கடவுளின் நியூட்டன் விதி

நரக வாழ்க்கையில் தெய்வங்கள்
உங்கள் நிழலோடு
நடமாடுகின்றன!

சாக்கடை
வீதிகளையும்
சகித்துக்கொண்டு தான்
நீங்கள் இழுத்துச்
செல்லும்
தேர்ப் பவனியில்
மூக்கைப்பிடித்துக்
கொண்டு
உங்களுடன்
வருகின்றன!

வாகனப்புகையினை
வழிமறிக்க
முடியாமல் தான்
தூணிலும்
துரும்பிலும்
செத்துக் கிடக்கின்றன!

உங்களின்
வறுமைக்கோட்டை
அழிக்க முடியாமல்
தான்
அவையும்
தேரில் வருவதுபோல்
பிச்சையெடுத்துக்
கொள்கின்றன!

அர்ச்சனைப் பூக்கள்
யாவுமே
அமைதி ஊர்வலம்
போனதற்க்கான
அடையாளங்களை
அழித்து விடுகின்றன
உங்களின்
நாகரீக வாடைகள்!

பாவம்! உங்கள்
கடவுள்
உங்கள் ஊரை
விட்டு
ஓடியது தெரியாமல்
அய்யரையும்
பூசாரியையும்
நம்பியே
அறிவியலையும்
படிக்கிறீர்!

பாவம் அறிவியல்!
எலுமிச்சை பழத்தில்
இருக்கும்
காளிக்கு
நியூட்டன் விதி
தெரியாது
என்பது
தெரியாமல் போனது....

எழுதியவர் : ருத்ரா (24-Apr-13, 8:56 pm)
பார்வை : 195

மேலே