நீயா - நானா (காகிதப் பூவும் - தோட்டத்துப் பூவும்)

(தோ.பூ:)
கலை வண்ண தாளின் பூவே
......கதிர் காணும் வானம் இல்லை
......கண் கொண்ட கர்வம் என்னது
அலைந்தோடும் வண்டும்தேனை
......அருந்தாமல் போகும்வாழ்வு
......அதிலென்ன இன்பம் உள்ளது
குலையென்றும் கொத்தாய் பூக்கள்
......குவிந்தாடும் போதே தொட்டு
......குளிர் கொண்ட காற்றும் ஓடுது
நிலை கொண்டதென்னே நீயோ
......நிறந்தானே வாசம் இல்லை
......நிமிர்ந்தாடும் இன்பம் என்னது?

(கா.பூ:)
மகிழ்ந்தாடும் பூக்களெல்லாம்
......மணந்தாலும் வண்டின்தொல்லை
......மனங்கூசத் துன்பம் செய்வது
நிகழ்வான திங்கே இல்லை
......நெருங்காது ஊதும் வண்டு
......நிதம் ஏய்க்கும் வேலை என்பது
அகல்வானின் வெம்மை எந்தன்
......முகம்மீது கொள்ளும் இன்பம்
......அதுபோதும் என்றும் வாழ்விது
இகம்மீதில் காணும் இன்பம்
......ஏகாந்தம் ஒன்றே உண்மை
......இதுபோதும் என்னை விட்டிடு

(தோ.பூ)
படர்ந்தாடும் கொடியின் பூவும்
......பிறந்தாகும் பயனைக்கோவில்
......புகுந்தோடி வாழ்வில் கொள்ளுது
நடந்தாடும் மங்கை கூந்தல்
......இணைந்தாடி நன்மைசெய்து
......நாள்தோறும் இன்பம் கொள்ளுது
அடர்தோங்கும் பூவின் தோட்டம்
......அழகென்னே பல்சேர்வண்ணம்
......இணைந்தங்கு இன்பம் கொள்ளுது
இடம்மாறி உள்ளோர்பூவே
......இவையாவும் இல்லாவாழ்வும்
......எதைகொண்டு நன்மை சேர்க்குது

(கா.பூ)
தொட்டாலுங் குத்தும் முள்ளும்
......தோதற்ற மணமும் சிந்தை
......தூங்கிடச் செய்யும் வாசமும்
கட்டெழில் மங்கை கூந்தல்
......கறுப்பதைத் தூய்மை செய்தும்
......காண்பதில் மாயை கொள்ளவும்
எட்டாத பரமன் மேனி
......தொட்டாலும் தாயின் அன்பை
......விட்டேகும் வாழ்வும் வேண்டிலேன்
மொட்டாக முகிழ்ந்தாலும்பின்
......தொட்டேகும் வண்டால் நொந்து
......பட்டேமண் வீழ்தல் இல்லை காண் !

எழுதியவர் : கிரிகாசன் (3-Mar-13, 6:38 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 137

மேலே