"சிறந்த கவிதைகளின் தொகுப்பு" நாள்-13/05/2013 ***ஆவாரம் பூ***

இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கு வணக்கம்...

சிறந்த கவிதைகளின் தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது...

கவிஞர் பிச்சையா அவர்களின்...

ஜான் பென்னி குக்
JHON PENNY CUICK
(1841-1911)
---------------------------------------------------
வரலாறு அல்ல வாழ்த்துப்பா.
---------------------------------------------------
சாரா- ஜான்பென்னி
தவ மைந்தராம்
ஆங்கில நாட்டில்
பிறந்தவராம் .
அரசு ராணுவப்
பொறியாளராம்.
அன்னவரவராம்
ஜான்பென்னியாம்.
வந்ததும் தமிழகம்
புண்ணியமாம்.
.

பொறியியல் கற்ற
பென்னியவர்
பொதுத் துறை
பொறுப்பு ஏற்றவர்.. .
தென்தமிழ் நாட்டுத்
தேனிவட்டம்
வான்மழை பொய்த்து
வரட்சி கண்டே
வாடிவருந்தி
மனம் நொந்தார்.

மேற்குத்தொடர்சசி
மலையில் தோன்றி
தெற்கில் வீணாயோடி-
அரபியில் கலக்கும்--முல்லைப்
பெரியாற்றை- வடக்கிலோடும்
திசைமாற்றி- வளங்கண்டிடிட
வழிவகுத்து- அணைகட்டித்
தடுக்கும் ஆலோசனையும்-
ஆங்கில அரசின் முன்வைத்தார்.

ஏற்றது வெள்ளையர் அரசன்று
எழுபத்தைந்து இலட்சம் தந்து..
வேலையாராம்பித்த நேரத்தில்
விடாமழையும் பெய்தது.
திட்டந்தீட்டிக் கட்டியதோ!
தேடிச்சென்றது கடலுக்குகே.
கட்டங்கட்டிய காசுக்கு மேலே
காலணாவும் தரவில்லையரசே.

கல்லு முள்ளு
கொல்லுஞ்சிங்கம்
பல்லி பாம்பும்
அங்கிருக்கும்.
வெல்லும் முயற்சி
வேகந்தகர்க்குமோ!
எடுத்த செயலது
வென்றிடவேண்டும்
கெடுப்பதெதுவும்
அகன்றிட வேண்டும்
இருக்குஞ்சொத்தை
விற்றிட வேண்டும்.
முடித்திட இதற்கு
வேறென்ன வேண்டும்!.

எங்கோ பிறந்தார்க்கு
இங்கேன் அக்கறை?
அக்கரைச் சொத்து
இக்கரை. வந்தது
மனித நேயம்
மீண்டது மறுகரை.
அணையும் எழுந்தது
வளமும் தந்தது.
வைகை பெருகி
வளர ஓடியது.
வாழ்கிறது தென்
தமிழ் நாடே இன்று!.

கரிகாலன் கட்டிய
கல்லணை வாழ்வே!
பென்னி கட்டிய
பெரியணை வாழ்வே!
சுண்ணமுங்கல்லும்
கடுக்கா பலமே!
என்னதான் அதிர்ச்சி
எதையுந் தாங்குமே!

அந்நியரொருவர்
ஆன்மாவின் இரக்கம்
இந்தியனுக்கேனோ
இல்லாதொழிந்தது!!
தண்ணீர் வார்த்தவன்
தெய்வமாகினான்.
இன்னுமவன் நாமம்
இட்டே அழைக்கிறோம்!

மணிமண்டபம் எழுப்பிய
தமிழே வாழ்க!
நன்றியை மதித்த
அரசே வாழ்க!
மனிதமென்பது
ஒன்றினமென்றான்.
இனியன் பென்னி
புகழென்றும் வாழ்க!!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா...

**************************************************************************** நிலா சூரியன் அவர்களின்,

!!!=(((கண்ணீரில் தத்தளிக்கும் கரைமீன்கள்)))=!!!

நீலக்கடல் நிறமாறி
குருதியாய் கொந்தளிக்கும்...
எங்கள் கண்ணீரும் செந்நீரும்
உப்புரத்த கடலாகும்...

சோற்றிலே போடும் உப்பு
சிகப்பாக தானிருக்கும் - நீங்கள்
புசிப்பதிலும் ருசிப்பதிலும்
குருதிவாடை குடல் நிரப்பும்...

வஞ்சகனின் வலையறுப்பும்
பிக்குகளின் குலையறுப்பும்
கடல் தீவினிலே
கல்லறை எழுப்பிவிடும்...

1974 னிலே...
அன்னையால் எழுதப்பட்டதே
ஒப்பந்த லீலை
அய்யகோ... அதுதானே
மரண ஓலை....

கடல்பகுதியிலே... தொடர்கதையான...
துடுப்பின் வரலாறு
துடிப்பிழந்து கிடக்கிறதே
துன்பதத்தில் மிதக்கிறதே...

இனி...
கனத்த கதறல்களும்
ஒப்பாரி ஊளைகளும்
செவிட்டில் அரையாமல்
செவிடனுக்கு கேட்காது...

தேசத்தை நம்பி நம்பி
மோசமாகி போயிவிட்டோம் - இனி
வேசத்தை கிழிப்பதற்கு
வேண்டாமோ... வீச்சறுவா...?

பக்கத்து மாநிலத்தில்
படுகொலை நடந்ததென்று
ஆடினதே அரசாங்கம்...!
''நாமென்ன வேறு நாடா...???''

தொடரும் அவலம்
துவண்டால் மரணம்...
துடுப்பேந்தும் கைகளிலே
துப்பாக்கி ஏந்திவிடு
கச்சத்தீவை மீட்காமல்
உயிர்வாழ முடியாது...

கடலை நம்பியே
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
கண்ணீரில் கட்டுமரம்
எத்தனைநாள் ஓட்டுவது...???

துடைக்க கையில்லா
துப்புகெட்ட நாட்டினிலே
கண்களில் ஒளியேந்து
கைகளில் தீயேந்து
கயமையை பொசுக்காமல்
கரையேற முடியாது...!!!

----------------(நிலாசூரியன்).
****************************************************************
அஹமது அலி அவர்களின்,


பொழில் நாட்டு இளவரசி...!!!! (அஹமது அலி)

படையணி புடைசூழும் படுகளம்
பரிவாரம் நிறைசூழும் பட்டயம்
♡ ♧ ✦ தொடுவானம் தொடுமளவு படைஞர்
♡ ♧ ✦ தொடமுடியா கோட்டைக்குள் எம்பிராட்டி!


சிறைபட்ட சிறுமலராய் சீமாட்டி
சிக்கி உழன்றனள் சினவரால்
♡ ♧ ✦ மீளாத் துயர் மீளாது மீன்விழியாள்
♡ ♧ ✦ மீட்க மீளி வரும் திசை நோக்கினள்!


ஓடுமுகில்களை ஓதி அழைத்தாள்
ஓலை அனுப்பிடத் தூது விடுத்தாள்
♡ ♧ ✦ மாலை மங்கிடுமென அச்சம் பெருகியே
♡ ♧ ✦ மலையனின் நினைவில் உச்சம் உருகினாள்!


சூள்மேவி சூல் கலங்கித் துடிக்க
சூம்பித் தேகம் சுக்கெனச் சுருங்க
♡ ♧ ✦ சூழ்செய்ய சுயசிந்தனை மறுத்திட
♡ ♧ ✦ பாழ்வதையில் பால்மனம் வாடினாள்!


பொழில்நாட்டு எழில் இளவரசி
மகிழ்விட்டு வேடவர் கூட்டினிலிங்கே
♡ ♧ ✦ மலையநாட்டு மாமள்ளன் மலையன்
♡ ♧ ✦ இளைய வேந்தன் இதையறிந்தானே!


அக்கணமங்கே ஒற்றன் வாய்மொழியால்
இக்கணமிங்கே சிறையுடைக்க சீறினான்
♡ ♧ ✦ சிக்கனமான நாழிகையில் சீக்கிரமே
♡ ♧ ✦ சிக்கனவாய் மீட்க சூளுரைத்தான்!


சிங்கநாதமிட்டே பெருஞ்சேணை பெருக்கியே
சிங்க திசை நோக்கி சீறிப் பாய்ந்தான்
♡ ♧ ✦ பாய்மாக்களின் பாய்ச்சலில் புழுதி பறக்க
♡ ♧ ✦ பாத்தியப் பாவை மீட்கப் பறந்தான்!


பொட்டல் பெருவெளியில் பெரும்படைகள்
பொருதிப் பெரும்போர் மூர்க்கமாய் மூள
♡ ♧ ✦ பொறியாய் வாளொளி வானில் பறக்க
♡ ♧ ✦ பொடித்தான் எதிரணிப் படைகளை!


கோட்டை தகர்க்க களிறுடன் முன்னேறி
நாட்டைப் பிடித்து நாயகியை விடுவித்தான்
♡ ♧ ✦ வெற்றி வேட்டுகள் ஒலி விண்பிளக்க
♡ ♧ ✦ வெள்ளிப் புன்னகையில் முறுவலித்தான்!

************************************************************************
சரவணா அவர்களின்,


புயலின் மத்தியில் ஒரு பூக்குரல்

கிழிசல்களின்
முன்னோட்டமாய்
தடதடத்துப் பறக்கிறது
எச்சரிக்கைக் கொடிகள்
எண் முத்திரைகளோடு...!

வருடங்களுக்குப் பழகியிருந்தும்
பாய்மரத்து ஓசைகள்
நிறுத்திப் போட்டிருக்கிறது
அன்றையதின
துடுப்பசைவுகளை......!

இம்முறையேனும்
விழுங்கலாமென
தடுப்புச் சுவர் ஏறத் தவறி
வெற்றிலைக் குதப்பல்
கடைவாய் வழிதல்களாய்
புறமுதுகிடுகிறது
நீர்ப் பேரலை....

காற்றுப் பிசாசுகளுக்கு
ஒளித்திசை நீட்டி
குடிசை பிய்க்கச் சொல்லி
சோரம் போயிருக்கிறது
சில்லுப் பெயர்ந்த
கலங்கரை விளக்கம்...

சில்லுப் பெயர்ந்த
சிறுகல் கொட்டகைக்குள்
அன்று அவித்த
சோளச் சிதறல்களோடு
கூவலிட்டுத் துவங்குகிறது
சிறுகுருவிகளின்
வாழ்க்கை....
கரை கடந்ததாய் சமிஞ்சைகள்
சொல்லி...
***************************************************************************

கே.எஸ்.கலை அவர்களின்,

மெல்லத் தமிழ் இனி கொல்லும்-

தமிழுக்கு அமிழ்தென்று பேர் - அந்த
══அமிழ்தத்தை நீ உண்டு வாழ் !
எண்ணற்ற மொழிகண்ட பார் – எம்
══தமிழுக்கு அவையெல்லாம் கீழ் !
உயிருக்கும் ஆகாது நேர் - தமிழை
══உணர்வின்றி ஆக்காதே பாழ் !

இயலுக்கு இருக்கின்ற வேகம் – அந்த
══புயலுக்கும் இருக்காது பாரும் !
குயிலுக்கு இருக்கின்ற குரலும் - இன்
══இசைக்கேட்ட உடனங்கு மிரளும்
வெயிலுக்கு இருக்கின்ற சூடும் – வீரத்
══தமிழ்முன்னே மண்டியிட்டு வீழும் !

நறு மணத்தோடு தமிழ்தோட்டப் பூக்கள்
══விலையில்லா தரத்தோடு துளிர்க்கும் !
அழுக்குண்ணும் குணம் கொண்ட ஈக்கள்
══புனிதத் தமிழ்மீது சிலநேரம் மொய்க்கும் !
மொய்த்தாலும் அவை கொல்லும் பாக்கள்
══சளைக்காமல் மீண்டெழுந்து மெய்க்கும் !

உள்ளத்து உணர்வுகள் எழுத்தாகும் - அந்த
══எழுத்துக்கள் இறவாமல் உலகாளும் !
பள்ளத்து எண்ணங்கள் கொண்டோரின்-கடும்
══விடம் போன்ற சூழ்ச்சிகள் எதிராகும்
வெள்ளத்தில் சிக்குண்ட சருகாக - அவை
══விழி முன்னே மடியுமே விரைவாக !

சிலையாக கலையாக இருந்தால்–தமிழ்
══அழகதனை உவமிப்பேன் மங்கையென்று !
காவியமாய் ஓவியமாய் கண்டால்-அந்த
══குளிர்மையினை வர்ணிப்பேன் கங்கையென்று !
தமிழை, அறிவற்று நெறியற்று கொன்றால்-நான்
══அறுத்தெறிவேன் உந்தன் சங்கைஅன்று !

சங்கத் தமிழ் மூன்றும் சொல்லும்
══எங்கள் மொழி அழகென்று எங்கும் !
தங்கத் தமிழ் அழிக்கத் துள்ளும்
══உங்கள் போர் விரைவில் மங்கும் !
மெல்லத் தமிழ் இனி கொல்லும்
══எங்கள் வீரமே எங்கேயும் ஓங்கும் !


*****************************************************************
நன்றி..
நடுவர் குழு..

எழுதியவர் : (15-May-13, 8:28 pm)
பார்வை : 85

மேலே