மனம் திறக்கிறேன் வேர்கள் விழுதுகள்

மனம் திறக்கிறேன் (வேர்கள் விழுதுகள்)

ஆறுமுகம் காலையிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டான்

சனிக்கெழமை அதுவுமா கையில வேறே காசு இல்ல கம்பெனி யில முன்பணம் கேக்கவும் தேதி 25 க்கு மேலே ஆச்சு மீனாட்சி ஒரே கத்தல் அவளோட நண்பர்களோட கோவைக் கொண்டாட்டம் ல கெட் டூ கேதர் க்கு வரணும்னு செலவு அத்தனையையும் நம்ம காதல் சார்பா நீங்கதான் செய்யணும்னு சொல்லிட்டா வேறே

ஆறுமுகம்

டெக்ஸ்மோ இண்டுஸ்ட்ரீஸ் இல் ஃபோர்மேன் ஆக பணியில் சேர்ந்து 10 வருடம் நிரந்தர பணியாளன் மாதம் 14000 ரூபாய் சம்பளத்தில் வேலை ,,

ரொம்ப யோசிக்க ஆரம்பிச்ச நேரம் ஆறுமுகத்தோட அம்மா பக்கத்துல வந்தவங்க ஆறுமுகோ வர்ற ஒண்ணாந்தேதி அப்பாவுக்கு அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில கண் ஆபரேஷன் பண்ணலாம்னு போன மாசமே டாக்டர் சொன்னதா நா உன்கிட்ட சொல்லிருந்தேன் பணம் ரெடி பண்ணியா தம்பி என்று கேட்க ,,,

அட என்னம்மா இப்போ என்ன அவசரம் அத அடுத்தமாசம் வச்சுக்கலாம் மா நானே வண்டிக்கு பெட்ரோல் போட வக்கில்லாமே இருக்கேன் பண்ணலாம் அடுத்த மாசம் பார்த்துக்கலாம் இப்போ இவரு எங்கே போகப்போறவரு கொஞ்சம் தனியா விடுங்கம்மா என்ன ,,,,நா வேறே யோசனையில இருக்கேன்னு சொன்னவன் சலித்தவனாய் அங்கிருந்து சென்றான்

இரவு பகல் பார்க்காமல்
இருவரும் பேசித்தீர்த்த
கைப்பேசிக் கணக்குகளை மறந்தானா ,,,,

இல்லை அவளுக்காய்
அவளின் கைப்பேசிக்கு இடப்பட்ட
கணிசத்தொகை ரீசார்ஜ்
கார்டுகளின் எண்ணிக்கையை மறந்தானா ,,,

பல நேரம் அவளின்
அலைப்பேசி இணைப்பு
எத்தனை முறை அழைப்பு
விடுத்தும்இணைப்பு
பிஸியாக இருந்ததை
ஆதங்கத்துடன் அவனுள்
நொந்துக்கொண்டதை மறந்தானா

இல்லை சிற்றுண்டி முதல் தொடங்கி
சினிமா தியேட்டர் வரை
அவளோடு சுற்றித் திரிந்த நாட்களில்

இவனின் இருச்சக்கர வாகனம் வரைந்த
சாலைக் கோலங்களைத்தான் மறந்தானா,,,,

இல்லை இதற்கெல்லாம்
பாக்கெட் பர்ஸ் காலியாகியும்
கடனாளியாகி ஓடி ஒளிந்ததைத்தான் மறந்தானா,,,,,,,

இன்று இவனின்
அன்னை தந்தையின்
பேச்சை நினைவில் வைப்பதற்கு

மீனாக்ஷி யாரு எப்படி இவனோட லைஃப் ல வந்தாங்கன்னு பாக்கறிங்களா மக்களே அடகாதலுன்னு வந்தா நம்ம பசங்கதான் கடனுக்காச்சும் பைக்க வாங்கி ரோட்டோர பொம்மைக்கடை வெச்சிருக்கிற நண்பன் ஃபேன்சி ஸ்டோர் ல கடலைய போட்டாச்சும் அன்னைய இரவலுக்கொரு கண்ணாடிய வாங்கி மாட்டிற மாட்டாயிங்களா

மீனாக்ஷி

மாடர்ன் சுடிதாரில்
மனதை அள்ளிவிடும்
மஞ்சள்நிற மல்கோவாமாம்பழம்

காண்பவர் கண்களை
கரென்ட் இல்லாமலேயே
கவர்ந்திழுக்கும் பார்வைபொறியின்
நடமாடும் தானியங்கி இயந்திரம்

இலேசாக திரும்பிப் பார்த்துவிட்டாலே
நெடுஞ்சாலை ஸ்தம்பித்துவிடும் அளவிற்கு
ஓடும் வாகனங்களும் ஒருநிலையிழந்து
நெரிசலைக்கண்டுவிடாதா

ஓடாத என்ஜினும்
அவள் கால்படுந்தருணத்தில்
புத்துயிர்ப்பெற்று
புதுக்கிளர்ச்சியில் ஒட்டமெடுத்துவிடாதா

ஊருக்கே இல்லையடி மின்சாரம்
உனக்குமட்டும் எப்படியடிசமாச்சாரம்

கல்லூரி கேன்டினும்
காலியாக காணப்படுகிறதே
உன் நிழல்படாத உன் விடுமுறை நாட்களில்

சாலையோரப்பூங்காவும்
சாபமிட்டு கோபங்கொண்டுவிடாதா
யாரவள் நடக்கின்றசாமந்தி
உதிராமல் கடக்கிறாளென்று,,,

நீதிமன்றவளாகமே
வழக்காடமறந்துவிடுமடி
வக்கீல் குமாஸ்த்தாவின் குலமகள்
இவளா என்று அறிந்துவிடும் அந்தநொடிமுதல்

இனியும்பொறுக்கமாட்டேன்
கண்ணெடுத்துக்களையெடுக்கும்
போர்க்களந்தான் நீ படித்தவித்தையென்றால்
பூக்களுக்குநடுவே புற்களாய்ப்பலமுறை பிறக்கிறேனடி

பரிசாக யார் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு இவன் முன்னாலேயே கூறவும் செய்யும் அவளின் மனப்பான்மையை கூட புரியாதவனாய் போட்டியிட்டு செய்கிறான்
இவன் நிலை மறந்தவனாய்

அவளுக்காய் அனைத்தும் செய்தான் எங்கு அவள் இவனை விட்டு விலகிவிடுவாளோ என்று பயந்தே செய்தான்

கையிலிட்ட மோதிரத்தை கணக்கு செய்தவன் காலையிலேயே படு ஜோராகி படுத்துக்கிடக்கும் தந்தையிடமும் சொல்லாமல்,,,தாயானவள் இருக்கிறாளா என்று கூட பார்க்க நேரமில்லாதவனாய் புறப்பட்டான்
நகை அடகு கடைக்கு,,,

போனவன் இருச்சக்கர வாகன நிறுத்தத்தில் பைக்கை நிருத்தியவனாய் சற்று முன்னும் பின்னுமாக தன்னை அறிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றம் பார்த்தவன் நகையடகுக் கடையை நோக்கி விரைந்தவன் ஒரு இருபதடி இடைவெளியில் திகைத்து நின்றவன்

சற்றும் எதிர்ப்பார்க்காத ஆச்சர்யத்துடன்
இவன் தாய் இவன் செல்லவிருந்த அடகுக் கடையிலிருந்து மேலேறி வருவதைக் கண்டவன் இடது வலது புறமாக பார்த்தான் ஓடி ஒளியவே இடம் பார்த்து,,,,

இடம் கிடைக்கவில்லை உருவத்தை திருப்பிக்கொண்டான்,,,, பாவப்பட்டவள் இவன் தாயோ இவனை கவனியாமல் பேருந்து நிற்கும் இடத்திற்கு வியர்த்து விருவிருக்க விரைந்து நடந்தாள்,,

பின்பு இவன் அதே கடையில் சென்று மோதிரத்தை கழட்டி கொடுத்தவன் அக்கடை உரிமையாளரிடம் கேட்டான் தன் தாயென கூட கூறாதவன் அந்த அம்மா இங்கே ஏன் வந்தாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்று ,,, கடைக்காரன் சொன்னதை கூட காதில் கேட்காதவன் போல் சுதாரித்துக்கொண்டான்

பாவம் பத்தினியவள் கணவனின் பார்வை ஆப்பரேஷனுக்காக அவளின் தாலி சரடை அடகு வைக்க வந்ததை அந்த கடை உரிமையாளர் சொன்னதைக் கூட கவனிக்காதவன் போல் வந்த வேலையை முடித்து வெளியேறி போகலானான் அவளை மகிழ்விக்க,,,,,

சாய் பாபா கோவில் நெடுஞ்சாலை சிக்னலின் சிகப்பு விளக்கை சந்தித்து நின்றவனாய் சற்றே தலைக்கு விடுதலை அளித்தவனாய் தலைக்கவசத்தை விடுவித்தவன் அப்புறத்திலே எதையோ நினைத்து கழுத்தை திருப்பிப்
பார்த்தான் அங்கே பல சிற்றுண்டி வண்டிகளுடன் பரப்பரப்பான மனிதர்களின் கூட்டம் ,,,

சூடான பதார்த்தங்கள் தட்டினூடே ஆவிபறக்க இருப்பதையும் எல்லோரும் சாப்பிடுவதையும் கண்ட இவனுக்கோ நாவில் எச்சில் உறவில்லை என்று சொல்லிவிடத்தான் முடியுமா ஆசை யாரை விட்டது, அப்புறத்திற்கு பைக்கை திருப்பலானான்.

அங்கே இவன் கண்பட இதயத்தை உருக்கும்படியாக நடந்த ஒரு உண்மைக் காட்சி மனதைக்கிள்ளியெறியும் மௌனக்கொடூரம்

அதற்கிடையில் பரிதாபக் கோலத்துடன் ஒரு இளைஞன் கைக்கால் விளங்காத நடுத்தர வயது பெண்மணியை முதுகில் சுமந்தவனாய் அச்சிற்றுண்டிகளில் யாசகம் கேட்கிறான்

ஆனால் யாருமே உதவ முன் வரவில்லை,,, உண்ணும் வாடிக்கையாளர்கள் உண்டு மிச்சமுள்ளதை அவன் கண்பட குப்பைத் தொட்டியில் வீசக் கண்டும் அதை அந்த இளைஞன் எடுக்க முன்வரவில்லை சற்று நேரம் பொறுத்து மறுபடியும் அச்சிற்றுண்டி கடைகளில் அப்பெண்மணியை சுமந்தவனாய் யாசகம் தொடர்ந்தான் ,,,

ஓரிரு கடைக்காரர்கள் கொடுப்பதை போல் செய்கை செய்து சாலையோர வடிகாலில் பொறுக்கிக்கொள் என்று சொல்லியே வீசியும் அந்த இளைஞன் அதை எடுக்கவில்லை

யாருமே கண்டுகொள்ளாத அக்காட்சியை காணப் பொறுக்காதவனாய் அவனுக்கும் அப்பெண்மணிக்கும் பதார்த்தம் வாங்கியவனாய் கொடுத்துவிட்டு கேட்டான் ஆறுமுகம்

ஏம்பா எதுக்குப்பா இப்படி ரோகம் வந்த பொம்பளைய சுமந்துகிட்டு அலையுற அப்படி எங்கேயாச்சும் விட்டுட்டு ஒரு வேலை வெட்டி பார்க்கலாம் ல என்று கேட்டவனுக்குஅந்த இளைஞன் பதிலேதும் கூறாதவனாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆறுமுகம் மனதோடு நினைத்துக் கொண்டான்,,,என்ன ஜென்மங்களோ இதெல்லாம் என்று முணு முணுத்தப்படி இருந்த பொழுதே சாப்பிட்ட அவ்விளைஞன் அவனருகே வந்து
தன் நன்றியை மரியாதை நிமித்தமாக
கூறியவன் அந்த பெண்மணிக்கு பதார்த்ததை ஊட்டி விட சென்றான்

ஆச்சர்யத்தோடு அவன் அப்பெண்மணியிடம் சென்று சேரும் வரை பார்த்துக்கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு அக்கடைக்காரர் பதில் கூறினார்,,,

அந்த இளைஞனின் தாய்தான் அந்த பெண்மணி இவர்கள் சாலைப்பணி செய்வதற்காக வேறு ஊரிலிருந்து இங்கே தஞ்சம் வந்தவர்களில் ஒரு குடும்பம் என்றும்,,,

அவ்விளைஞனோ கல்லூரி முதலாமாண்டுவரை படித்திருப்பதையும் பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் அவன் தந்தை இறந்ததையும் அவனின் தாயார் கைக்கால் இழந்ததையும் கூறிய பின்னர் ஆறுமுகத்திற்கு செருப்பால் ஓங்கி அறைந்ததை போல் இருந்தது

யாசித்த இளைஞனின் முழு விவரம் தெரிந்தவர்களே முன் வந்து உதவி செய்யாத நிலையில் அந்த இளைஞன் தன் தாயிற்காய் படும் பாட்டையும் அந்நிலையிலும் அவன் எல்லோரின் முன்பிலும் கெளரவம் காத்து உண்ட உணவிற்கு நன்றி கூறிய விதமும் ஆறுமுகத்தின் வறட்டு கௌரவத்தை சற்று நன்கு எட்டி மிதித்ததை வலியுடன் உணர்ந்தவனாய் உறைந்து நின்றான்

சமயம் கடந்துக் கொண்டிருப்பதை மறந்தவனாய் அவ்விளைஞனையே இமைக்காமல் பார்த்து நின்ற வேளையில்

இவன் காதலியின் அழைப்புமணி பலமுறை அழைத்தும் அதைக் உதாசீனப்படுத்தியவனாய் பைக் கிக்கரை உதைத்த கணம் முன்னால் கடக்க முயன்ற ஆட்டோ காரனின் " டேய் நாதாரி கண்ணு தெர்ல வூட்டாண்டம் சொல்ட்டு வண்டியா " என்னும் சொல்லிற்கு "இல்லென்னா இப்போதான் கண்ணு செரியா தெரிதுனா" என்றவன் மனதில் அன்னை தந்தையை சுமந்தவனாய் அவனுக்காய் அவர்கள் சும்மந்த பாரங்களை நினைத்து கண்ணீர் சிந்தியவன்

இனி வரும் வாழ்நாளில் அவர்களின் ஆசைகளை இவன் சுமக்கிரவனாய் வீட்டை நோக்கி புதிய வாழ்க்கையின் பாதையில் விரைந்தான்

முற்றும்.......அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (26-Apr-13, 6:28 am)
பார்வை : 261

மேலே