இறைவன் இருக்கானா??

வருமானவரி சோதனை
என்னும் புயல் வந்தால்
இங்கு அநேகமான
ஆலமரங்களின் ஆணிவேர்கள்
அறுபடக்கூடும்
ஆனால் அதை ரசிக்கும்
நாணல்கள் நாங்கள்…..
-------------------------------------------
காற்றுமண்டலம்
எங்களுக்காய்
ஒதுக்கிய காற்றை
இங்கு சில பலூன்களும்
எடுத்துக்கொள்கின்றன…
------------------------------------------------
இசை குறித்த
எங்களின் அறிவு
குறைவுதான்
ஆனால்
முகாரி ராகம்
மட்டும் முழுமையாய்
பரிச்சயம்…..
--------------------------------------
நாங்கள் யாருக்கும்
பயப்படுவதில்லை
முகமூடி
கொள்கையர்கள் உள்பட
அனைவருக்கும்
பயன்படுகிறோம்
அரசியல்வாதிகளுக்கு கூட…
------------------------------------------------
மாட மாளிகைகளின்
நிழல்களே எங்கள்
மாளிகைகள் …
------------------------------------------
அரைகுறை ஆடைகள்
அணிதல்
நாகரீகம்மெனில்
நாங்களே அதிக
நாகரீகமாணவர்கள்.
-------------------------------------------
தங்கவிலையொன்றும்
எங்களுக்கு
வலியில்லை
இங்கு அரைகிலோ
அரிசிக்கே
வழியில்லை
-----------------------------------------
பணக்கார வீடுகளில்
குழந்தைகள்
விளையாட்டாய் நாய்களிடம்
சண்டையிடுவதுண்டு…….
ஆனால் எங்கள் குழந்தைகள்
உணவுக்காக நாய்களிடம்
போரிடுவதும் அவ்வப்போது
நிகழும்……
---------------------------------------------
எந்தக்கொள்கைக்காக
உண்ணாவிரதம்
இருக்கிறோம்
என்று தெரியவில்லை?
வாரத்தில் மூன்று
நாள்கள் சாப்பிடுவதே
இல்லை…..
--------------------------------------------
படித்து முடித்தாலும்
தெருவிற்கு வருவது
எதார்த்தம் என்பதாலோ?
எங்கள் மழலைகள்
பள்ளிகூடம் என்ற
சொல்லை மட்டும்
மறந்து விடுகிறார்கள்…..
-------------------------------------------
பத்துக்குப் பத்து
படுக்கை அறையில்
எங்களை அடைத்துக்கொள்ள
விருப்பமில்லை
எங்களின் படுக்கை அறை
விசாலமானது……
-------------------------------------
நிதிநிலை அறிக்கை
குறித்த அச்சம்
எங்களுக்கில்லை
எங்களிடம்தான்
நிதியே இல்லையே…….
---------------------------------------
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணமுடியும்
என்றால்
இறைவன் என்று
ஒருவன் இல்லையா?