் போனா அதுதான் மங்களகரமான விஷயம்…அப்படி அமையக் குடுத்தில்ல வெச்சிருக்கணும்?…ஹூம்…அங்கங்க எந்தப் பிரச்சினையுமே இல்லாம பிரசவம் ஆகணும் ….பெரிய உசுரு…சின்ன உசுரு…ரெண்டும் நல்லவிதமாப் பொழச்சி வரணும்” ன்னு விழுந்து விழுந்து வேண்டிக்கறாங்க…இந்தாளு என்னடான்னா..சுகப் பிரசவம் ஆகி…தாயி சேயி ரெண்டுமே சுகமாய் இருந்தும்…ஒரு உப்புப் பெறாத விஷயத்தைப் பெரிசா நெனச்சுக்கிட்டு இப்படிக் கப்பலே கவுந்த மாதிரி உட்கார்ந்திட்டிருக்கானே…இவனை எப்படிச் சமாதானப்படுத்தி..சாந்தமாக்கறது?

யோசித்தேன். 'ஆங்…கரெக்ட்….அதான் ஒரே வழி..”

'ப்ச்….உங்க பாடு தேவலை தம்பி…எப்படியோ தாயும் புள்ளையும் எந்தவிதச் செதாரமும் இல்லாமத் தப்பிச்சுக்கிட்டாங்க…எல்லாம் நீங்க செஞ்ச புண்ணியம்…ஹூம்…நான் என்ன பாவத்தைச் செஞ்சு தொலைச்சேனோ தெரியலை எனக்கு இப்படியாயிட்டுது…” என் முகத்திற்கு சோக முலாம் பூசிக் கொண்டேன்.

'அடடே…என்ன….என்ன ஆச்சுங்க உங்களுக்கு?” அவன் தன் சோகத்தை மறந்து என் சோகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமானான்.

'நானும் என் சம்சாரத்தை பிரசவத்துக்காகத்தான் கொண்டாந்து சேர்த்தேன்….பிரசவம் ரொம்பச் சிக்கலாகி..கத்தி போட்டு ஆபரேஷன் பண்ணித்தான் கொழந்தைய வெளிய எடுத்தாங்க….குழந்தை பொழைச்சிடுச்சு…ஆனா…ஆனா….என் சம்சாரம் என்னை விட்டுட்டுப் போயிட்டா தம்பி” குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தேன்.

அவன் தன் நிலை மறந்து என்னை ஆறுதல்படுத்தினான்.

'அவ மேல் உசுரையே வெச்சிருந்தேன் தம்பி….இப்படி ஒரு பொட்டைப்புள்ளையைப் பெத்து என் கையில் போட்டுட்டு போயிட்டாளே தம்பி…இனி நான் என்ன பண்ணுவேன்…தனியாளா எப்படி அதை வளர்ப்பேன்”

என் தோளைத் தொட்டு என்னைச் சமாதானப்படுத்தியவன் முகத்தில் ஒருவித தெளிவு தெரிந்தது. 'நல்லவேளை நம்ம பொண்டாட்டியும் இவன் பொண்டாட்டி மாதிரி பொட்டைப்புள்ளையைப் பெத்து நம்ம கைல போட்டுட்டுப் போகலை…அய்யோ…அப்படியெல்லாம் ஆகியிருந்தா…கடவுளே நெனச்சுப் பார்க்கவே பயமாயிருக்குடா சாமி…”

அவன் மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் இலக்கே அதுதானே?

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் மெல்ல எழுந்து 'சார்…பாதைல எப்படி மேடு பள்ளங்கள் இருந்திட்டே இருக்கோ அது மாதிரி மனுசன் வாழ்க்கைலேயும் இன்ப துன்பங்கள் இருந்திட்டேதான் இருக்கும்…நாம மனச தளர விடக்கூடாது…நம்ம பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கணும் சார்…” என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு தன் மனைவியைக் காண அவன் செல்ல, அவன் நடையில் உற்சாகம் தெரிந்தது.

'ஆங்…இதை…இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அவன் சென்ற பின் சில நிமிடங்கள் கழித்து வந்த என் மனைவியின் நிறைமாத வயிற்றைத் தொட்டுப் பார்த்தபடி 'டாக்டர் என்ன சொன்னாரம்மா?” கேட்டேன்.

'எல்லாம் நல்லபடியா இருக்காம் இன்னும் பத்து நாள்ல பொறந்திடுமாம்…அது செரி இங்க உட்கார்ந்திட்டிருந்த ஆளோட ரொம்ப சீரியஸாப் பேசிட்டிருந்தீங்களே யாரு அவரு?…உங்க பிரெண்டா?”

'யாருக்குத் தெரியும்?…மனுசன் சோகத்துல இருந்தார்…நான் கொஞ்சம் பேசி…அதாவது பொய் பேசி…அந்த சோகத்தை மாத்தி அனுப்பிச்சேன்”

'பொய் பேசியா?…என்ன சொல்றீங்க…ஒண்ணுமே புரியலை…”

'ம்ம்ம்ம்…அது இப்ப வேண்டாம்டா..பிறகு சொல்றேன்…”

அவள் என்னை ஊடுருவிப் பார்க்க,

'வேணா…இப்போதைக்கு ஒண்ணு மட்டும் சொல்றேன்…சில சமயங்கள்ல சில காயங்களுக்கு பொய் கூட நல்ல மருந்தாகுது”

'அய்ய ரொம்ப தத்துவப் பித்தரா மாறாதீங்க…என்னால முடியலை”

'அப்பக் கௌம்பு…போகலாம்”

இருவரும் கிளம்பினோம்.

(முற்றும்)

எழுதியவர் : முகில் thinakaran (23-Jan-13, 12:08 pm)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 72

மேலே