வாழ்வது அல்ல..வாழ்க்கை.....(அகன் )
போராளிக்கு
எந்தத்திசையும்
உதயம்தான்...!
எந்தப் பாதையும்
விடுதலை நோக்கித்தான்...!
எந்தக் கருவியும்
அடிமைத்தளை உடைக்கத்தான்!
ஆதிக்க மாளிகைகளின்
வண்ணப் பூச்சு
போராளிகளின்
உதிரச் சொட்டுக்களால்தான்
அடக்குமுறை ஆயுதமெலாம்
போராளிகளின்
நரம்பு நாண்களால் தான்.....
அன்றியும்
ஒரு நொடியில் ஒரு வீச்சில்
ஒரு முறையில் ஒரு திசையில்
உதடுகள் உலகம் முழுதும்
ஒன்றுகுவிந்தால்
வெளிப்படும் வீச்சில்
வெந்து சாம்பலாகும்
ஆதிக்கச் சக்திகள்...
உதடுகள்
உலகில் பஞ்சமில்லை...
அன்றியும்
கிழவர்கள் முடியாதென்றார்கள்
உதடுகளில் வலிமை இல்லை
என்பதால்...!
வாலிபர்கள்
இயலாதென்றனர்
காதலிகளுக்குக்
காமக் காரியங்களின்
செய்ய
குத்தகைக்கு விட்டாயிற்று
என்பதால்...
மற்றவர்கள் உதடுகள்
அவர் இவர் பற்றிய
அக்கப் போர் உரைகளுக்கு
ஆயுட்கால சாசனம்
செய்தாகிவிட்ட படியால்.....
..
அன்றியும்,
கரு சுமக்கும்
கருவறைகளில் இருந்து
புதிய அசைவு
புதிய ஓசை...
கருக்களின் உதடுகள்
தருகின்றன குவிப்புகள்!
வெளிப்படும் விசைக்காக
கருக்களின் உதடுகளின்
ஒருமித்து குவிக்கின்றன
உலகமெங்கும்
பிறக்கும் இனி அவை
விடுதலைக்கான
உதடுகுவிப்போடு...
எவரும்
கூற வேண்டாம்
உதடுகள் அழகில்லை
அவைகளுக்கு என்று!
அழகான அங்கங்களோடு
வாழ்வது அழகல்ல...
அளவற்ற
விடுதலையோடு இருத்தல்
என்பதுதான்
வாழ்வு!