கருத்தப் பாண்டி (தொடர் )---பகுதி :16

@@@@@@@@@@@@

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
சங்க ஒற்றுமை ஜிந்தாபாத்
தீர்த்துவை தீர்த்துவை
கோரிக்கைகளை தீர்த்துவை...

@@@@@@@@@@@@@@@

முழக்கங்கள் முழங்கியதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவானது. கேட்டால்தான் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, தட்டினால்தான் திறக்கும் என்பது மட்டுமல்ல நடுத்தெருவிற்கு வந்தமர்ந்து தங்கள் படிப்பு, தகுதி இவைகளை மறந்து கூக்குரலிட்டு முழங்கிதான் எதையும் அடையவேண்டும் என்ற ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருந்தனர்.

அவர்களின் தீர்க்கப்படாத் கோரிக்கைகள் அப்படி ஒன்றும் மிகவும் பெரியவையோ, மிகவும் இன்றியமையாதவையோ அல்ல! தொண்டர்கள் என்ன செய்வார்கள் பாவம்! தலைவர்கள் வரச்சொன்னால் வருவதும், முழங்கினால் மழைமேகம் கண்ட தவளைகள் கத்துவதுபோல் கத்துவதும் பழக்கமாகிப் போனது.....

“அன்பார்ந்த தொழிலாள தோழர்களே...” சாமி பேசத் தொடங்கியதும் கைத்தட்டல்கள் எழுந்து அடங்கின. வாமன அவதாரத்தை விட ஓரடியே அதிகமான உயரம் கொண்டவன் தான் சாமி ­ அந்த உயரத்திற்கு ஏற்ப தொப்பையும் நன்கு வெட்டப்பட்ட தலை முடியுடன் ஏதோ ஸ்பான்ச் கேக்கின் மீது வைக்கப்பட்ட செர்ரி பழம் போல், கூட்டத்தின் முன் இருந்த ஒரு மர பெஞ்சில் ஏறி நின்றான்!

தனது உரையை துவங்குமுன் கீழே குனிந்து “ஏம்பா வேலு... நாதன் எல்லாம் செட்அப் செய்து இருப்பான் இல்லே” என்று முணுமுணுத்தான்.

“கவலையே இல்லே தலைவரே... மந்திரியை நேரா பார்த்து ராத்திரியே சொல்லியாச்சு... இயக்குநருக்கும் ஒரு வார்த்தைப் போடலாம்னு பார்த்துதான் முடியாமற் போயிட்டுது...”

முடிக்கவில்லை வேலு அதற்குள் கூட்டத்தில் இருந்து “தலைவரே... பேசுங்க... பேசுங்க...” என்று குரல் கேட்டது!

“பேசி பேசி, கேட்டு கேட்டு ஒரு காலத்தில் பாரதம் அந்நிய நாய்களிடம் இருந்து விடுதலைப்பெற்றது. ஜாலியன் வாலாபாக்கில் பேசிய பேச்சும். பகத்சிங் பேசிய பேச்சும், சுப்ரமணிய சிவா பேசிய பேச்சும், பட்டேல் பேசிய பேச்சும் நாட்டு மக்களுக்கு அடிமைத் தளையை உடைத்தெறிய வலிமையைத் தந்தது. எனவேதான் ஒரு பரிபூரண சுதந்தரம் நமக்கு கிடைத்தது. ஆனால் அந்த சுதந்திரம் இன்று என்னவாயிற்று? அன்று தொழிவாளி குரல் கேட்டாலே முதலாளிகள் குரல் கேட்டாலே முதலாளிகள் குறையைத் தீர்த்து வைக்க வரிந்துக்கட்டிக்கொண்டு வந்தனர். ஆனால் இன்று பரிந்து பேசிட, காரியங்களை நிறைவேற்றிட நாம் கூட்டமாய் கூடி முழங்க வேண்டியுள்ளது! நடுத்தெருவிற்கு வரவேண்டியுள்ளது!
யார் இதற்கு காரணம்? ஏன் இன்னும் நம் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படவில்லை? நம்முள் ஒற்றுமை இல்லாத்துதான் இதற்கு காரணம்”

“லே... என்ன பேச்சு பேசறான் இந்த மூதி? ஒற்றுமை பத்தி இந்தப்பய பேசறான் பாரு! ஒண்ணா இருந்தா சங்கங்கள் பலவற்றையெல்லாம் உடைச்சி உடைச்சி குடு குடுப்பைக்காரன் சொக்கா மாதிரி ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கிட்டு இன்னெக்கு என்னமா பேசறான் இவன்” கூட்டத்தில் இருந்த ஒருத்தர் நெத்தியடியாகக் கேட்டார். சற்று பலமாகவே!

காதில் வாங்கிக்கொண்ட சாமி சட்டென்று சுதாரித்துக் கொண்டு மேலும் பேசத் தொடங்கினான், “தோழர்களே... உங்களில் சிலருக்கு சந்தேகம் எழலாம்!... என்னால் பல சங்கங்கள் உடைக்கப்பட்டதாகவும், நான் அப்படி உடைந்து வந்த சிதறல்களில் சிகரம் அமைத்து சிம்மாசனம் அமர்ந்து இருப்பதாகவும் நீங்க நினைத்திடும் வண்ணம் ஒரு தப்பான எண்ணத்தை வீண் வதந்திகளாகப் பரப்பி வருகின்றனர் சில தொழிலாளர் தலைவர்கள்! அவர்களை நம்பாதீர்கள். உங்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்திட இனி தொடர் போராட்டங்களை அறிவிக்க இருக்கிறேன்! இந்த வாயிற்கூட்டங்கள் மூலம் நமது பலத்தைக் கண்டுவிட்ட நிர்வாகம் இனியும் மெத்தனமாக இருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! எச்சரிக்கை விடுகிறேன். நமது முதல் கோரிக்கையான தினக்கூலி உயர்வு இருபது ரூபாயில் இருந்து முப்பது ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும். இதற்காக நிர்வாகத்திற்கு ஏழு நாள் அவகாசம் தரலாம். நமது ஒற்றுமையே நமக்கு வெற்றி... ஒன்றுபடுவோம்... வெற்றியடைவோம்...”

பேசி முடித்து இறங்கின சாமி, நாதனிடம் “என்ன நாதா... இன்னைக்கு ஒண்ணுமே ரெஸ்பான்ஸ் இல்லையே... டல் அடிக்குது” எனக்கேட்டான்.

“என்ன தலைவரே நேத்துக் காலையிலே தானே நமக்குச் செய்தி கிடைத்தது. கவர்னர் கிட்டே தினக்கூலி உயர்வு கோப்பு கையெழுத்துக்கு போயிட்டுதுன்னு...! அதைத் தெரிஞ்சுகிட்டு உடனே ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு பண்ணி, இவ்வளவு கூட்டம்தான் கூட்ட முடிஞ்சுது. நம்ப ஆட்கள் ஊர்ல இல்ல... அதான் ரெஸ்பான்ஸ் கம்மி.

“சரி... நான் போய் இயக்குநரைப் பார்த்து வர்றேன். நீ கூட்டத்திலே பேசிகிட்டு இரு...” சொன்ன சாமி வாசற்படித் தாண்டி இயக்குநர் அறைக்குச் செல்ல காலடியெடுத்து வைத்தான், எதிரில் வந்த சங்கரலிங்கத்தைப் பார்த்து, “இங்கவாப்பா... என்ன ஆச்சு அந்த ப்ரோமோஷன் கேஸ்... பைல் ரெடியாயிட்டுதா? அப்புறம் இந்த வாத்திப்பசங்க டிரான்ஸ்பர் லிஸ்ட் எப்போ ரெடி பண்ணப் போறீங்க?” என்று சரமாரியாய் கேட்டான்.

ஆசிரியர்களை வாத்திப் பசங்க என்று விளிப்பது தான் சாமியின் பழக்கம். அடிப்படையில் அவனும் ஓர் ஆசிரியன் என்பது மறந்து பேசுவதற்கு இந்த சங்கத் தலைவன் என்பது காரணம்.

இவை அத்தனைக்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலுக்கு அளித்து விட்டு இயக்குநர் அறைக்குள் செல்ல முயன்ற சங்கரலிங்கத்திடம், “சரி சரி... இங்க ஒண்ணும் பேச வேண்டாம், ராத்ரிக்கு வீட்டுக்கு வர்ரேன்” என்ற சங்கரலிங்கத்தின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் டாய்லெட் நோக்கி நடந்தான் சாமி.

என்ன பிறவி இவன்... இதுதான் இவன் சாமர்த்தியமோ? எதிராளியிடம் கூடி வலிய பேசி, தான் வாங்கிடும் வசை வார்த்தைகளை வெளியே வந்து பிறரிடம், தான் செமத்தியாக எதிராளியை திட்டி தீர்த்தாக ஜம்பம் அடித்துக் கொள்ளும் சாமியின் போக்கு உண்மையிலேயே நற்குடிப்பிறந்த எவருக்கும் வராது.
தனது சொரணை கெட்ட இந்த குணத்திற்கு “இதுதாம்பா பொலிதிக்ஸ்” என்று சொல்லிக் கொள்வான் சாமி!

“என்ன சங்கரா உள்ளே வந்தவன் அப்படியே நிக்குற” என்ற இயக்குநர் கேள்வியால் தன்னிலைக்கு வந்தவன் “சாரி சார்... வெளியே நடக்குற கூத்தை நினைச்சு.......”.

“திகைச்சு போயிட்டியா?”

“இல்லே சார்... அருவருப்பு வந்துவிட்டது சார். இந்த சாமிக்கு மட்டும் எப்படி சார் இந்த கோப்பு எங்கே போறது. எப்போ போறதுன்னு தெரியுது. ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் இன்னொரு பக்கம் அவமானமாகவும் இருக்குது.”

வெறும் மவுனம் சாதித்தார் அவர்.அந்த மௌனத்தின் அர்த்தம் சங்கரலிங்கத்திற்கு புரியவில்லை. “சார் நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

“இல்லேப்பா... என் இயலாமையை என் முகத்தக்கு நேரா துணிச்சலா சொல்லிட்ட... அதான்...! ஏதும் வழி கண்டுபிடிச்சாக வேண்டும்” அவர் சொல்லி முடிக்கவில்லை, டெலிபோன் மணி ஒலித்தது. பேசி வைத்தார் போனை!

“சங்கரலிங்கம் ஸ்டோர் டெலிவரி ஆகுதாம் நம்ப பிரஸ்லே கல்விமந்திரி பேசுரார் போய் வாங்கிவரனும். ஸ்டாப் எல்லாம் போய் இருப்பாங்களே! என்ன செய்யலாம். இந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லேப்பா...”

“சார்... இந்த பைல் மட்டும் நீங்க பார்த்து கொடுத்துட்டா போதும். நான் போல் வாங்கி வர்ரேன்” இயக்குநரின் பேச்சுக்கு காத்திரக்காமல் உடன் கிளம்பிப் போனான் சங்கரலிங்கம்.

கோயில் வசற்படியில் உள்ளே போனவர்கள் திரும்பி வரும்போது போடும் பிச்சைக்கு காத்திருப்போர் போல சாமி, சங்கரலிங்கம் வெளியே வரம்வரை காத்திருந்தான்.
“என்னப்பா... ஏதும் செய்தி உண்டா” என்று ஆவலாய் கேட்ட சாமிக்கு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு ஜீப்பில் ஏறியமர்ந்து கோடவுன் நோக்கிச் சொன்றான் சங்கரலிங்கம்!

“பாருடா... இந்த சங்கரலிங்கத்திற்கு வந்த வாழ்வை! நம்ம வாத்தியார் இனத்தைச் சேர்ந்தவன்... இன்னைக்கு எப்படி திமிரா வண்டியிலே ஸ்டைலா ஏறிகிட்டுப் போறான்?” கூட்டத்தில் இருந்தோரை வேலு உசப்பி விட்டான்.

கருத்தப் பாண்டி வருவான் மீண்டும்...

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (8-Feb-13, 1:22 pm)
சேர்த்தது : agan
பார்வை : 74

மேலே