மனிதருள் மாணிக்கம் பிறந்தனரே.!
அரபு தேசம் தோன்றிய
அற்புத அஞ்ஞான அகற்றியே
மெக்கா நகர் பிறந்த
மெய்யான மெஞ்ஞான மேதையே
வீணென்று போன அறியாமை காலத்தின்
வியத்தகு விஞ்ஞானமே.
கருவின் உருவிலே
தந்தையை இழந்தீர்
பச்சிளம் பருவத்திலே
தாயையும் இழந்தீர்
தள்ளாத வயது தாத்தாவால்
தாரணி சிறக்க வளர்ந்தீர்
நேர்மையின் மறுவுருவாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்தீர்
வாய்மையில் விஞ்சி நின்று
வையப் புகழ் அடைந்தீர்
"அல்-அமீன்" என்ற பெயரெடுத்தே
பகைவரும் போற்றும் வண்ணம் திகழ்ந்தீர்
பண்பின் பனிக் குன்றாய்
பாரெங்கும் உயர்ந்து நின்றீர்
அன்பின் அகராதியாய்
அர்த்தங்கள் யாவும் பொழிந்தீர்
கருணையின் பெருங்கடலாய்
காரிருள் போக்கும் ஒளி தந்தீர்
விதவைகள் முடங்கிய காலத்தில்
அவர்க்கும் மறு வாழ்வு தந்தீர்
ஹீரா குகையில் பெற்ற பெரு ஞானத்தில்
இறைத்தூதர் தாம் என அறிவித்தீர்
எழுதப் படிக்கத் தெரியாத போதும்
எழில் மறை ஏந்தித் தந்தீர்
ஏகன் ஒருவன் என்றே
ஏகத்துவம் எடுத்துரைத்தீர்
எப்போதும் தம்மை இறைவனென்று
சொல்லாமல் மெய்யுரைத்தீர்
எதிர்த்து நின்றவரையெல்லாம்
ஏக மனதாக ஏகத்துவம் ஏற்க வைத்தீர்
எதிரியையும் மன்னித்து
மாமனிதராய் உயர்ந்து நின்றீர்
பொன்னும் பொருளும் குவிந்த போதும்
பசி பட்டினியில் வாழ்வை ருசித்தீர்
பொறுமையின் பிறப்பிடமாய் இருந்து
அருமைகள் பலவும் வென்றீர்
முழு மனித சமுதாயத்துக்கும்
முத்து நபியாய் வந்து பிறந்தீர்.