கருத்தப் பாண்டி (தொடர்)-பகுதி-45

45
@@@@@@@@@@@@@@@@@@

பொம்மலாட்டத்தின் பொம்மைகள் கயிற்றால் கட்டப் பெற்று விரல்களின் அசைவினால் ஆடுவது போல, வாழ்க்கையின் நிகழ்வுகளால் நினைவுகள் ஆட்டம் போடுகின்றன சங்கரலிங்கத்திற்கு. குடைராட்டினத்து சுழலும் குதிரை பொம்மைகளின்மேல் உள்ள மக்கள்போல் நினைவுகள் சங்கரலிங்கத்தின் மேல் தாக்குதலைக் தொடுக்கின்றன.

@@@@@@@@@@@@@@@@@@@

என்ன செய்வது?

நடக்கக்கூடாத்து நடந்துவிட்டது. தடுத்து இருக்கலாம். முடியாமல் போயிற்று.

“எத்தனையோ முறை உன்னில் நான் இருக்கிறேன் எனும்படி “சுருக் சுருக்” என்று வலியாய் வந்து வந்து போனேன். என் வரவுகளை எல்லாம் நீ உணர்ந்தாய். ஆனால் என்னை நீ மதிக்கவில்லை. உதாசீனப்படுத்தினாய். இதோ வந்துவிட்டேன். என்னை வலிய வலிய நீதானே கூப்பிட்டுக் கொண்டாய்? கூப்பிட்டும் வராமல் இருக்க நான் என்ன ஆண்டவனா? எனக்குச் சிறிது இடம் நீ கொடுத்தால் போதாதா? ஆனாலும் ஜனனத்தைப் போலவே நானும் சுகமானவன். சுகம் ஜனனத்திற்கும் பிறகு பேசப்படுகின்றது ­ சுகம் உணரப்படுகிறது. எனவே ஜன்னம் சுகமானதாகிறது. ஆனால் என்னையும் உணரமுடியும். நான் வெளியேறும்போது அடையாளம் காட்டித்தான் வெளியேறுவேன். என் சுகம் உணர்ந்தவன் பேசமுடியாத ஏகாந்த. சுகானுபாவ பேரானந்த நிலைக்குப் போய்விடுவதால் என் சுகம் வெளியே எவர்க்கும் தெரியவில்லை...”

யார் அது பேசுவது... யாரது ஏன் முகம் காட்ட மறுக்கிறாய்... தைரியமிருந்தால் எதிரில் வா...

“எப்படி என்னால் வர முடியும்... நான் தான் உன்னுள் இருக்கிறேனே. என்னை நீ உணரலாம். உன்னுளிருந்து வெளியே போகாத வரைக்கும் நான்தான் உயிர்! மரணம்! அஸ்தமனம்! வாழ்க்கையின் முடிவு நான்! வாழ்க்கையின் அர்த்தம்! வாழ்வின் எதிரொலி எல்லாமே நான்தான்!”

இல்லை இல்லை நான் இன்னும் சாகவில்லை! உயிரோடுதான் இருக்கிறேன். எனக்குத்தான் மூச்சு வந்தும் போய்க்கொண்டும்...
“ஏன் நிறுத்திவிட்டாய். சொல் போய்க்கொண்டும் இருப்பது யார் நான் தான்...”

மானிட்டரில் அவன் இதயத்துடிப்பு வரிகளாய், கோடுகளாய் காதுகளுக்கு பீப் பீப் சத்தமாய்.

“உண்மையில் நல்ல வலுவான ஸ்ட்ரோக்தான் இது. இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரம் போகணும். பிறகுதான் சொல்ல முடியும்” டாக்டர் பேசிப் போனார்.

சங்கரலிங்கம் மரணத்தோடுப் போராடிக்கொண்டு இருந்தான்.

ஒரே நெடி... மருத்துவமனையை பினாயில். டெட்டால் கலந்து கழுவுகிறார்கள் போலும்! தனக்குள் நினைத்துக் கொள்கிறான் சங்கரலிங்கம்.
இந்த மனிதர்கள் தான் எப்படி எல்லாம் புற அழுக்கைக் கழுவிக் கொள்ள முயன்று முயன்று தங்கள் நேரத்தையும், பலத்தையும் செலவிடுகிறார்கள்! ஆனால் அக அழுக்கைப் பற்றி அவர்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் பொலிதிக்ஸ், காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மெண்ட்.
“நரகல் ஒரே நரகல் எங்கும் எதிலும்” ஓங்கி குரலெடுத்துக் கத்தினான் சங்கரலிங்கம். ஆனால் சப்தம் வெளியே வரவில்லை

“எப்படி வரும்... வராது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை உன்னிலேயே இருப்பதா உயிராய், அல்லது மரணமாய் வெளியேறுவதா?

“ஆமாம் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா, செத்துக் கொண்டு இருக்கிறேனா... எனக்கே புரியவில்லை. ஆனாலும் நான் வாழ்வேன். மரணமே நீ தோற்பாய். நான் இப்போது போய்விட்டால் என்மீது உள்ள வதந்தியாலான களங்கத்தை யார் நீக்குவது? என் பொன்னுத்தாய் ­ என் அய்யா கருத்தப்பாண்டி... இல்லை... இல்லை... நான் வாழ்வேன். உன்னால் என்னைவிட்டு. ஏ... உயிரே போக முடியாது. என்னுள் இன்னும் பலம் உள்ளது நான் இருப்பேன்”

சங்கரலிங்கம் இப்போது லேசாய் அசைந்தான்.
மானிட்டரின்கோடுகள் இதயத்துடிப்பின் சீரானத் தன்மையை விளக்கின.

“இல்லை... இதவசச்சு சொல்லிடவோ, ஒரு முடிவிற்கோ வர முடியாது. இருந்தாலும் இவரோடு மனைவி மற்றம் ரொம்ப முக்கியமானவர்களை ஒரு இரண்டு நிமிஷம் பார்க்க அனுமதி கொடு. கண்டிப்பா யாரும் இவர்கூட இருக்கக்கூடாது என்று சொல். இந்த மருந்தை மணிக்கு ஒரு முறை ­ வேண்டாம். அரை மணிக்கு ஒரு முறை டிரிப்ஸ்லே கலந்திடு. நர்ஸ் ஜாக்கிரதை நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்.” என்ற டாக்டர் அருகில் இருந்த சிறிய அறைக்குள் ஏறக்குறைய ஒரு பதினெட்டு மணி நேரத்திற்குப் பின் சென்றார்.

இந்த மருத்துவத் தொழிலும், ஆசிரியர் தொழிலும் தான் எத்தனை எவ்வளவு புனிதம் வாய்ந்தவை. உயிரோடு உணர்வையும், அறிவையும் பகுத்தறிவையும் கொடுக்கும் தொழில். எப்போதும் இந்த இரு தொழிலில் ஈடுபடுவோர் மக்களால் மறக்க முடியாதவர்கள். ஒரு பரம்பரையையே அவர்கள் நினைத்தால் தலைகீழாய் மாற்றிட முடியும்.

ஏதோ ஒரு ரங்கோலி கோலம் போல் ஹோலி பண்டிகையின் போது பீச்சி அடிக்கப்படும், தூவப்பட்டும் போன வண்ணங்களால் முகமூடி அணிந்த மனிதர்கள் ஒரு சிலர் பற்றிய நினைவுகளும் அவர்களோடு தான் பிணைந்திருந்த நிகழ்வுகளும் அவனுக்குள் தலைதூக்குகின்றன! சங்கரலிங்கத்தைத் திக்கு முக்காட வைக்கின்றன.
மெள்ள கண் திறந்து பார்த்தான் சங்கரலிங்கம்.

எதிரில் யார்? நிறைய தெளிவற்ற மனித உடல்கள்? கண்பார்வை மங்கலாய், காது கேட்பதும் சன்னமாய்... சட்டென்று ஒரு சொட்டுக் “கண்ணீர்” துளி தன் கைகள் மீது விழுந்தது. சில்லென்று இருப்பதாக ஒரு பிரமை.

யார் அது...?

பொன்னுத்தாய்.

அழுகிறாள் போலும்... உதடுகள் மட்டும் துடிதுடிக்க.. கண்கள் நீர் சொரிய...
“ஏட்டி நீ அழுவதே ஒரு அழகுத்தேன். எப்படி உன்னால இவ்வளவு அழகாய் அழ முடியுது...”

டேவிட் சார் மனைவி, “வேண்டாம் அழாதே... பொன்னுத்தாயி ­ சங்கர் வருத்தப்படுவாரு”

“வேண்டாம்... வேண்டாம் தடுக்காதீர்கள்... அவுகளுக்கு நான் அழுதாதேன் அழகு என்பாக. அதேன் ரொம்ப ரசிக்கப் பார்ப்பாக... இதுக்கென்னே நான் பலமுறை அழறதுண்டு” என்றாள் பொன்னுத்தாய்.

“தன் வாழ்வில் இரண்டறக் கலந்துப் போய் தன் ஊனிலும், கொள்கைகளிலும், சிந்தனைகளிலும், இணையாக, இதமாக, இழையாக, இன்ப ஊற்றாக இருந்தவளாயிற்றே பொன்னுத்தாய்... நான் தான் அவளுக்கென்று ஒன்றுமே செய்யவில்லை.
ஒரு வீடு கூட... சங்கரலிங்கம் மீண்டும் கண் மூடினான்.

“பார் நீ என்னை எதிர்த்து நிற்க ­ வாழ வேண்டுமென்றால் உன்னுள் கவலை கூடாது. ஏக்கம் கூடாது. கோபம் கூடாது, ஆவேசம் கூடாது. முடியாது உன்னால் என்று சொல்... இதோ நான் வெளியேறுகிறேன்”

“இல்லை... இல்லை உன்னால் முடியாது... நீ வெளியேற முடியாது. நான் விடமாட்டேன்... இனிமேல் உன் ஆட்டம் என்னுடனே... நான் இருப்பேன். என் இருத்தல் வலிமையானது.

சங்கரலிங்கம் மீண்டும் கண் திறந்தான்.

பொம்மலாட்டத்தின் பொம்மைகள் கயிற்றால் கட்டப் பெற்று விரல்களின் அசைவினால் ஆடுவது போல, வாழ்க்கையின் நிகழ்வுகளால் நினைவுகள் ஆட்டம் போடுகின்றன சங்கரலிங்கத்திற்கு. குடைராட்டினத்து சுழலும் குதிரை பொம்மைகளின்மேல் உள்ள மக்கள்போல் நினைவுகள் சங்கரலிங்கத்தின் மேல் தாக்குதலைக் தொடுக்கின்றன.

டேவிட் சாரும், பொன்னுத்யும், டேவிட்சார் மனைவியும் பேசிக்கொண்டு இருக்கின்றர்.
“நர்ஸிங்ஹோம் பில் கொஞ்சம் பே பண்ணிடுங்க... மிச்சத்தை அப்புறமா கணக்குப் பார்த்துக்கலாம்” என்ற நர்ஸிடம் டேவிட்சார் தான் ஒரு ஐம்பது ரூபாயோ நூறு ரூபாய் கட்டோ கொடுக்கிறார்.
ஏது இவ்வளவு பணம் இவர்களிடம் திடீரென்று?
சத்தியமாய் பொன்னுத்தாயிடம் ஒண்ணும் இருக்காது.

தியாகய்யாவிடம் இருக்கலாம். ஆனாலும் கொஞ்சம்தான் இருக்கும். இப்போதுதானே பெண்களின் திருமணங்களை முடித்தார்.!

டேவிட் சாரின் மனைவியின் கைகளைப் பார்த்தான் சங்கரலிங்கம், ஓ... வளையல்களின் சஸ்பெண்ட் ஆர்டறா... அதான்” சிரிக்க முயன்றான்!
முடியவில்லை.

“சிரி... சிரித்தால் போதும். புன்னகை ஒன்று போதும். நான் போய் விடுவேன். என்னை விரட்டிட போதுமானவை ஈரம், சிரிப்பு இரண்டும் எனக்கு எதிரிகள்”

“அப்படி என்றால் நான் சிரிப்பேன். நன்கு சிரிப்பேன். வலு கொண்டு சிரிப்பேன்.”

புன்னகைப் பூத்தான் சங்கரலிங்கம்

இப்போது நன்கு கண் திறந்து பார்த்தான்.

“ஏ... என்ன ஆச்சு... என் பயலுக்கு சங்கரலிங்கம்... சங்கரலிங்கம்” என்று அரற்றியவாறு ஓடிவந்தார் கருத்தப்பாண்டி.

வெளியில் இருந்த நர்ஸ் சொன்னாள்,

“பெரியவரே... உள்ளுக்குப் போய் பார்க்கலாம். ஆனா கத்தக்கூடாது அழக்கூடாது. மீறினா உள்ளே இருக்குறவங்க... உயிருக்கே ஆபத்து வந்திடும்.” என்றார்.

வாயில் துண்டை அழுத்திப் பிடித்தவாறு கருத்தப்பாண்டி சங்கரலிங்கத்தின் அறைக்கதவைத் திறந்து வந்தார். அருகில் நின்றார்.

சங்கரலிங்கம் விழிகளால் பேசினான்!

இப்போது விழிகள் நன்கு ஒளி வீசின!

உதடுகள் அசைந்தன!

தலையை அப்படியும் இப்படியும் அசைத்தான்!

மிகவும் சிரமப்பட்டு “சா...மி...” என்று பேசினான்!
கருத்தப்பாண்டிக்கு காதுகளில் விழவில்லை.
நர்ஸ் சங்கரலிங்கத்தின் உதடுகளில் காது வைத்தும் உற்று நோக்கி உதடுகளின் அசைவுகளை வைத்தும், “சாமி என்று சொல்கிறார்” என்றாள்.

“சாமி... அம்புட்டுக்கிட்டான் சங்கரலிங்கம்... எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான். போலீஸ்ல இருக்கான். சித்த பொறுத்து தியாகய்யா வருவான் அவன்தேன் எல்லாம் செய்ஞ்சான். நீ கவலைப்படாதலே... நான் இருக்கேன்... நான் இருக்கேன்” என்றவர் அதுக்கு மேலே தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியாதவராய் வெளியே வந்து மாணிக்கம் இறந்தபின், சிறையில் சில நாளின் வாதைகளுக்குப் பின், ரொம்ப நாளைக்குப்பின் இன்றுதான் அழுதார்.

இப்போது சங்கரலிங்கத்திற்கு நிம்மதி.

இனி சட்டப்பூர்வமாக தன்மீது உள்ள களங்கம் நீக்கப்படும். தொழிலாளிகள் பேசுவார்கள்.
உண்மையை உணர்வார்கள். வதந்திகளை நம்பியவர்களுக்கு சங்கரலிங்கம் நேர்மையானவன், சுத்தமானவன் என அறிவிக்கப்படும்.
நம்பிக்கையில் அவன் மனம் சந்தோஷப்பட்டது.

இதோ தியாகராஜனும், ரத்தினமும் உள்ளே வருகிறார்கள்.

தியாகய்யாகண்களில் கண்ணீர் வழிந்தது.
சங்கரலிங்கம் நெற்றியில் விபூதி பூரினார். அவருக்கு ஒரு நம்பிக்கை

தியாகய்யா தனக்குள் நினைத்துக் கொண்டார்.
“தான் சங்கரலிங்கத்தை வளர்த்த விதம் தான் தவறா? மத்தவங்களைப் பற்றி இவன் கவலைப்பட்டதாகவே தெரியலையே. தன் வீடு, தன் குடும்பம், தன் ஊர், தன் நாடு ­ இப்படி இந்த வரிசையின் பிடிக்குள்ளே இந்தப் பிரபஞ்சமே இருக்கணும்ங்கிற இயற்கையின் விதியை மீறினா இப்படித்தானா? வேலை மீதேநாட்டமும், ஆர்வமும் முழுமையா இருந்துவிட்டால் இப்படித்தானா? எப்பப் பார்த்தாலும் தன்னைப் பற்றியும் தன் நேர்மைப் பற்றியும் தன் நேர்மைப் பற்றியும், தன் வேலைப் பற்றியும் ஒரே நோக்கமா இருக்குற இவனை பிறர் சுயநலக்காரன் என்றோ அல்லது பொதுநலக்காரன் என்றோ நினைப்பார்கள்? புரியவில்லை. இவனையும் யாரும் முழுமையா புரிந்துக்க விடவில்லையே! பேரு புகழுக்கு ஆசைப்பட்டு வேலை பார்த்தவன் அப்படின்னு பார்த்தாலும் பல இடத்லே பலபேர்கிட்ட நேரிடையான கருத்து மோதல் கொண்டு இருக்கிறான்” அடக்க முடியாமல்6 இப்போது வாய்விட்டு கதறினார், “ரத்தினம் இங்கப் பாரு இவனை, “எனக்கென்ன என் கடன் பணி செய்து பிணியில் படுத்து மற்றவர்களின் மனசில் வலி உண்டாக்கி என்ற சித்தாந்தத்திலே கிடக்குறான். எனக்கு இவன் கையால கொள்ளியா இல்லே...” தேம்பியவரை டாக்டர் வந்து வெளியே அனுப்பினார்.

விடிந்தது. எப்போது விடியும் என எல்லோரும் தவங்கிடந்தனர்.

மானிட்டர் சீராக இதயத்துடிப்பு இருப்பதைக் காட்டியது

செய்தி கேள்விப்பட்டு முத்துசாமியும், சேர்மனும் வந்தார்கள்

சங்கரலிங்கத்தைப் பார்த்தார்கள்

“சங்கர் டோண்ட் ஒர்ரி... யூ வில் பீ ஆல்ரைட், நான்... பாரின்லே இருந்து மருந்தெல்லாம் வரவழைக்க ஏற்பாடு செய்து விட்டேன். பீ போல்டு... உனக்கு ஒண்ணும் ஆகாது” என்றவர் சங்கரலிங்கம் கையைப் பிடித்து விட்டு முத்துசாமியோடு வெளியே வந்தார்.ங கருத்தப் பாண்டியை அணைத்துக் கொண்டவர் சொன்ன உறவுமுறை விளக்கம் புளங்காகிதம் அடையவைத்தது கருத்தப்பாண்டிக்கு.

“பாண்டித்துரைத் தேவர் மவனா...”

“வதந்திகளால் ஏற்பட்ட மனச்சிதறல்களாலும், தன்னைப் போல் பிறரும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமேப் போகும்போது உண்டாகும் நிராசையும், தான் சங்கரைப் படுக்க வைத்துவிட்டது. இனி அவர் உயிருக்கு ஒண்ணும் பயமில்லை. ஆனாலும் பரிபூரண ஓய்வு தேவை.” டாக்டர் சொன்னார்.

மிகுந்த கலக்கத்தோடு கண்காணிப்பாளர் வந்தார்.

உண்மையில் சங்கரலிங்கத்தின் நெருக்கமாய் இருந்தவர்கள் வரிசையில் பொன்னுத்தாய்க்கு அடுத்தது காலத்தின் அளவில் சிலர்தான் இடம் பெறுவார். எப்போதும் அலுவலகமும், கண்காணிப்பாளரும், சங்கரலிங்கமும் ஒன்றாய்... அலுவலகச் சுவர்களும், தளிர்களும், கூரையும் இவர்களோடு எப்படி சிநேகமாய் இருந்தார்கள்!

கண்காணிப்பாளர் கண்கள் பனிக்க கருத்தப்பாண்டியிடம் சொன்னார்,

“வாழ்க்கையையே ஓய்வு பெற இம்மாதிரி படுத்தால்தான் உண்டு போலும். ஆனால் தன் உடல் உபாதையை யாரிடமாவது தொடக்க காலத்தில் சொல்லி இருக்கலாம்.” உள்ளே சென்று சங்கரலிங்கம் அருகில் அமர்ந்துவெகுநேரம் இருந்தார்.

மறுநாள் காலை!

சங்கரலிங்கம் கண்காணிப்பாளரோடு சிரித்துக் கொண்டு இருந்தான். பேசவிடவில்லை டாக்டர்.

தன் முழு நாளையும் கண்காணிப்பாளர் அவனோடு தான் இரண்டு தினங்களாக கழித்து வருகிறார்.

பொன்னுத்தாய் உள்ளே அமர்ந்திருந்தார்.

அப்போது ஞானசேகரன் “சடக்கென்று” உள்ளே வந்தான்.

ஈரவேட்டி ­ நெற்றி நிறைய விபூதி குங்குமம்.
கையில் சிறு கூடை!

மேலே கொஞ்சம் பூவும், உடைத்த தேங்காமூடிகளும்!

“சங்கர்... கவலைப்படாதேள். நேரே அம்பாள் சன்னதியில் இருந்து உங்களுக்காக வேண்டிண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறேன். பிரசாதம் வாங்கிக்கோங்கோ” என்றபடி கூடையை நீட்டினான்!

ஞானசேகரனைப் பார்த்த மாத்திரத்தில் மானிட்டர் பீப் பீப் சப்தம் கோணலானது! அபரஸ்வரம் மீண்டும்! சங்கரலிங்கம் முகத்தில் இம்சை தெரிந்தது.
சங்கரலிங்கம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்!

சூழ்நிலை புரிந்த கண்காணிப்பாளர் “ஞானசேகரன், வாங்க வெளியே போவோம். சங்கர் ஓய்வெடுக்கட்டும்.”

“எடுக்கட்டுமே பேஷா. பிரசாதம் கொடுங்க. பிரசாதம் கூடையில் இருந்து எடுத்தாலே போதும் நல்லாயிடுவார் இப்போ!”

சட்டென்று உள்ளே வந்தார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி.

“வாங்கோ. வாங்கோ சார்... படுக்கையிலே இருக்கும்போதே என்னை பணம் கொண்டு வந்துக் கொடுத்தா, தான் சேர்மன்கிட்டே சொல்லி வெங்கடவரதன் சார் லீவை கான்சல் பண்ணிடமுடியும் என்றார் சங்கரலிங்கம். அதுக்காக பத்தாயிரம் ரூபாய் கேட்டார். அதான், கொண்டு வந்துட்டான். கொடுத்துட்டேன். கையும் களவுமா பிடிச்சாச்சு! பார்த்தியளா இல்லாமப் புகையாது. அள்ளாம குறையாது... முதன்முதலா தன் உடல் நலத்திற்காக லஞ்சம் வாங்குறார் சங்கரலிங்கம்... ரொம்ப பெரிசாக்காதீங்கோ. சேர்மன் இவருக்குச் சொந்தக்கார்ராம். சொன்னார்” என்றான் படபடவென்று ஞானசேகரன்!

“இல்லை சார்... வேணும்னே ஞானசேகரன் திட்டம் போட்டு இப்படி செஞ்சிருக்கான். நாங்க யாரும் எதையும் வாங்கல. இன்னும் கூடை இவன் கையிலேதான். புரிந்ததா இப்போதாவது உங்களுக்கு. இன்னும் கொஞ்ச நேரத்லே சேர்மன் இங்க வருகிறார். அவரிடம் நேர கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார் கண்காணிப்பாளர்.

“உன்னை உன் ஆயுசுப் பூரா மனசிலே வலி உண்டாக்கி” என்று அன்று ஞானசேகரன் சொன்னது இன்று இப்படி...

மீண்டும் சங்கரலிங்கம் முகத்தில் இம்சை தெரிந்தது!

சுடலைமாடன்...
புரிந்ததா
வலி
திட்டம்
வாங்கல பிரசாதம்
ஞானசேகரன்
அட்ஜெஸ்ட்மெண்ட் சாமி
குழி நிரப்பி குற்றாலம் டிஎஸ்பி அய்யங்கார் மாணிக்கம்
கண்காணிப்பாளர்
நிர்வாகக்குழு உறுப்பினர்
நகர் பகுதி
கார்ல்மார்க்ஸ்
சேர்மனிடம்
தாம்புக்கயிதேன்
டிஸ்போஸ்
வெங்கடவரதன்
பொலிதிக்ஸ்
தாஷ்கண்ட்
கண்காணிப்பாளர்
தொழிலாளி
எச்சில் புத்தி
“டா” போட்டு
தண்ணி பாட்டில்
கண்ணீர் கண்காணிப்பாளர்
நிர்வாகக்குழு உறுப்பினர்
நகர்பகுதி
கார்ல்மார்க்ஸ்
சேர்மனிடம்
தாம்புக்கயிறுதேன்
டிஸ்போஸ்
வெங்கடவரதன்
பொலிதிக்ஸ்
தாஷ்கண்ட்
புரிந்ததா வலி
திட்டம்
வாங்கல பிரசாதம்
ஞானசேகரன்
அட்ஜெஸ்ட்மெண்ட்
சாமி
குழி நிரப்பி.........

சங்கரலிங்கம் இப்போழுது உயிரோடு போராட ஆரம்பித்தான். நினைவுகள் சிதற... கனவுக்குள் மூழ்க... மூழ்க...

கண்காணிப்பாளர் டாக்டரைக் கூப்பிட்டார்!

“வாட் ஹேப்பண்டு... நல்லா ரெக்கவர் ஆகி வந்தாரே... இந்த இதயமே இப்படித்தான்... ஓ.கே... நீங்கள் எல்லாம் வெளியே போயிடுங்க” என்றவர் விரைவாக ஊசிப் போட்டார்.

பீப் பீப் ஓசை நன்றாய் இல்லை!

“பார்த்தியா மீண்டும் உனக்குள் என் நண்பர்களை விட்டுவிட்டாய். இப்போ எனக்கு பலம் கூடிப்போச்சு.., கவலை. கோபம், வெறுப்பு, எரிச்சல், பகைமை, இவர்கள் உள்ளே வந்து விட்டார்கள். இதோ நான் வெளியே போகப் போகிறேன்... இல்லை உன்னுடன் இருந்தே கொஞ்ச நாளைக்கு சத்யாகிரகம் செய்யப் போகிறேன். யார் வெல்வது எனப் பார்ப்போம்”

“நான்... தான் வெல்வேன்... நீ வேண்டுமென்றால் பார்... ஆனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். எனக்கு வெளியில் நிறைய வேலை இருக்கிறது. இதுவரை எனக்காக நான் வாழ்ந்தேன். இனி என் குடும்பத்திற்காக. மற்றவர்களுக்காக...”
சங்கரலிங்கம், உயிருடன் போராடிக் கொண்டு சலனமற்றுக் கிடந்தான்.

“என்ன டாக்டர்... என்ன ஆச்சு...” என்றார் நர்ஸ்.

“கோமா”

“நான் சந்தேகப்படறேன். எதுக்கும் அப்சர்வ் பண்ணுவோம். இதோ பார் மானிட்டர் சீராய் வேலை செய்யுது. பல்ஸ் ஓ.கே. மூச்சு விடுதல் ஓ.கே... பார்ப்போம்... வெளியே யார்கிட்டேயும் எதும் சொல்லாதே. யாரையும் உள்ளே விடாதே. நான் இவரோடு சேர்மன் கிட்டே போனில் பேசி அயல்நாட்டின் மருந்துகளை சீக்கிரம் கொண்டு வரச் செய்கிறேன். பீ கேர்புல்!” என்றார் டாக்டர்.

தியாகய்யாவும், கருத்தப்பாண்டியும் அன்றைய தினசரி ஒன்றுடன் உள்ளே வந்தனர்.
“பொன்னுத்தாய் நாம ஜெயிச்சுட்டோம். இங்ஙெனெப் பாரு செய்தியை..

சதி வேலைகளில் ஈடுபட்ட
தொழிற்சங்கத் தலைவர்
சாமி கைது
பல வழக்குகள் இவர் மேல் ஆதாரங்களோடு
பதிவாகியுள்ளன

ஆனால் இன்னொரு செய்தி இருப்பதை பொன்னுத்தாயும் கண்காணிப்பாளரும் சொல்லவில்லை!

வெளியில் வந்த நர்ஸ் “யாருமே இனிமே உள்ளே போகாதீங்க” என்றுச் சொல்லி கண்காணிப்பாளரிடம் மட்டும் விஷயத்தை தனியேக் கூப்பிட்டு சொன்னாள்.

அதிர்ந்து போனார் அவர்.

கோமா!

உயிர் உள்ள பிணம், எத்தனை நாளைக்கு?

இனி அந்த வைக்கோற் போரில் நாய் இருக்காது.
ஆனாலும் மாடுகள் ஏனோ திருட்டுத்தனமாய் வைக்கோல் தின்ன கொஞ்ச நாளைக்கு அஞ்சும்.

நாய் இருந்தச்சுவடு மறைய கொஞ்ச நாளாகும்!
யார்க்கும் தெரியாமல் கண்களில் வழியும் நீரோடு கண்காணிப்பாளர் வெளியே பார்த்தார்.

வெளி விசாலமானதாக இருக்கிறது.

வெளி விஷயமுள்ளதாக இருக்கிறது.

வெளி விலாசத்தோட இருக்கிறது.


கருத்தப் பாண்டி பாகம் ஒன்று நிறைவடைந்தது.

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ)அகன் (30-Apr-13, 8:22 pm)
பார்வை : 104

மேலே