அன்பு

மங்கிய ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்...

அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும்
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று...

எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய்
எங்கள் பிடித்தத்தை பற்றிய
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை...

எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை...

என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்....

நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

எழுதியவர் : (4-Feb-13, 6:12 pm)
Tanglish : anbu
பார்வை : 111

மேலே