எப்படி முடியும் என்னால்
அன்ன நடை, நடையிளொரு இடை
நாதம், சதங்கை எறிந்த கீதம்,
ஓசையை உருக்கி ஊற்றி ஒத்த
அந்த சிங்காரச்சிரிப்பு அலைகள்.
அருகினில் தடதட தாளமிட்டு
துள்ளியோடிய கானகக் காட்டாறு.
அதில் பதிந்தோடிய பாதங்களின்,
ஒய்யார நாட்டியநடை நடிப்பு.
மலர்ந்த தாமரை, மத்தியில்
தேன்சுவை உண்டு சுழன்று
கவிபாடித் துவண்டு துடிக்கும்
காட்டுக் கருவண்டுக்கண்கள்.
சீலையது மஞ்சளில் சுற்றிவைத்த
பூஞ்சோலை, உன்மடி சாய்ந்து
பூசிக்கொண்ட காதலால் இன்னும்
ஒட்டிக்கிடக்குது அந்த மஞ்சள்.
ஒட்டிய பட்டு, உடல்கட்டி,
வீசிய வைரஒளி, முகம் மின்னி,
மணம் சென்று மயக்கிய மனம்,
பதறினபொழுது நீட்டிய மடிசாய்ந்து,
சொடுக்கிய அந்த விரல்கள்,
அதில் திணிந்த மிஞ்சின மிஞ்சி,
சதைச் சந்தனக்காட்டின் நாற்று,
நாட்டிய உயிரையும் கட்டியிழுத்து
கொண்டாடி வீழ்ந்தது,வீழ்ந்ததுதான்
இன்னும் எழமுடியவில்லை.
ஆண்டு இருபது ஆனபின்னும்.
வீசிக்கொண்டும், வாசம்தந்துகொண்டும்.
பிரிதலின் வலியுணர்த்திட,
உண்மைக் காதல் மொழி உரைத்திட,
தாகம் இன்றியும் நீர்தந்து
மகிழ்ந்தாள், இன்றும் இனித்திட.
கணணி கற்றுத்தந்து, கலவரமாகி
கண்கள் கசியவிட்ட காதலை எடுத்து
கோர்த்து வைத்திருக்கிறேன்,
இன்றும் கொஞ்சமும் குறைந்திடாமல்.
ஆழ்கடலாய் சோகம் இருப்பினும்
அதில் நல்முத்தாய் ஒளிர்ந்த காதல்
நினைந்து, கூட்டிற்கே வந்திட்ட
நின்னன்பு, கண்ணினுள்ளேயே நிற்க.
நானெப்படி என்னை மறைக்க,
கொண்டிருக்கும் உன்னை மறக்க,
ஒட்டிக்கிடக்கும் பசுமர
நிகழ்வுகளைத் துறக்க.