முகாரி - கே.எஸ்.கலை

சின்ன சின்ன சீண்டல்களில் சிலிர்த்துக்கொண்டு
•══•உன்-வண்ணமேனி வீணையாக கீதம்பாடும்,
உண்ண உண்ண தெவிட்டாத அமிழ்தம் தானே
•═•உன்–உரசலோடுவிரசமிலா சில்மிஷமெல்லாம்!
எண்ணி எண்ணி இம்சையோடு வாழும்எனக்கு
•══•ஏன்–இந்தஉயிர் என்றுநானும் புலம்புகின்றேன்!

கத்தி கத்திச் சிலநேரம் கடிந்தாலும்,
•══•என்–கன்னத்தை வருடிவிட்ட விரலெங்கே?
தத்தி தத்தி மனம்திருடும் சிசுவைப் போன்ற
•═•உன்–மருதாணிக் கோலமிட்ட நகமுமெங்கே?
பொத்தி பொத்தி நாம்வளர்த்த காதல் இன்று,
•══•ஏன்-பொசுக்கப்பட்ட காகிதமாய் ஆனதிங்கு?

இழுத்து இழுத்து நீ கடித்துவிட்ட,
•══•என்-இடது கையின் நகங்களும்-
வருடி வருடி நான் கோர்த்துக் கொண்ட,
•═•உன்-வலது கையின் விரல்களும்-
துடித்து துடித்து வன் துயரம்ஊட்ட,
•══•ஏன்–துன்பியலாய் மாறியது நம்வாழ்க்கை!

மலை மலையாய்ச் சேமித்த கனவுகளெல்லாம்
•══•என்–மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிகின்றது!
தாரை தாரையாய்ப் பொழியும் கண்கள் இங்கே,
•═•உன்–தமிழ் போன்ற முகம்தேடி தவிக்கின்றது!
அலை அலையாய்ப் பெருகும் இந்தச் சோகம்,
•══•என்–ஆயுளையே விழுங்கித் திரிகின்றது!

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Mar-13, 2:56 pm)
பார்வை : 443

மேலே