மொட்டுக்களின் குமுறல்-கே.எஸ்.கலை

எங்களுக்குத் தெரியாது
நாங்கள் எந்த மரத்தின்
வித்துக்கள் என்று....

விதி வரைந்த
கிறுக்குச் சித்திரமாய்
குறுக்குச் சந்துக்களில்
நொறுக்கப் பட்ட உரிமைகளுடன் -
வாழ்கையைப் பொறுக்கித் திரியும்
குழந்தைத் தொழிலாளிகள் !

வித்துக்களிலேயே
காய் பறிக்க வித்தை கற்ற
வித்துவான்களின் சொத்து வளர்க்க -
நெஞ்சுள்ளும், தலை மேலும்
சுமை தூக்கித் தள்ளாடும்
கொத்தடிமைக் கூட்டம் !

ஒருவேளைச் சோற்றில்
உண்மையான நிம்மதி உண்டென்று
உறுதியாக நம்பிக் கொண்டு
அந்த - ஒருவேளைச் சோற்றுக்காய்
போராடும் போராளிகள் !

எங்கள் வயதைப் போல,
முதலாளியின் மனதைப் போல
கூலியும் சிறிதாய்த் தான் இருக்கிறது.
தட்டிக் கேட்கவோ, கத்திக் கேட்கவோ
நினைக்க மாட்டோம்....
திட்டும் குட்டும் தினசரி தந்த
திருத்தமான, வருத்தமான கல்வி அது !

வயிற்றோடு மட்டுமே
வரையறுக்கப் பட்ட எங்கள் கனவுகள்
தப்பித் தவறிக் கூட வரம்பு மீறி
தடுமாறியதில்லை !

எங்கள் வீட்டிற்கு
வாடகை இல்லை
கட்டணங்கள் இல்லை
உண்டு என்று எதுவும் இல்லை
கட்டி இருக்கும் -
துண்டு துணியைத் தவிர !

உயரப் பறக்கும்
கட்சிக் கொடிகளும்
தேசியக் கொடிகளும்
எங்களுக்கு கிடைத்தால்
மாற்றாடையாகி
மானம் காக்க உதவும் !

விதி வரைந்த வாழ்க்கை
எங்களின்
வீதியோர வாழ்க்கை !
ஆனாலும் பயம் தான்
நாளைக்கு...
எங்கள் வதிவிடங்களுக்கும்
அரசாங்க திட்டங்கள்
கொண்டுவரலாம் புதிய
வரி வசூலிப்புச் சட்டங்கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (19-Apr-13, 8:28 pm)
பார்வை : 283

மேலே