இது பொருளாதாரக் கொள்கை .............!
எத்தனை எத்தனையோ
கனவுகள் போகும் வழியெல்லாம்
உதயமாவதும் - தன்
கதிர்களைப் பரப்பி பிரகாசிப்பதும்
என்மன வானில் இயல்பு ! - பின்
ஏக்கங்கள் எட்டி உதைக்க
பொருளாதாரம் தட்டிப் பறிக்க
அஸ்தமனமாகி இருளினை
இழுத்துப் போர்த்திக் கொள்வதோ
அன்றாட நிகழ்வு !
வயதுகள் என்னுடலை
வளர்த்தாலும்
ஆசையொன்று வந்தால் ,
நான் மட்டுமல்ல - மனமுள்ள
எல்லோரும் குழந்தைகளே !
அடம்பிடித்து
பெறவேண்டுமென்ற கொள்கை ,
வளர்சிதை மாற்றமுடன்
தொடர்வதை உணராதோர்
மனிதனின்று பிறந்த மந்திகளே !
எனினும்
வீங்குமெனது அச்சூழல்
வலிகளைத் தராது - மாறாக
மீண்டுமொரு தினம் திமிராக
கையிருப்பில் நிறைவுடன்
வருவோமென்ற லட்சியமே தரும் !
இதோ இப்போதே
நடக்கத் தொடங்கிவிட்டேன்
முன்னேறியபடி !
பின்வரும் நாட்கள் என்னை
சாதித்தவளாகவே அறிமுகப்படுத்தும் !
எனது வழியில்
மெல்ல ஊர்ந்து கொண்டிருப்பார்கள் ,
தோற்றவர்களும்
விரக்தியை விரட்டிக் கொண்டு
காலத்தை வீணடிப்பவர்களும்......!
வரட்டும் மெதுவாகவே
மிக வருத்தம் தான் ,
நம்பிக்கை என்ற ஊட்டச்சத்தில்
குறைபாடுடையவர்களாயிற்றே ;
திரும்பிய என் கவனமும் திரும்பியது....!