பார் பார்...(அகன் )

காற்று சிநேகிதன் கரம் பற்றி
ஊஞ்சலாடிப் பார்..
உன்னில் எடை இல்லை
என உணர்வாய்...

சேற்று தோழன் மணம் நுகர்ந்து
உறவாடி பார்.....
உன்னில் சோம்பல் இல்லை
என அறிவாய்....

ஊற்றுக் கண் உறவோடு
உள் இறங்கி சுவாசித்துப் பார்
உன்னில் யாசகம் இல்லை
என தெளிவாய்...

மாற்று வழியில் மனமுவந்து
பயணித்துப் பார்
உன்னில் பல திசைகள்
உண்டென உணர்வாய்...

விட்டு விடுதலையாகி பறக்கும்
சிட்டுகளும் பட்டாம் பூச்சிகளும்
உன்னில் வாழ வழி தந்து பார்
விடுதலைக்கான வீரியம்
உன்னிலும் ஒளிர்ந்துள்ளதைக்
காண்பாய்...

கண்டாயா..
வா ...விரல் பின்னு..
என்னுடனும் அவனுடனும்..அவளுடனும்...
இணைய விரிந்த விரல்கள்
தோற்றதாய்
இன்னமும் வரலாறு வரவில்லை...

சாலைக்கு வந்துள்ளாய்
சாதனை படைக்க..
பார்...
பார் உன்னை பார்க்கிறது...
வேர் நீ ..வேறல்ல...

கற்குவியலாய் இரு...
கோபுரமாக்கிக்கொள் . .

கொடியும் உனதே...கொள்கையும் உனதே..
குரலும் உனதே..கோட்டையும் உனதே..
மீண்டும் மலர வை மண்ணில் விடுதலை.....
உலர்ந்த குருதி பொட்டுகளுள்
உள்ளது இன்னமும் ஈர(ழ)ம்...!...


(கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட முழக்க வரிகள்..)

எழுதியவர் : அகன் (16-Mar-13, 6:24 pm)
பார்வை : 110

மேலே