அழுக்கில்லா அன்பு !

சுண்ணாம்பையும்
இடித்து வைத்த
வெற்றிலை பாக்கையும்
கலந்து கலந்து
காவியேறிய
சுருக்கம் நிறைந்த
விரல்களின் வருடலில்
என் தேகத்தின்
அலுப்பு அழியும்

பொக்கை வாய் தள்ளும்
குழம்பிய வார்த்தைகளை
கூர்தீட்டிக் கேட்டுப்
பழங்கதையின் பொருளுணர்ந்து
மனம் இளைப்பாறும்

எலும்பு குத்தும்
மடியில் படுத்து
சுகப்படுவேன்

பொங்கிய
பூனைக் கண் பார்வையின்
பாசச் சுடரில் அகப்படுவேன்

என்னைப் பார்த்ததும்
சிரிப்பதன் அர்த்தம்
'முதுகை சொரிந்து விடு'
என்பதுதான்

நகரத்து நெரிசலில்
நசுங்கி
பூவாய் வாடாமலும்
நாராய் கிழியாமலும்.,

வாசல் பார்த்து...
தெருவைப்பார்த்து...
நலமாய்
நான் திரும்பிவர
தவித்திருக்கும்

என் நோய்
தன் நோயாய் கருதும்
தன் துயரை
தனக்குள்ளே வைக்கும்

என் பெயரை உச்சரிக்கவே
உயிர் வாழும்

என் பாட்டிக்கு
மரணம் வந்திடுமோ ?

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (18-Mar-13, 4:40 pm)
பார்வை : 170

மேலே