பிடிமானம்

[கவிதை-மறு பதிவு ]

ஒரு மெல்லிய இழையில்
எனது ஊஞ்சலாட்டம்

அது எனக்கு என்றே இழைந்து ஆடியதா
என்பது புரியவில்லை

அதன் ஆதி எங்கு என்பதற்கும்
விடை இல்லை

இழையினை பற்றிய வேகத்தில்
அது என்னையும் சுற்றிக் கொள்கிறது

தாலாட்டிற்கான
தொட்டிலாகவும் மாறுகிறது

காற்றின் தாலாட்டில்
வானின் எல்லைகளை தொடுகிறேன்

எனை ஒரு பந்தைப் போல
தட்டி ரசிக்கிறது காலம்

எனது இருப்பும்., பற்றியதும்
சுமையெனத் தெரியவில்லை இழைக்கு

காரணம்
இழையினும் மென்மையாக
நான் இருந்திருக்கலாம்

அல்லது
இழைக்கு ஏற்ப நானும்
மென்மையாகி இருக்கலாம்

எனது ஆட்டம்
பருவ காலங்களுக்கு ஏற்ப
நிச்சயிக்கப் படுகிறது

இழையின் நீட்சிக்கு ஏற்பவும்
மாறுபடலாகிறது

என் கனவுகளின்., காட்சிகளின்
பார்வைக்கு ஏற்ப

தன்னை மாற்றிக் கொள்கிறது
இழை
தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல்

எனது ஊஞ்சலாட்டம்
இப்போது
பேரண்டத்திலும் விரிவடைகிறது

நிலைப்பை நியாயப் படுத்தும்
நான்
இயங்குகிறேன் தடை அற்றும்

விழுந்திடுவேன்
என்ற பயம் அற்றும் !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (29-Apr-13, 4:46 pm)
பார்வை : 122

மேலே