வாழ்வின் பின் நிரந்தரம்?

காணப் பிறந்திட்டோம்
. கானகத்தை கடல்நீரைக்
. கடுமழையும் கண்டுணர்ந்தோம்
பேணச் சிறந்தவராய்
. பிள்ளையென நாள்வளர்ந்து
. பேதமை கொண்டுலகிணைந்தோம்
பூணப் பொன்னணிகலனும்
. புத்தாடை ரத்தினங்கள்
. புதுவாசம் தரும் மலர்கள்
வீணென் றுடுத்தியதில்
. விளைவென்ன கண்டோமோர்
. விதிவந்து கொள்ளப் போமாம்

வாழப் பிறந்தழுதோம்
. வாழ்ந்தழுதோம் வாழ்விழந்து
. வீழமுன் கூடியழுதோம்
ஆழக் கொடும்வாழ்வில்
. ஆசைகொண்டு மன்பிற்காய்
. ஆறாது ஏங்கியழுதோம்
கூழைக் குடித்தழுதோம்
. கோலப் பொற்கிண்ணத்தில்
. கொண்டமது வுண்டு அழுதோம்
நாளில் நேற்றழுதோம்
. இன்றழுதோம் நாளையினி
. நாம் படுக்க யார் அழுவார்காண்

எய்து முடல் எமதல்ல
. இருக்குமுயிர் காற்றாகும்
. எல்லாமே இரவல்வாங்கி
பொய்யில் உடல்போர்த்து
. பூவும் துகில்கொண்டு
. புனல்சொரியும் துளைமறைத்து
தெய்யத்தோ மென்றாடி
. திக்கெட்டும் தொலையோடித்
. திரிந்திடத் தெய்வமிடையில்
பொய்யைக் கொள் மெய்யைத்தா
. பூவுலகே என்றிடவும்
. மெய்வீழப் பொய்விட்டோடும்

செயல்போகச் சிந்தைகெடச்
. சுடுமுடலும் எமதல்ல
. சொந்தமே யல்ல அல்ல
வியப்பே நா மென்றாலென்
. விழிகண்டு மொழிபேசி
. விளைந்த உணர்வொன்றே நாமும்
பயத்தோடு இச்சை,சுகம்
. பசி நாணம். பெருங்கோபம்
. பட்டதுயர் இவையே மிச்சம்
மயக்கமிடுங் கனவுணர்வும்
. மழைவானின் வில்லாகி
. மறைய நிஜம் சூனியமன்றோ!

எழுதியவர் : கிரிகாசன் (18-Feb-13, 5:53 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 155

மேலே