குழந்தையாவேனோ!

மறுபடி நானும் இங்கே மண்ணில்
பிறந்திட வேண்டும்----தாயின்
மடியில் புரண்டு கிடந்து இனிதே
மகிழ்ந்திட வேண்டும்
கொஞ்சுந் தாயின் கைகளில்தானே
துஞ்சிட வேண்டும்----அவள்
நெஞ்சிலணைந்து உலகினை நானே
மறந்திட வேண்டும்.
தமிழை மீண்டுந் தாயும் அவளே
சொல்லிட வேண்டும்-----எனது
மழலை கேட்டு இன்பம் அவளே
பெற்றிட வேண்டும்.
தத்தித்தவழ்ந்து பிடிக்க நடந்து
கற்றிட வேண்டும்----முயன்று
பொத்தென வீழ்ந்து தோற்று
அழுதிட வேண்டும்.
நிலவில்சோறு அன்னை அவளே
ஊட்டிட வேண்டும்----தோளில்
நித்திரை காட்டிப் பாடி அவளே
தாலாட்ட வேண்டும்.
தத்தித் தவழ்ந்து சிரிக்குமழகை
தந்திட வேண்டும்------தாயின்
முந்தானை யொளிந்து ஆடி
களித்திட வேண்டும்..
பொய்யில் பழகும் மனிதரை நானும்
மறந்திட வேண்டும்----அந்த
மெய்யிலன்புத் தாயின் நிழலில்
வாழ்ந்திட வேண்டும்.
குழந்தை நானும் ஆகிட இறைவன்
வரந்தர வேண்டும்----அவன்
திருவடிகலந்த தாயை மீண்டும்
அருளிடவேண்டும்.
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.